Last Updated : 15 Jan, 2018 03:20 PM

 

Published : 15 Jan 2018 03:20 PM
Last Updated : 15 Jan 2018 03:20 PM

குருவே... யோகி ராமா..! 38: ரமணரின் புன்னகை!

பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்

வடக்கே, காசிக்கு அருகில் உள்ள நார்த்ரா எனும் சின்னஞ்சிறிய கிராமத்தில் அவதரித்த பகவான் யோகி ராம்சுரத்குமார், இன்றைக்கு நம்மைப் போல் எத்தனையோபேருக்கு குருவாகவும் மகானாகவும் இருந்து அருள் வழங்கிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய பக்தர்களை குழந்தைகளாக பாவித்து ஆசி வழங்கிக் கொண்டிருக்கிறார். ‘

'இவரே என் குரு’ என்று பகவான் யோகி ராம்சுரத்குமாரை மனதில் ஏற்றுக் கொண்டு, பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள். பக்தர்களுக்கு குரு எளிதாகக் கிடைத்துவிடுவார் போலும். குருவுக்குத்தான் குரு கிடைப்பதும் குரு யார் என்று அறிவதும் அவ்வளவு எளிதானதல்ல என்பதாகத் தோன்றுகிறது.

கேரள மாநிலம் கஞ்சங்கோட்டில் இருக்கிறது பப்ப ராம்தாஸ் சுவாமிகளின் ஆஸ்ரமம்.. இங்கே சென்று சுவாமி பப்பா ராம்தாஸ் சுவாமிகளை ராம்சுரத் குன்வர் சென்று தரிசித்தார்.

அதைப் பார்ப்பதற்கு முன்னதாக, சில விஷயங்களை இங்கே சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

நார்த்ரா கிராமத்தில் ராம்சுரத் குன்வராக, சிறுவனாக, இளைஞனாக இருந்த போதிருந்தே தொடங்கிவிட்டது குருவுக்கான தேடல். அங்கே நிகழ்ந்த சாதுக்களின் தொடர்புதான், அவரை முதல்கட்டமாக வாழ்க்கையை வேறுவிதமாகப் பார்க்கச் செய்தது. அந்த சாதுக்களில் ஒருவர்... கபாடியா பாபா.

இவர்தான், ராம்சுரத் குன்வர் என்பவர் சாதாரணரல்லர் என்பதை முதலில் புரிந்து உணர்ந்து கொண்டவர். இந்த கபாடியா பாபா குறித்து ஒரு விஷயம்... இவர் நீதிபதியாகப் பணியாற்றியவர். ஒருகட்டத்தில், வாழ்க்கையே வெறுத்து, ஆத்மசோதனைகளுக்குப் பிறகு துறவறம் வந்துவிட்டார்.

அதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது.

நீதிபதி கபாடியா பாபாவின் கோர்ட்டுக்கு அந்த வழக்கு வந்தது.. ஒருவரைக் கொலை செய்துவிட்டதாக ஒருவரைக் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தியிருந்தார்கள். இந்த விசாரணையில், இவர்தான் குற்றவாளி என்பது ஒவ்வொருகட்டத்திலும் நிரூபிக்கப்பட்டே வந்தது. நேர்மையாகவும் கடமையுணர்வுடனும் தன் பணியைச் செய்துவரும் நீதிபதி கபாடியா பாபா, குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

எல்லோரும் வியந்தார்கள். இவரின் தீர்ப்பைக் கேட்டு மலைத்துப் போனார்கள். ‘என்னதான் சொல்லு. இந்த ஆள் குற்றவாளி இல்லைன்னுதான் தீர்ப்பு வரும் பாரேன்’ என்று கோர்ட் வளாகத்தில் சொல்லாதவர்களே இல்லை. ஆனாலும் கபாடியா பாபா, அதிகபட்ச தண்டனையான மரணதண்டனையை வழங்கினார். அந்தக் குற்றவாளி யார் தெரியுமா? கபாடியாவின் மருமகன். அதாவது., மகளின் கணவர்.

இதையடுத்து, வாழ்க்கை குறித்து பலவிதமான யோசனைகள் அவருக்கு. அதில் தெளிவு வேண்டியே துறவறம் பூண்டார்.

கிணற்றடியில் இறந்து போன குருவியின் சோகத்தில் இருந்த ராம்சுரத் குன்வர், கபாடியா பாபாவிடம் ஓடிச் சென்று, அழுதார். அவர்தான் ஆறுதல் சொன்னார். அவர்தான் ஆன்மிகம் குறித்து விளக்கினார். அவர்தான் இம்மை மறுமை குறித்து தெளிவுபடுத்தினார்.

இதையடுத்த காலகட்டத்தில், ராம்சுரத் குன்வர் இளைஞரான தருணத்தில், காசிக்குச் சென்று தரிசித்ததையும் அப்போது காசி விஸ்வநாதர் சந்நிதியில் ஏற்பட்ட அனுபவத்தையும் அவரிடம் பகிர்ந்து கொண்டார்.

பிறகு புத்த கயா சென்றதையும் அங்கே தனக்கு நேர்ந்த அனுபவங்களையும் கபாடியா பாபாவிடம் சொல்லி விளக்கங்கள் கேட்டார். அவரும் இதுகுறித்து விளக்கினார்.

இதையடுத்து, கபாடியா பாபா எப்போது வருவார் என்று காத்திருந்தார். அப்படி ஒருநாள் ... அவர் வந்ததும், ஓடிப்போய் நமஸ்கரித்தார் ராம்சுரத் குன்வர். விவேகானந்தர் குரல் போல், அசரீரி போல் கேட்டதையும், ‘இப்போது நீ பார்ப்பது உன்னுடைய வேலை அல்ல’ என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்ததையும் சொன்னார்.

நடுவே, ராம்சுரத் குன்வருக்கு நிகழ்ந்த திருமணத்தையும் அரவிந்தரின் புத்தகம் தந்த தாக்கத்தையும் அவரிடம் பகிர்ந்துகொண்டார். இதையெல்லாம் கேட்ட பிறகுதான்... ‘தெற்கே போ’ என்று உத்தரவு போல், கட்டளை மாதிரி சொன்னார் கபாடியா பாபா. அதன்படி ரயிலேறிய ராம்சுரத் குன்வர், புதுச்சேரிக்கு வந்தார். அரவிந்தர் ஆஸ்ரமத்துக்குச் சென்றார். அரவிந்தரைத் தரிசித்தார். அங்கு சிலநாட்கள் இருந்தார்.

அதன் பிறகு, திருவண்ணாமலை தலத்தால் உந்தப்பட்டார். திருவண்ணாமலை எனும் புண்ணியபூமிக்கு வந்தார். கோயிலையும் மலையையும் சுற்றிச் சுற்றி வந்தார். கடைவீதிகள், ரயில் நிலையம் என்றெல்லாம் அலைந்தார். கிரிவலப் பாதையில் நடந்தார். வழியில் ரமணாஸ்ரம் பார்த்தார். ஒருநிமிடம் ஆஸ்ரமத்தைப் பார்த்தபடியே வாசலில் நின்றார். பிறகு விறுவிறுவென உள்ளே சென்றார். தரிசன ஹால் வாசலில் நின்று பார்த்தார்.

அங்கே... கூட்டம். வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் கூட்டம். அந்த தரிசன ஹாலில்... கூட்டத்திற்கு எதிரே அமர்ந்திருந்தார் பகவான் ரமண மகரிஷி. மீண்டும் விறுவிறுவென ஹாலுக்குள் சென்ற ராம்சுரத் குன்வர், முன்னே சென்று, பகவான் ரமணருக்கு எதிரே, நேருக்கு நேராக அமர்ந்து கொண்டார்.

ஒருகணம் இருவரும் பார்த்துக் கொண்டார்கள். ராம்சுரத் குன்வர் எழுந்து ரமண பகவானை நமஸ்கரித்தார். பிறகு மீண்டும் உட்கார்ந்து கொண்டார். பகவான் ரமணரைப் பார்த்தார். கண்களை மூடி, தவத்துக்குச் சென்றார். தவத்தில் மூழ்கினார். தவத்திலேயே கிடந்தார்.

விநாடிகள், நிமிஷங்களாயின. நிமிஷங்கள், கால்மணி, அரைமணி என நேரங்களாயின. சிலமணி நேரங்கள் கடந்திருக்கும். கண் திறக்காமல், உட்கார்ந்தபடி, எந்த அசைவுமின்றி, எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் அப்படியே கிடந்தார் ராம்சுரத் குன்வர்.

அங்கே இருந்தவர்கள் ரமண நாமம் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். ரமணரின் திருநாமங்களைப் பாடல்களாக பாடியபடியே இருந்தார்கள். நேரமாக ஆக, கூட்டம் இன்னும் கூடியது. ஹால் மொத்தமும் நிரம்பி வழிந்திருந்தது. கையில் பழத்தட்டுகளுடனும் மாலைகளுடனும் ரமண மகரிஷியின் தரிசனத்துக்காகவும் அவருடைய ஆசீர்வாதத்துக்காகவும் காத்திருந்தார்கள்.

ஆனால் இவை ஏதும் அறியாதவராக, உணராதவராக, பார்க்காதவராக, எதுவும் கேட்காதவராக தவ நிலையிலேயே இருந்தார் ராம்சுரத் குன்வர். கண் திறக்கவில்லை. கண்ணில் துளிகூட அசைவேதுமில்லை. பலமணி நேரங்களாகிவிட்டிருந்தன..

ஒருகட்டத்தில்... ராம்சுரத் குன்வர் மெள்ளக் கண் விழித்தார். கண்களைத் திறந்தார். தவ நிலையில் இருந்து வெளிவந்தார். எதிரே பகவான் ரமணரைப் பார்த்தார்.

பகவான் ரமணர், ராம்சுரத் குன்வரைப் பார்த்து, புன்னகைத்தபடியே இருந்தார். ரமண மகரிஷி எனும் மகான், ராம்சுரத் குன்வரை பார்த்தபடியே இருந்தார். அவரின் பார்வையில் இருந்து கருணையும் உதட்டில் இருந்து மெல்லிய புன்னகையும் ராம்சுரத் குன்வரைத் தொட்டன.

ராம்சுரத் குன்வர் யார் என்பதும் பின்னாளில் அவர் என்னவாகப் போகிறார் என்பதும் தெரிந்ததான, புரிந்ததான, புரிந்து உணர்ந்ததான புன்னகை அது!

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜெயகுரு ராயா!

- ராம்ராம் ஜெய்ராம்

 

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x