Published : 17 Jan 2018 02:44 PM
Last Updated : 17 Jan 2018 02:44 PM
மதுரை விளாச்சேரியில் உள்ள ஐயப்பன், விவசாயத்தையும் பூமியையும் செழிக்கச் செய்து அருள்கிறார். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
பாண்டிய தேசத்தின்மீது எதிரி நாட்டு மன்னன் போர் தொடுத்தான்; இதனால், பாண்டிய தேசத்து மக்கள் நிலைகுலைந்து தவித்துக் கதறிய வேளையில், பாண்டிய மன்னனின் போர் வீரனாகக் களமிறங்கி, எதிரிகளைப் பந்தாடினார், பந்தளத்து ராஜாவான ஸ்ரீஐயப்ப ஸ்வாமி! இப்படியரு நம்பிக்கை, பாண்டிய தேசத்தில் உண்டு.
'ஸ்ரீஐயப்ப ஸ்வாமிக்குச் சந்நிதி அமைத்துக் கோயில் எழுப்பி வழிபட்டால், பாண்டிய தேசம் இன்னும் செழிக்கும், சிறக்கும்’ என்ற எண்ணத்தில், மதுரையை அடுத்துள்ள விளாச்சேரியில் ஆலயம் அமைத்து, வழிபட்டு வருகின்றனர் மதுரை மக்கள். இன்றைக்கும் மதுரையையும் சுற்றுவட்டார ஊர்களையும் காத்து வருகிறார் ஐயப்ப சுவாமி!
மதுரை, பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது விளாச்சேரி- முனியாண்டிபுரம். இங்கே, சிருங்கேரி ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளின் ஆசியுடன், மதுரை ஐயப்ப சேவா சங்கத்தினரால் கட்டப்பட்டுள்ளது ஆலயம். இங்கு வந்து ஸ்ரீஐயப்பனைத் தரிசித்தால், நிம்மதியும் சந்தோஷமும் கொண்டு வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்.
பார்வதிதேவி, துர்காதேவி, விநாயகர், முருகப் பெருமான் ஆகியோர் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கும் கோயிலில், குருவாயூரப்பனுக்கும் சந்நிதி உண்டு. நவக்கிரக சந்நிதியும் அமைந்து உள்ளது. மூலவரான ஸ்ரீஐயப்ப ஸ்வாமி, யோகப் பட்டயம் அணிந்து, சின்முத்திரையுடன் யோகாசனத்தில் அமர்ந்து, சபரிமலை தலத்தை நோக்கியபடி காட்சி தருகிறார். இவரை தரிசித்தால், விவசாயம் தழைக்கும். பூமி தொடர்பான சிக்கல்கள் யாவும் தீரும் என்கின்றனர் பக்தர்கள்!
ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் சனிக்கிழமையன்று ஐயப்ப சுவாமிக்கு நெய் அபிஷேகமும், முதல் வியாழக்கிழமையில், குருவாயூரப்பனுக்கு பால் பாயச நைவேத்தியமும் செய்து வழிபடுவது விசேஷம். இந்த நாட்களில், எண்ணற்ற பக்தர்கள் திரளாக வந்து, சுவாமி தரிசனம் செய்கின்றனர். தமிழ் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையன்று துர்கைக்கு விளக்கேற்றி வழிபட்டால், நல்ல கணவன் அமைவது உறுதி என்கின்றனர்.
திருமணத் தடை, தொழிலில் பிரச்சினை எனக் கலங்குவோர், கணபதிக்குச் சிறப்பு ஹோமம் நடத்தி வழிபட்டால், விரைவில் திருமணம் நடைபெறும்; தொழிலில் முன்னேற்றம் காண்பது உறுதி என்பது மக்களின் நம்பிக்கை. மேலும், இங்கு நடைபெறும் உமாமகேஸ்வர பூஜை, பகவதி சேவை, மகா சுதர்ஸன ஹோமம் ஆகியவற்றில் கலந்துகொண்டு தரிசனம் செய்தால், மாங்கல்ய பலம் பெருகும் என்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT