Published : 10 Feb 2018 11:35 AM
Last Updated : 10 Feb 2018 11:35 AM
மகத்துவம் நிறைந்தது மாசி மாதம் என்று போற்றுகிறார்கள். மாசி மாதம் புண்ணியம் நிறைந்த மாதமாகச் சொல்லப்படுகிறது. மங்கல வாழ்வு தரும் மாசியின் மகிமைகள் வரிசைகட்டி நிற்கின்றன. பார்ப்போமா?
திருமால், ஸ்ரீமகாவிஷ்ணுவாக திரு அவதாரம் எடுத்தது ஓர் மாசி மகத்திருநாளில் என்கிறது புராணம்.
அதேபோல், சிவபெருமானின் திருவிளையாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். ஏகப்பட்ட திருவிளையாடல்களை சிவனார் நிகழ்த்தியது மாசி மாதத்தில்தான் என்று விவரிக்கிறது திருவிளையாடல் புராணம். ஆகவே மாசி மகத்துவம் என்கிறார்கள் சிவனடியார்கள்.
பெருமாளுக்கும் சிவபெருமானுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த மாதம் என்பது போல், கணபதி பெருமானுக்கும் உகந்தது என்கிறார்கள். முழுமுதற்கடவுளான விநாயகரை, மாசி மாத சங்கடஹர சதுர்த்தியில் விசேஷமாக வழிபடுவதும் பிரார்த்தனை செய்வதும் மிகுந்த பலனைத் தரும். சங்கடங்கள் யாவும் விலகும்; சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்!
மாசி மாதத்தன்று தான் பார்வதிதேவி காளிந்தி நதியில்... தாமரைப் பூவினில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள் என்கிறது புராணம்.
அப்பாவைப் போல, அன்னையைப் போல, அண்ணனைப் போல், மாமாவைப் போல முருகக் கடவுளுக்கும் உகந்தது மாசி மாதம். மாசி மாத பூச நட்சத்திர தினத்தில்தான் முருகப்பெருமான் சுவாமிமலை திருத்தலத்தில், தந்தை சிவபெருமானாருக்கு பிரணவ உபதேசம் செய்து ஞானகுரு எனப் பெயரெடுத்தார்.
மாசி மாதம் மங்கல மாதம் என்றே அழைக்கப்படுகிறது. மாசி மாதம் மந்திர மாதம் என்றும் சொல்வார்கள். எனவே மாசி மாதத்தில் மந்திர உபதேசம் பெறுவது சிறந்தது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இந்தக் காரணங்களால்தான், சிறுவர்களுக்கு... பிரம்மோபதேசம் எனப்படும் உபநயனம் என்கிற பூணூல் கல்யாண வைபவத்தை, மாசி மாதத்தில் பெருமளவில் நடத்துகின்றனர்.
மாசி மக நன்னாளில், தேவியை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுவது இல்லத்தில் சுபிட்சத்தைத் தந்தருளும். சோகத்தையும் துக்கத்தையும் விரட்டியடிக்கும். ஆகவே அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று மக நட்சத்திர நாளில், குங்கும அர்ச்சனை செய்து, வழிபடுங்கள். மாசி மாத சுக்ல பஞ்சமியில் ஸ்ரீசரஸ்வதி தேவியை மலர்களால் அலங்கரித்து வழிபடுங்கள். கல்வியிலும் ஞானத்திலும் குழந்தைகள் சிறந்து விளங்குவார்கள்!
குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில் தான் அவதரித்தார்.
அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம் தான். ஆகவே மாசி மாதத்தின் மக நட்சத்திர நாளில், முடிந்த அளவுக்கு எலுமிச்சை சாதம், தயிர் சாதம் என உணவுப் பொட்டலங்களை வழங்குங்கள்.
பிரம்மஹத்தி போன்ற பெரும் பாவங்களைப் போக்கி பேய்க்கும் நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில் தான் என்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.
உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள் ஆராய்ச்சியாளர்கள் மாசி மக நாளில் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.
அகத்திய மாமுனிவர், சிவ பக்தியில் கடும் தவம் இருந்து இறைவனின் அருள் பெற்றது மாசிமாதத்தில் தான்.
காரடையான் நோன்பும் சாவித்திரி விரதமும் இந்த மாதத்தில் வரும் விசேஷ விரதங்கள். மாசி மக நாளில்தான் காமதகன விழா விமரிசையாக பல ஆலயங்களில் நடைபெறுகிறது.
மாசி மாதத்தில் வீடு குடி போனால் வாடகை வீடாக இருந்தாலும் அந்த வீட்டில் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழலாம் என்பது நம்பிக்கை. எனவே இந்த மாதத்தில் புது வீடு கிரகப்பிரவேசம் நடத்தலாம். வாடகை வீடு மாறுவதற்கும் உகந்த உன்னதமான மாதம்!
மாசி மாதத்தை மாங்கல்ய மாதம் என்று போற்றுகின்றனர். மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜகத்தை ஆள்வர் என்கின்றனர். ‘மாசிக் கயிறு பாசி படியும்’ என்றொரு முதுமொழி உண்டு. இந்த மாதத்தில் பெண்கள் புது மாங்கல்யச் சரடு கட்டிக் கொள்வது சிறப்புக்கு உரியது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!
புனித நீராடுவதற்கு உகந்த மாதங்களில் மாசி மாதமும் ஒன்று. மாசி மக நட்சத்திர நாளில், புனித நீராடினால், தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் விலகிவிடும். நம் முன்னோர் செய்த புண்ணியங்கள், நம்மைத் தேடி வந்துசேரும். புனித நதிகளில், புனித தீர்த்தக் குளங்களில் நீராட இயலாதவர்கள், மாசி மக புராணம் வாசிக்கலாம். காதாரக் கேட்கலாம். இவையும் புண்ணியம் தரவல்லது என்கிறது தர்ம சாஸ்திரம்!
திருநெல்வேலி மற்றும் சுற்றியுள்ளவர்களுக்கு அப்பர்தெப்பம் தெரிந்திருக்கும். மாசி மகத்தன்று நெல்லையப்பர் கோயிலில் உள்ள பொற்றாமரை தீர்த்தக் குளத்தில் திருநாவுக்கரசருக்கு தெப்பத் திருவிழா நடத்துவது வழக்கம். இதை அப்பர் தெப்பம் என்று விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.
மாசி மாதம்... மகத்துவம் நிறைந்த மாதம். மங்கலகரமான மாதம். மந்திர சக்திகள் வியாபித்திருக்கும் மாதம். மகாவிஷ்ணுவுக்கு உரிய மாதம். ஆகவே மாசி மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்து, நீராடி, மகாவிஷ்ணுவுக்கு துளசியால் அர்ச்சனை செய்யுங்கள். துளசி மாலை சார்த்துங்கள். வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களையும் தந்தருள்வார். வைகுண்ட மோட்சம் தந்து திருவடியில் சேர்த்துக் கொள்வார் என்கிறது புராணம்!
மகத்துவம் நிறைந்த மாசி மாதத்தை, சரிவர புரிந்து உணர்ந்து கொண்டாடுங்கள். இறைசக்தியை வழிபடுங்கள். வளம் பெறுவீர்கள். நலம் அடைவீர்கள். இல்லமும் உள்ளமும் ஒளியுடன் திகழ, உன்னதமான வாழ்வு நிச்சயம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT