Published : 23 Dec 2017 04:11 PM
Last Updated : 23 Dec 2017 04:11 PM
ஐயப்ப பக்தர்களே... உங்களுக்காக..!
கன்று ஓடி வந்து பசுவிடம் நெருங்கினாலும் பசுவே ஓடி வந்து கன்றுக்குட்டியை நெருங்கினாலும் இரண்டுமே சந்தோஷமான செயல்தான். ஆனால், இரண்டுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. திக்குத்திசை தெரியாத கன்று, தாய்ப்பசுவை அப்படித்தான் பார்த்ததும் ஓடி வந்து ஒட்டிக் கொள்ளும். அதுவொரு பாதுகாப்பு உணர்வு. அதேசமயம் , தாய்ப் பசுவானது கன்றுக்குட்டியைப் பார்த்ததும் ஓடிவந்து, உரசிக் கொள்வது பாசநேசத்தின் அடர்த்தி.
மணிகண்டன், குருகுலத்தில் பயிற்சிகளையெல்லாம் முடித்துக் கொண்டு அரண்மனைக்கு வந்தான். வாசலில் பட்டத்து யானை உட்பட வீரர்களும் நின்று வரவேற்றார்கள். அரண்மனைப் பெண்கள் பலரும் வாசலில் நின்று வரவேற்றார்கள். வயதில் மூத்த பெண்கள் இரண்டுபேர் சேர்ந்து, மணிகண்டனுக்கு ஆரத்தி எடுத்து, பொட்டிட்டு வரவேற்றார்கள்.
சேவகர்கள் பலரும் ஓடிவந்தார்கள். குனிந்து வணக்கம் சொன்னார்கள். ஒருசிலர், மணிகண்டனின் நெற்றி வளித்து ஆசீர்வதித்தார்கள். இன்னும் சிலர், கன்னம் கிள்ளி, முத்தமிட்டுச் சென்றார்கள். மன்னன் வந்து தழுவிக் கொண்டான். பெருமிதத்துடன் கைகோர்த்தபடி உள்ளே அழைத்துச் சென்றான்.
ஆனால் மகாராணி? வரவில்லை. உள்ளேயே இருந்தார். வருவது தெரியும். வந்துகொண்டிருப்பதும் அறிந்திருந்தார். ஊர் எல்லைக்குள் வந்துவிட்டதை முரசறைந்து சொன்னதையும் கேட்டார். அரண்மனை வளாகத்துக்குள் வந்துவிட்டதை, பணியாட்கள் சொன்னார்கள். அரண்மனையின் முக்கிய நுழைவாயிலில் ஆரத்தியெடுத்து வரவேற்றது வரை எல்லாமும் அறிந்திருந்தார். ஆனாலும் உள்ளிருந்து வரவே இல்லை. உள்ளுக்குள் இப்படியொரு மாற்றம் எப்படி நிகழ்ந்தது? யாரால் நிகழ்ந்தது.
வேறு யார்? அந்த முதலமைச்சர்தான் காரணம். கொஞ்சம் கொஞ்சமாக மகாராணியின் மனதை மாற்றினான். ’நேற்று வரை உங்களுக்குக் குழந்தை இல்லை. அதனால்தான் நதிக்கரையில் கிடந்தவனை, குளிப்பாட்டி, அரண்மனைக்குள் வைத்து வளர்த்தீர்கள். அவனையே ராஜராஜன் என்று புகழ்ந்து வளர்த்தீர்கள். இப்போதுதான் உங்களுக்கு வாரிசு வந்துவிட்டதே. மகன் வந்துவிட்டானே. அவனுக்குத்தான் ராஜராஜன் என்றும் பெயர் வைத்துவிட்டீர்களே! அப்படியிருக்க, இவனை இன்னுமா அரண்மனையில் வைத்திருக்க வேண்டும்’ என்று தூபமிட்டான். அது நன்றாகவே புகைந்தது.
மகாராணி யோசிக்க ஆரம்பித்தாள். அட... இதுவும் சரிதானே என்று நினைத்தாள். இவனா இளவரசன். என் வயிற்றில் பிறந்தவனல்லவா எதிர்காலத்தில் அரசன் என நினைத்தே பூரித்தாள். மெல்ல மெல்ல மணீகண்டனை வெறுக்கத் தொடங்கினாள். ஆனால் மன்னன் கோபித்துக் கொள்வான். இவன் மீது அதீத் அன்பு வைத்திருக்கிறான். பிரியம் கொண்டிருக்கிறான். ஆகவே பாசம் காட்டுவது போல் பாசம் காட்டி, மோசம் செய்துவிடவேண்டும் எனத் தீர்மானித்தாள்.
இந்த நிலையில்... சில காலங்களுக்குப் பிறகு, அந்த முதலமைச்சர் பயந்தது போல, மகாராணி வெறுத்து ஒதுக்கியதற்கான காரணம் போல் அந்தச் சம்பவம் நடந்தது. மன்னன் ராஜசேகரன், மணிகண்டனுக்கு இளவரசுப் பட்டம் கட்ட முடிவு செய்தான். ஒருநல்ல நாளில், அரண்மனை வேதியரை அழைத்தான். ஒருநல்ல நாள் பாருங்கள், மகனுக்கு இளவரசுப் பட்டம் கட்டவேண்டும் என்றான்.
இடிவிழுந்தது போல் பிரமை பிடித்து நின்றாள் மகாராணி. பிரக்ஞையே இல்லாமல் அதிர்ச்சியில் உறைந்தாள். இதை நடக்க விடக் கூடாது என உறுதியெடுத்தாள். சூழ்ச்சிக்கு வித்திட்ட முதலமைச்சரை விட, அதிக முஸ்தீபுடன் சூழ்ச்சி வலை பின்னினாள். பதவியைக் காட்டி முதலமைச்சரையும் பணம் பொருளைக் கொடுத்து வைத்தியரையும் தன் வழிக்குக் கொண்டு வந்தாள்.
அன்றைய நாளில் இருந்தே அரங்கேறியது ராணியின் நாடகம். தீராத தலைவலியால் கதறினாள். ஊரையே கலங்கடித்தாள். அலறியடித்துக் கொண்டு அரண்மனையில் இருந்த எல்லோரும் ஓடி வந்தார்கள்.
ராணியின் தலைவலியாலும் வலி இருப்பது போல் துடித்த கதறலாலும் ராஜா துவண்டே போனான். வைத்தியரை வரச் செய்தான். மருந்து கொடுத்தார். இல்லாத தலைவலிக்கு மருந்து கொடுத்தார். தலைவலி அடுத்த நாளும் நீடிக்க, மன்னன் கோபமானான். அடுத்தடுத்த நாளும் தொடர... வெகுண்டெழுந்தான். வைத்தியரை அழைத்து, சகட்டுமேனிக்கு திட்டினான். தலைவலி தீர என்ன வழி என்று கேட்டான்.
மகாராணி சொன்ன வைத்தியத்தை, ராஜாவிடம் சொன்னான் வைத்தியர்.
அதாவது, இது சாதாரணத் தலைவலி. மோசமான தலைவலி. கொடுமையான தலைவலி. உயிரைக் கொல்லும் தலைவலி. இதற்கான , இந்த வலி தீருவதற்கான மூலிகைகள் என்னிடம் உள்ளன. ஆனால், அந்த மூலிகையை அரைத்து,க் கலக்கி, பற்று போடவேண்டும். மூலிகையில் கலப்பதற்கு, புலிப் பால் வேண்டும். அதுவும் குட்டி ஈன்ற புலி வேண்டும். அந்தப் புலியின் பால் வேண்டும். அந்தப் பால்தான் அருமருந்து’’ என்றான்.
அதிர்ந்து போனான் மன்னன். ‘காட்டுக்கா. பெண் புலியைப் பிடிக்கவேண்டுமா. யாரை அனுப்புவது, எப்படிப் பிடிப்பது. விளையாட்டாகச் சொல்லிவிட்டீர்கள். ஆனால் விளையாட்டான காரியம் அல்ல இது’ என்றான் மன்னன். வேறு வழியே இல்லை மன்னா என்றான் வைத்தியன்.
அங்கே சலசலப்பும் சோகமும் சூழ்ந்து கொண்டன.
சகலத்தையும் கேட்டுக் கொண்டிருந்தான் மணிகண்டன். தன் அவதார நோக்கம் நிறைவேறும் தருணம் வந்துவிட்டதை அறிந்தான். இதற்கு மகாராணியின் நாடகம் உதவப் போகிறது என்பதாக நினைத்துக் கொண்டான். மன்னனைப் பார்த்தான். மகாராணியைப் பார்த்தான். மன்னனுக்கு அருகில் வந்தான்.
‘தந்தையே. காட்டுக்குச் சென்று, புலியின் பால் எடுத்து வரும் பணியை எனக்கு வழங்குங்கள்” என்றான். மன்னர் நடுங்கிப் போனார். மகாராணி மகிழ்ந்தாள்.
‘எனக்கு ஒன்றும் ஆகாது. நான் போய் வருகிறேன். புலிப்பாலுடன் வருகிறேன்’ என்றான். மணிகண்டன் உறுதியாகச் சொன்னான். அவனுடைய பார்வையில் இருந்த தீட்சண்யம், மன்னனை மறுத்துப் பேசவிடாமல், கட்டிப் போட்டது.
சரி... படைகளையேனும் அழைத்துப் போ என்றான் மன்னன். கூட்டம், புலிகளுக்கு மிரட்சி தரும். ஓடிவிடும். எங்கேனும் ஒளிந்துகொள்ளும். தனியாகவே சென்று வருகிறேன் என்றான் உறுதியுடன்!
ஒருகாலத்தில்... அதாவது முப்பதுகளில்... நாற்பதுகளில் சபரிமலை யாத்திரைக்கு ஐயப்பன் மேல் பாரத்தைப் போட்டு செல்வதாகச் சொல்லி நம்பிக்கையுடன் உறுதியுடன் சபரிமலைக்குச் சென்று வந்தார்கள் பக்தர்கள். சரணகோஷம் எழுப்பியபடி சென்றால், எங்களைப் போன்ற பக்தர்களை புலியோ யானையோ எதுவும் செய்யாது என சிலிர்ப்புடன் சொன்னார்கள்.
இப்போது, சாட்ஷாத் அந்த ஐயப்பனே வனத்துக்குள் செல்கிறான். புலி வேட்டையாடச் செல்கின்றான். புலியின் பாலை எடுத்து வரக் கிளம்பியுள்ளான். தனியொரு ஆளாய் வனத்துக்குள் புகுந்திருக்கிறான்!
தெய்வத்துக்குத் துணை தெய்வம்தான்.
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!
- ஐயன் வருவான்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT