Published : 26 Dec 2017 02:20 PM
Last Updated : 26 Dec 2017 02:20 PM
பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்
மகான்களைப் பற்றிச் சொல்லும் போது திருவண்ணாமலையைச் சொல்லியே ஆகவேண்டும். திருவண்ணாமலையை விவரிக்கும் போது, எண்ணற்ற மகான்களைக் குறிப்பிட்டேயாக வேண்டும். அதிலும் குறிப்பிடத் தக்க மகான்களில் ஒருவர்... சித்த புருஷர்களில் முக்கியமானவர்... அவரைப் பற்றி விவரிப்பது என முடிவு செய்து, அவரைப் பற்றிப் படிக்கப் படிக்க, சிலிர்ப்புதான் மேலிடுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அந்த மகாபுருஷரின் வாழ்வும் பக்தியும் பிரமிக்க வைக்கிறது. அவர்... அருணகிரி நாதர்!
இன்றைக்கு 21ம் நூற்றாண்டில் இருக்கிறோம். அருணகிரிநாதர் 15ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று சரித்திரம் தெரிவிக்கிறது. அந்தக் காலகட்டத்தில் சிவனடியார்கள் அதிக அளவில் இருந்தார்கள். அண்ணாமலையார் குடிகொண்டிருக்கும் இந்தத் திருவண்ணாமாலையே, மிக முக்கியமான சிவ ஸ்தலம்.
ஆனால் இப்படியொரு சிவ ஸ்தலத்தில் பிறந்த அருணகிரிநாதர், முருகப் பெருமான் மீது மாறாத பக்தி கொண்டிருந்தார். முருகப்பெருமானையே உருகி உருகிப் பாடினார்கள். அவர் பாடிய பாடல்கள், திருப்புகழ் என்று போற்றப்படுகின்றன. முருக பக்தர்களாலும் பக்திசிரத்தையுடன் இருப்பவர்களாலும் கொண்டாடப்படுகின்றன.
அருணகிரிநாதரின் சரிதத்தை அறிந்து கொள்வதும் இங்கே திருவண்ணாமலை மகத்துவங்களைச் சொல்லுகிற வேளையில், அவரை இந்தத் தொடரில் பதிவிடுவதும் அவசியம் என்றே தோன்றுகிறது.
அருணகிரிநாதர் பிறந்தது திருவண்ணாமலை. அதேசமயம் காவிரிபூம்பட்டினம் என்றும் ஒரு சிலர் சொல்கிறார்கள். ஆனால் இந்த இரண்டுக்குமே, அதாவது எங்கே பிறந்தார் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள், எந்த நூலிலும் சரிவர சொல்லப்படவில்லை. ஆனால் ஒன்று... சிறு வயதில் இருந்தே, அருணகிரிநாதர் திருவண்ணாமலையில்தான் வாழ்ந்து வந்திருக்கிறார்.
அருணகிரியாரின் தந்தை திருவெங்கட்டார். அம்மாவின் பெயர்... முத்தம்மை. அருணகிரிநாதருக்கு மூத்த சகோதரி ஒருவர் உண்டு. ஆனால் அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை என்றே தெரிகிறது. அதாவது தன் தம்பியின் மோசமான வாழ்க்கையை நினைத்து, அவனுடைய கீழ்த்தரமான செயல்களால் நொந்து, திருமணமே வேண்டாம் என்று முடிவு செய்தார் என்றும் தம்பிக்காகவே தன் வாழ்வைத் துறந்தவர் என்றும் தெரிவிக்கிறது வரலாறு.
அருணகிரியார், சிறுவயதிலேயே தவறான செயல்களால் உந்தப்பட்டார். அவரின் நடவடிக்கைகள் மொத்தக் குடும்பத்தையும் வருந்தச் செய்தது. பெண்ணாசையால் பித்துப் பிடித்து அலைந்தார். காமமே கதி என மூழ்கிப் போனார். குடும்பம், ஒழுக்கம், நேர்மை, அன்பு, விட்டுக் கொடுத்தல், பண்பு என எதுவுமே அறியவில்லை. எதை அறியும் எண்ணத்திலும் அவரில்லை.
இத்தனைக்கும் அருணகிரிநாதர் ஏப்பைசோப்பையானவரெல்லாம் இல்லை. ‘இந்த அருணகிரிப்பயல் நம்முடன் தான் ஆடுகிறான். விளையாடுகிறான். ஆனால் படிப்பில் படு சமர்த்தனாக இருக்கிறானே’ என்று உடன் படித்தவர்கள் வியந்து போனார்கள்.
‘எந்தப் பாடமாக இருந்தாலும் சொன்ன மாத்திரத்திலேயே உள்ளே கிரகித்துக் கொள்ளும் புத்தி வேண்டும். அது அருணகிரியிடம் இருக்கிறது. அவனைப் பார்த்து எல்லோரும் கற்றுக் கொள்ளுங்கள்’ என்று ஆசிரியர்கள் அனைவரும் சிறுவன் அருணகிரியை பாராட்டினார்கள்.
‘விளையாட்டு சமயத்தில் விளையாட்டு, படிக்கும் போது படிப்பு என என் பிள்ளை சமர்த்து. விளையாட்டிலும் அவனை யாரும் மிஞ்ச முடியாது. கல்வியிலும் அவனை யாராலும் வெல்ல முடியாது’ என்று பெற்றோர் உச்சி முகர்ந்து கொண்டாடினார்கள்.
தமிழிலும் வடமொழியிலும் தேர்ந்தவனாக அருணகிரி இருந்தான். அப்படி தமிழில் ஏற்பட்ட காதலே இலக்கியத்தின் பக்கம் செல்ல வைத்தது. தேடித் தேடிப் படித்த இலக்கிய நூல்கள், ஒரு கட்டத்தில் எழுதுவதிலும் தேர்ந்தவனாக்கியது.
மலையைச் சுற்றி வருவதும் கோயிலுக்குள் ஓடிச் சென்று விளையாடுவதும் போக, மீதமுள்ள நேரங்களில், புத்தகங்களும் கையுமாகத்தான் இருந்தான். அப்போது இந்த உலகையே மறந்தவனாக இருந்தான். அந்த ஓங்கி உயர்ந்த மலை அவனுக்கு அதிசயமாகவே பட்டது அவனுக்கு. அடிககடி, மலையை வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தான்.
அப்படிப் பார்க்கிற போதெல்லாம், அவனுடைய அக்காதான் சொல்லுவாள்... ’இந்த மலை மாதிரி நீயும் பெரியாளா வரணும்னுதான் அப்பா, உனக்கு இந்த மலையோட பெயரே வைச்சிருக்காருடா’ என்றாள்.
’ஆமாம்டா... இந்த மலைக்கு அருணகிரின்னும் ஒரு பேரு உண்டு. அதனாலதான் உனக்கு அருணகிரின்னு பேரு’ என்று மலைத்தபடி சொல்லுவாள். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தவன், வழக்கம் போலான வேலைகளில் கண்ணும்கருத்துமாக ஈடுபட்டான்.
உரிய வயது வந்தது. அந்த வயதில் அவனுக்குத் திருமணமும் நடந்தேறியது. அம்மா, அக்கா, மனைவி என அன்புக்குப் பஞ்சமில்லாமல்தான் வாழ்ந்தான்.
ஆனால் என்ன... மனம் எங்கோ சுற்றியது. ஊரைக் கடந்து பிரிந்து செல்லும் சாலையையொட்டி உள்ள தெருவின் பக்கமே நின்றது. அந்தத் தெருவையும் அங்கே வீடுகளையும் ஏக்கமாகப் பார்த்தான் அருணகிரி.
அது... தாசி குலத்தாருக்கான தெரு. மன்னர்கள் காலத்தில், அவர்களுக்கு மிகப்பெரிய மரியாதை தரப்பட்டிருந்தது. அவர்கள் தங்குவதற்கு என ஒரு தெருவே அமைக்கப்பட்டு, வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டிருந்தன. அந்தத் தெரு முழுக்க தாசி குலப் பெண்கள். அந்த வீடு முழுக்க அவர்களே குடியிருந்தார்கள்.
அருணகிரியின் குடும்பம், செல்வாக்கான குடும்பம் மட்டுமல்ல. செல்வம் கொழிக்கும் குடும்பமும் கூட! காசுபணத்துக்குக் குறைவேதுமில்லை. ஆடை ஆபரணங்கள் விதம்விதமாக, ரகம் ரகமாக இருந்தன.
ஆனால்... அருணகிரியின் கெட்ட சகவாசத்தால், வீட்டின் அமைதி குலைந்தது. நிம்மதி பறிபோனது. சந்தோஷம் காணாது போனது.
எப்போதாவது வீட்டுக்கு வந்தான் அருணகிரி. அப்படி எப்போதாவது வருகிறானே என்று வீடு துடித்துப் போனது. அப்படி எப்போதாவது வருகிற போதும் சிடுசிடுவென, கடுங் கோபத்தைக் காட்ட... இவன் வீட்டுப் பக்கம் வராமலேயே இருக்கலாமே என்று வீட்டார் நினைத்தனர்.
அந்த வீடு அருணகிரியின் செயல்களை வெறுத்தது. ஒரு கட்டத்தில், கொஞ்சம் கொஞ்சமாக அருணகிரியையே வெறுத்தது.
பெற்றெடுத்த அன்னை, அன்னைக்கு நிகராக வளர்த்த சகோதரி, அன்னையாகவும் மனைவியாகவும் தாசியாகவும் எல்லாமாகவும் இருந்து அரவணைக்கும் மனைவி என அனைவரும் அருணகிரியை வெறுத்தார்கள்.
‘நல்ல குடும்பத்துல பொறந்தும் இப்படி நாசமாப் போயிட்டிருக்கானே உங்க பையன்’ என்று ஊரும் அருணகிரியை திட்டித் தீர்த்தது. உதாசினப்படுத்தியது. தேடித்தேடி மரியாதை செய்தவர்கள் கூட, தேடித் தேடி வந்து அவமானப்படுத்தினார்கள்.
உறவும் ஒதுக்க, ஊரும் ஒதுக்கிவிட, யாருமற்று, தன் சுகம், தன் சந்தோஷம், தன் நிம்மதி என்றே பெண்களுடன் காலம் கடத்தினான் அருணகிரி.
ஆனால்... அருணகிரியை தெய்வம் கைவிடவில்லை. அவனுடைய செயல்களால், புறக்கணிக்கவில்லை. சீச்சீப்போ என்று சாபமெல்லாம் கொடுக்கவில்லை.
‘இது முன் ஜென்ம வினை. இப்படித்தான் நடக்கும். இப்படித்தான் நடப்பான். அந்த கர்மகாரியங்கள் முடியும் தருணத்தில், உலகமே அதிசயிக்கும்படி ஒளிர்வான். மிளிர்வான்’ என்று கடவுள் தன் கணக்கைப் பார்த்தபடியே அருணகிரியை அரவணைத்திருந்தார்.
அதன் பிறகு, அருணகிரி எனும் இளைஞன், அருணகிரிநாதராக உலகமே போற்றும்படி எப்படி உயர்ந்தான்.
அதுவும் இந்த மலையின் அதிசயம். ஆச்சரியம். வினோதம்.
அதனால்தான் அன்றைக்கு அருணகிரிநாதர் தொடங்கி இன்றைக்கு பகவான் ரமணர், சேஷாத்திரி சுவாமிகள், பகவான் யோகி ராம்சுரத்குமார் என எண்ணற்ற மகான்கள், இங்கே வந்து, இங்கேயே வாழந்து ஸித்தியாகியிருக்கிறார்கள்.
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெயகுரு ராயா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT