Published : 15 Feb 2018 10:33 AM
Last Updated : 15 Feb 2018 10:33 AM
க
வியரசு கண்ணதாசன் ஒருமுறை பிள்ளையார்பட்டி சென்று கற்பக விநாயகரைத் தரிசித்தாராம். மன நிறைவோடு புறப்படத் தயாரான அவரிடம் அந்தப் பிள்ளையாரைப் பற்றி ஒரு பாட்டு எழுதித் தருமாறு கேட்டிருக்கிறார்கள். உடனே ஒரு காகிதத்தையும் பேனாவையும் கேட்டு வாங்கிக்கொண்டு அங்கேயே அமர்ந்து, அப்போதே அழகிய இந்தப் பாடலை அவர் எழுதியதாகச் சொல்கிறார்கள்!
அற்புதக் கீர்த்தி வேண்டின்
ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற்பொருள் குவிதல் வேண்டின்
நலமெலாம் பெருக வேண்டின்
கற்பக மூர்த்தி தெய்வக்
களஞ்சிய திருக்கை சென்று
பொற்பதம் பணிந்து பாரீர்
பொய் இல்லை கண்ட உண்மை!
பிள்ளையார்பட்டி கிராமம், காரைக்குடிக்கு அருகில் திருப்பத்தூரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அழகான நுழைவாயிலைக் கடக்கும்போதே தூரத்தில் வடக்கு நோக்கிய கோபுரம் தெரிகிறது. முன்னே தென்னங்கீற்றுகள் வேய்ந்த கொட்டகை. அத்துடன் எழில் கொஞ்சும் ஊருணி எனப்படும் திருக்குளம். வழியெல்லாம் அருகம்புல் மாலையும் வாசமுள்ள ஆளுயுர சம்பங்கி மாலையும் மதுரை மல்லியும் விற்கும் பூக்கடைகள்.
கோயிலுக்கு இரு வாசல்கள். கிழக்கில் உயரிய பெரிய கோபுரம். கோயில் நிர்வாகம் நடத்தும் தேங்காய், பழக் கடையில் அர்ச்சனைத் தட்டை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றால், நேர்த்தியான சிற்பங்களைக் காணலாம். தூணில் உள்ள ரிஷபாரூடரை நிதானமாகப் பாருங்கள். மனதைக் கொள்ளை கொள்ளும்!
தெய்வீக அழகு
உள்ளே சென்றதும் நெடிதுயர்ந்த கொடிமரம். இடதுபுறத்தில் கற்பக விநாயகர். எங்கு நின்று பார்த்தாலும் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்படி போடப்பட்டுள்ள மரப்பலகை மேல் நின்று மனம் குளிரத் தரிசிக்கலாம்.
சாமியைத் தரிசிக்கும்போது சும்மா அதைத் தா, இதைத் தா, பதவி உயர்வு கொடு, இடமாற்றத்துக்கு ஏற்பாடு செய் எனப் பெரிய லிஸ்ட் கொடுப்பது இருக்கட்டும். அவருக்குத் தெரியாதா என்ன? கொஞ்சம் அவரது தெய்வீக அழகையும் அனுபவித்துப் பார்ப்போமே!
கற்பக விநாயகர் 6 அடி உயர, கரிய, பெரிய உருவம். அகன்ற காதுகளுடன் யானை முகம். கால்களைப் பாதியாய் மடித்து, ஆசனத்தில் வயிறு படியாமல் அமர்ந்திருக்கும் அர்த்த பத்மாசனம் எனும் திருக்கோலம். தங்கக் கவசத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார். வலது கையில் சிவலிங்கம்! எங்கும் காணக் கிடைக்காத ஞானக் கோலம்! தும்பிக்கையில் மோதகம், இடது கையை மடித்து கடிஹஸ்தமாக இடுப்பில் வைத்து இருக்கும் பெருமிதக் கோலம்!
பிள்ளையாரின் முன்பு இடப்புறம் 4, வலப்புறம் 4, நடுவில் 1 என மொத்தம் 9 சர விளக்குகள். அவை நவக்கிரகங்களைக் குறிப்பவையாம். இவரிடம் வந்துவிட்டால் அவர்கள் வம்பு செய்ய மாட்டார்கள்! கற்பக விநாயகர் முன்பு 16 தீபங்கள் ஒரே நேர்கோட்டில் வரிசையாய் ஒளிவிடும் பாதவிளக்கையும் பாருங்கள்!
தேசிகவிநாயகராம் இவர் பாதம் பணிந்தால், 16 செல்வங்களுக்கும் அதிபதி ஆகலாம் என்பதைக் குறிக்கிறது அது! இந்தக் கற்பக விநாயகர் ஓம் எனும் ஓங்கார வடிவினர். ஞான சொரூபமானவர். கஜமுகாசுரனை வதம் செய்த பாவம் நீங்குவதற்காக சிவலிங்கத்தைப் பூஜை செய்தவர்.
