Published : 08 Feb 2018 01:35 PM
Last Updated : 08 Feb 2018 01:35 PM
இன்றைக்குக் திருத்தலங்கள், வியாபார ஸ்தலங்களாகவும் கடைவீதிகளாகவும் மாறிவிட்டன. கோயிலுக்குச் செல்லும் வழியெல்லாம் கடைகள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. திருச்செந்தூர் மண்டபம் இடிந்து விழுந்ததும், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தீ விபத்து நடைபெற்றதும் திருவாலங்காட்டில் ஸ்தல விருட்சம் தீவிபத்துக்கு உள்ளானதும் என கவனிக்கத்தக்க சோகங்களும் துயரங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், காஞ்சி மகான் என்றும் நடமாடும் தெய்வம் என்று போற்றப்படும் காஞ்சி மகாபெரியவா ஆலயம் குறித்து அப்போதே என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.
''பேட்டைக்குப் பேட்டை, காலனிக்குக் காலனி புதுக்கோயில்கள் கட்டுகிறார்கள். எங்கே பார்த்தாலும் பழைய கோயில்களையும் புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம் செய்கிறார்கள். புதுக்கோயில், பழைய கோயில் கும்பாபிஷேகங்களுக்காக என்னிடம் பலர் வந்து யோசனையும் பிரஸாதமும் கேட்டபடி இருக்கிறார்கள். இது எனக்கு நிரம்ப சந்தோஷமாக இருக்கிறது.
அதேசமயத்தில், என் மனசுக்கு நிரம்ப வருத்தம் தருகிற விஷயங்களையும் பல பக்தர்கள் வந்து தெரிவித்துக் கொள்கிறார்கள். வேறு யாரிடமும் சொல்லிக் கொள்ள முடியாமல், ஸ்வாமிகளிடம் சொல்லலாம் என்று என்னிடம் வந்து முறையிடுகிறார்கள். இவற்றுக்கு நான் பரிகாரம் தேடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்கள். மற்றவர்கள், வெளியே சொல்லத் தயங்குகிற இந்த விஷயங்களை நானும் கூடச் சொல்லாமல் இருக்கக்கூடாது. எனக்கு எல்லோரும் சொந்தம்; ஸ்வாதீனப்பட்ட மனுஷ்யர்கள் என்றால், நான் அவர்களிடம் ஒளிவுமறைவில்லாமல் எனக்கு நல்லது கெட்டது என்று தோன்றுவதைச் சொல்லத்தான் வேண்டும்.எனவே மனசு விட்டு இப்போது சொல்கிறேன்.
கோயில்களின் சூழ்நிலை அமைதியாக, தூய்மையாக இருக்கவேண்டும். பகவத் ஸ்மரணை தவிர, மற்ற நினைவுகள் மறந்துவிடும்படியாக இருக்கவேண்டும். ஆனால் இப்போது என்ன பார்க்கிறோம்? பெரும்பாலான க்ஷேத்திரங்களில் கோயிலைச் சுற்றி ஏகப்பட்ட கடைகள் வந்துவிட்டன. டீக்கடை, சிகரெட் கடை எதுவுமே பாக்கியில்லை.கோயில் அதிகாரிகளே கோயிலுக்கு வருமானம் கிடைக்கிறது என்பதால், இந்த இடங்களை வாடகைக்குக் கொடுக்கிறார்கள். அதாவது, அநேகமாக ஸ்வாமியைத் தவிர, கோயிலையே வாடகைக்குக் கொடுத்திருப்பதாகச் சொல்லலாம். இம்மாதிரியான சூழ்நிலையில், தெய்வ சாந்நித்யத்தை நாம் கிரகித்துக் கொள்கிற சக்தி குறைகிறது; நம் பக்தி சுற்றுச்சூழலால் குறைகிறது.
ஆபீஸ் கட்டிடங்கள், 'காட்டேஜ்’கள் எல்லாம் இப்போது பல க்ஷேத்திரங்களில் ஏராளமாக முளைத்துவிட்டன. அங்கெல்லாம் தெய்வ சம்பந்தமற்ற காரியங்கள் நிறைய நடக்கின்றன. இது சாந்நித்யத்தை பாதிக்கிறது. ஏதோ எட்டாக் கையில் இருக்கிற கோயில்களில்தான் விச்ராந்தியான சூழல் இருக்கிறது. அபிவிருத்தி என்ற பெயரில், இவற்றிலும் அதிகாரிகள் அநாசாரத்தைப் புகுத்திவிடப் போகிறார்கள் என்று பயமாக இருக்கிறது’’ என்று காஞ்சி மகா பெரியவா அப்போதே அருளியுள்ளார்.
இது... அறநிலையத்துறையும் ஆதினத்துக்கு உட்பட்ட ஆலய நிர்வாகங்களும் கவனித்து களையெடுக்க வேண்டிய அவசர, அவசிய தருணம் என்கிறார்கள் ஆன்மிக ஆர்வலர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT