Last Updated : 15 Feb, 2018 10:04 AM

 

Published : 15 Feb 2018 10:04 AM
Last Updated : 15 Feb 2018 10:04 AM

வெற்றிவேல் முருகனுக்கு... 22: படிப்படியாய் உயரச் செய்யும் படிபூஜை!

திருத்தணிக்கு வந்தால் திருப்பம் நிச்சயம். திருத்தணி மலையில் ஏறி, மால்மருகனை தரிசித்து நம் குறைகளையெல்லாம் சொல்லி வேண்டிக் கொண்டால், எல்லா கஷ்டங்களையும் போக்கியருள்வார் முருகப் பெருமான்.

ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணிக்கு செவ்வாய்க்கிழமையில் அல்லது சஷ்டி திதியில் அல்லது கார்த்திகை நட்சத்திர நாளில், வந்து தரிசியுங்கள். மன பாரங்களையெல்லாம் அவனிடம் இறக்கி வையுங்கள். மங்காத செல்வங்களையும் மாறாத நிம்மதியையும் தந்து அருள்பாலிப்பான் வேல்முருகன்!

காஞ்சி மகாபெரியவா பாதம் பட்ட புண்ணிய தலங்களில் திருத்தணியும் ஒன்று. 1939ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி காஞ்சிப் பெரியவர் திருத்தணிக்கு விஜயம் செய்தார். அப்போது மலையில் நடந்தபடியே சென்றூ தெய்வானை, வள்ளி சமேத சுப்ரமணியரை தரிசித்துள்ளார். முருகப்பெருமான் வருவோரையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறான். இங்கே கந்த சாந்நித்யம் நிறைந்திருக்கிறது என அருளினாராம்.

வள்ளிமணாளனையும் வள்ளிமணாளனின் வரம் தரும் குணங்களையும் அறிவோம். அந்த வள்ளியின் கதையையும் பார்ப்போமா.

முந்தைய காலகட்டத்தில், தொண்டை நாட்டில் மேற்பாடி எனும் ஊரின் அருகிலிருந்த வள்ளிமலையையும் அதைச் சார்ந்த வனப் பகுதிகளையும் நம்பிராசன் எனும் வேடுவ அரசன் ஆட்சி செய்து வந்தான். இந்தப் பகுதியில் உள்ள காட்டில் மான் ஒன்று குட்டியை ஈன்றது.

ஆனால், குட்டி மானாக இல்லாமல் பெண் குழந்தையாக இருந்தது. அந்தக் குழந்தையை அங்கேயே விட்டுச் சென்றது மான். அப்போது வேட்டையாட வந்த நம்பிராசன், காட்டில் தனியே அழுது கொண்டிருந்த பெண் குழந்தையைக் கண்டான். வள்ளிக் கிழங்கை அகழ்ந்தெடுத்த குழியில் கிடந்ததால் குழந்தைக்கு வள்ளி என்று பெயர் சூட்டினான். பிரியத்துடன் வளர்த்தான்.

அவள் வளர்ந்து பருவமெய்தியதும் தங்களின் குல வழக்கப்படி அவளை தினைப்புனம் காக்க அனுப்பினான். அங்கு வள்ளியைக் கண்ட நாரதர், ‘இவளே முருகனுக்கு ஏற்றவள்’ என்று உறுதி கொண்டார். முருகப் பெருமானிடம் சென்று அவளின் அழகை எடுத்துரைத்தார்.

பிறகு முருகன், வேடனாக வந்தான். விருத்தனாக வந்தான். வேங்கை மரமாகி, விநாயகப் பெருமான் அருளால் வள்ளியை மணந்தான். வள்ளி மணாளனாக இதோ... இந்தத் திருத்தணியில் எழுந்தருளினான். .

வேலூருக்கு அருகே திருவலம் என்ற ஊரில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள வள்ளி மலை என்ற இந்தத் தலத்தில்தான் முருகப்பெருமான் வள்ளியைக் கண்டு திருமணம் செய்ததாக ஐதீகம்.

சரி... ஆலயத்துக்குள் நுழைவோமா.

திருக்கோயில் நான்கு பிராகாரங்கள் கொண்டது. மலையின் மீது படிகள் ஏறிச் சென்றால் முதலில், நான்காம் பிராகாரத்தை அடையலாம். இதுதான் தேரோடும் வீதி. தேரோடும் பிராகாரம். இங்கு வாகன மண்டபம், கல்யாண மண்டபம் உள்ளன. இங்கிருந்து மூன்றாம் பிராகாரத்துக்குச் செல்லும் நுழைவாயிலின் அருகே கற்பூர அகண்டம் உள்ளது.

நான்காம் பிராகாரத்தின் கிழக்கு பகுதியில் உள்ள நவாப் வாத்திய மண்டபம் சிறப்பு பெற்றதாகச் சொல்லப்படுகிறது. இங்கு தினசரி பூஜைகளின்போதும், உற்ஸவ காலங்களிலும், இஸ்லாமிய வாத்தியக் காரர்கள், வாத்தியம் வாசிப்பது வழக்கம். இந்த மண்டபம் ‘காதர்’ என்ற இஸ்லாமிய அன்பர் ஒருவரால் கட்டப்பட்டது என்கிறார்கள்.

கோயிலின் கருவறையில், முருகப் பெருமான் கடம்பமாலை அணிந்து, வலக் கரத்தில் வேலாயுதம் தாங்கி, இடக் கரத்தை ஊரு அஸ்தமாக தொடையில் வைத்திருந்தபடி, நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். சூரபத்மனை அழிக்க தன் அன்னையிடம் சக்திவேல் பெற்ற பெருமான், பக்தர்களுக்கு ஞானம் அருளும் பொருட்டு தன் தந்தையிடம் இருந்து ஞானவேல் பெற்று அருள் புரிவதால், இவரை ஞானசக்திதரன் என்று போற்றி வணங்குகின்றனர்.

திருமாலிடம் இருந்து தான் கைப்பற்றிய சக்ராயுதத்தை முருகன் மீது ஏவினான் தாரகாசுரன். அதைத் தன் மார்பில் ஏற்றுக் கொண்டார் முருகப் பெருமான். பிறகு, அந்த சக்ராயுதத்தை திருமாலிடமே ஒப்படைத்தாராம். இன்றும் தணிகை முருகனின் திருமார்பில் சக்ராயுதம் பதிந்த தழும்பைக் காணலாம். இவரின் பாதத்தின் கீழே ஆறெழுத்து மந்திரம் பொறித்த யந்திரம் உள்ளது என்கிறது ஸ்தல புராணம்.

இங்கு, பள்ளியறை பூஜையின்போது ஒரு நாள் வள்ளியுடனும், மறு நாள் தெய்வயானையுடனும் பள்ளியறைக்கு எழுந்தருள்கிறார் கந்தர்பெருமான். எந்தத் தலத்திலும் இல்லாத சிறப்பு இது என்கிறார்கள் பக்தர்கள். .

அதேபோல், எந்தக் கோயிலிலும் இல்லாத இன்னொரு சிறப்பம்சம்... படிபூஜை. இங்கே... திருத்தணியில் படித்திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது.

ஆங்கிலேயர் ஆட்சியின் போது, புது வருடப் பிறப்பின்போது பழங்கள் மற்றும் மாலை மரியாதைகளுடன் சென்று ஆட்சிப் பொறுப்பில் இருந்த துரைமார்களை சந்திக்கும் வழக்கம் இருந்தது. இதற்கு மாற்றாக, தேச பக்தியுடன் தெய்வ பக்தியையும் வளர்க்கும் விதமாக, ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் திருத்தணி முருகனை வணங்கும் விதமாக ஏற்படுத்தப்பட்டதுதான் திருத்தணி படித் திருவிழா.

31.12.1917 மற்றும் 1.1.1918 ஆகிய நாட்களில் வள்ளிமலை சுவாமிகளால் திருத்தணி படித் திருவிழா ஆரம்பிக்கப்பட்டது. பின்னர், ஸ்ரீகாஞ்சி மகா ஸ்வாமிகளால் ‘திருப்புகழ் மணி’ என்று பட்டம் சூட்டப்பட்ட டி.எம். கிருஷ்ணஸ்வாமி மற்றும் மௌனகுரு சுவாமிகள் ஆகியோரால் இந்த விழா இன்னும் விமரிசையாக, பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து நடந்து வந்த படித்திருவிழா, திருப்புகழ் முத்துஸ்வாமி ஐயர் மற்றும் அவர் மகன் திருப்புகழ் டாக்டர் மணி ஐயர் ஆகியோர், ‘அடியார் திருக்கூட்ட இறைபணி மன்றம்’ எனும் அமைப்பின் மூலமாக வருடந்தோறும் திருத்தணி படி பூஜை மற்றும் விழா திறம்ப்ட நடந்து வருகிறது.

வருடந்தோறும் டிசம்பர் 31-ம் தேதி திருத்தணி கோயிலில் தீபம் ஏற்றியதும், அடிவாரத்தின் முதல் படிக்கட்டில் ஆரம்பித்து ஒவ்வொரு படிக்கும் ஒவ்வொரு பாடல் வீதம் திருப்புகழ் பாடுவார்கள். நைவேத்தியம் செய்து தீபம் ஏற்றுவார்கள். இப்படியாக 365 படிக்கட்டுகளிலும் தீபம் ஏற்றி, படி பூஜை செய்வார்கள்.

திருத்தணியில் நடைபெறும் படி பூஜையைத் தரிசித்தால், நாமும் நம் வாழ்வில் படிப்படியாய் உயரலாம் என்பது ஐதீகம்!

- வேல்வேல்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x