1,600 வருடப் பழமை
பிள்ளையாரின் கர்ப்பகிரகம் ஒரு குடைவரைக் கோயில். பாறையைக் குடைந்தெடுத்து அமைக்கப் பெற்றது. பிள்ளையாரின் முன்னே இடப் பக்கத்தில் கிழக்கு நோக்கி அவர் அனுதினமும் பூசிக்கும் திருவீசர் எனும் சிவலிங்கம் உள்ளது. இதுவும் பிள்ளையாரைப் போலவே, அந்தக் கருவறையைப் போலவே குன்றிலிருந்து வடித்து எடுக்கப்பட்டது. திருவீசரையும் மானசீகமாக நினைத்து வணங்குவோம்.
தேவலோகத்துக் கற்பக மரத்துக்கே வறட்சி வந்தாலும், அள்ளி அள்ளித் தரக்கூடிய வளம் பெற்றவர் இந்தக் கற்பக விநாயகர். வந்தவர்களுக்கு வேண்டியன நல்கும் வள்ளல். கற்பக விநாயகருக்குச் சாத்திய மாலையில் ஒரு பாதியைக் கழுத்தில் அணிவிக்கிறார் குருக்கள். யானையிடம் தும்பிக்கையால் ஆசீர்வாதம் பெற்றது போலக் கனக்கிறது. நான் எனும் எண்ணம் விலகுகிறது.
ஏதோ ஒரு சக்தி உடம்பினுள் ஊடுருவுவதுபோல் சிலிர்ப்பு ஏற்படுகிறது! கற்பக விநாயகரின் திருவருளை உணர முடிகிறது. பின்னர், மருதீசரையும் வாடாமலர் அம்பிகையையும் தரிசித்துவிட்டுப் பிராகாரத்தைச் சுற்றி வரும்போது, பிராகாரத்தின் இடப்பக்கத்தில் மலைப் பாறையே சுவரின் ஒரு பகுதியாக இருப்பதைப் பார்க்கிறோம்.
இங்கு உள்ள 11-வது கல்வெட்டில் உள்ள எருக்காட்டூர் எழுத்துக்கள் இக்கோயில் சுமார் 1,600 வருடங்கள் பழமையானது என்பதைக் காட்டுகின்றன. இங்கே கற்பக விநாயகர் குகையின் ஒரு பகுதியாக அர்த்த சித்தரமாய் (Bas relief) அமைந்துள்ளார்.
பைரவர், நவக்கிரகங்கள், சண்டிகேசுவரர் உள்ளிட்ட பரிவார தேவதைகளை வணங்கிய பிறகு அலங்கார மண்டபத்தில் உள்ள ஓவியங்களைப் பார்த்து ரசிக்கலாம். இங்கிருக்கும் அற்புதமான பிள்ளையார் சித்திரத்தை நாம் எந்தப் பக்கத்தில் நின்று பார்த்தாலும் பிள்ளையார் நம்மைப் பார்ப்பது போலவே தோன்றுகிறது.
இடம், வலம், முன்னே, பின்னே என நடந்து பார்க்கிறோம், பிள்ளையாரின் பார்வையும் நம்முடன் நகர்கிறது! என்னே ஒரு தத்துவம்! நாம் எங்கிருந்தாலும், என்ன செய்தாலும் அவர் பார்வையிலிருந்து தப்ப முடியாது என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்!
இக்கோயிலை நகரத்தார்கள் நிர்வகித்து வருகிறார்கள். பிள்ளையார்பட்டி கோயில் பிரிவைச் சார்ந்த 16 குடும்பங்கள் ஆண்டுக்கு இருவராகக் காரியக்காரர்களாக இருந்து, அவ்வூரிலேயே தங்கி தினந்தோறும் கோயிலுக்குச் சென்று மேற்பார்வை செய்துவருகிறார்கள். ஆகம விதிகளின்படி 5 கால பூஜைகள் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன. ஆண்டு முழுவதும் அனுதினமும் 3 வேளை அன்னதானம் நடைபெறுகிறது. இங்கே பொதுமக்களுக்காக நூலகமும் மருத்துவமனையும் நடத்தப்படுகின்றன.
கற்பக விருட்சம்
சிவாகமச் செல்வர் பிச்சைக் குருக்கள் சிவநெறிக் கழகம் எனும் அமைப்பை இவ்வூரில் ஏற்படுத்தி, ஆகமங்களைப் பயிற்றுவித்து, அர்ச்சகர்களை உருவாக்கும் பணியைச் செய்துவருகிறார். இவருடைய மாணாக்கர்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் என உலகெங்கும் உள்ள கோயில்களில் நித்ய பூஜைகள் செய்துவருகின்றனர்.
கோயிலிலிருந்து விடைபெறும்போது, அனைவராலும் அண்ணா என்று அன்புடன் அழைக்கப்படும் பிச்சைக் குருக்கள் அளிக்கும் அருட்பிரசாதங்களான பெரிய அப்பத்தையும் இளம் இனிப்புடைய மோதகக் கொழுக்கட்டையையும் வடையையும் பெற்று, உண்டு மகிழலாம்!
பிச்சைக் குருக்கள் நம்மை ஆசீர்வதித்து கற்பக விநாயகரின் பெரிய படம் ஒன்றையும் பரிசளிக்கிறார். அழகிய வண்ணப் படம். பாதத்தில் என்ன எழுதியிருக்கிறது எனப் பார்ப்போம். பிள்ளையார் என்ன சொல்கிறார்? ‘யாமிருக்கும் இடத்தில் சகல செல்வங்களும் கற்பக விருட்சமாய் வளரும்'.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT