Published : 15 Feb 2018 12:36 PM
Last Updated : 15 Feb 2018 12:36 PM
நீங்கள் அவளை அன்னையாகப் பார்க்கத் தொடங்குவீர்கள். அவள், உங்களை தன் குழந்தையாகவே பாவித்து, அருள்பாலிப்பாள். இதுதான் அவளின் அன்பு. இதுவே அவளின் கனிவு. அதுதான் அவளுடைய அருள். அதுவே அவளின் சக்தி. அவள்... காளிகாம்பாள்!
காளிகாம்பாள், கருணையும் கனிவும் கொண்டவள். நம் வாழ்வில் ஒரு கஷ்டமென்றால்... அவள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கமாட்டாள். இன்னும் கஷ்டத்தைக் கொடுத்து இன்னும் இன்னும் துயரங்களைத் தந்து இம்சிக்கமாட்டாள். ‘நீ இதையெல்லாம் கொடு. நான் உனக்கு இதையெல்லாம் தருகிறேன்’ என்கிற பேரமெல்லாம் காளிகாம்பாளிடம் செல்லுபடியாகாது.
அரிசி கொடுத்து அக்கா உறவென்ன... என்பார்கள். இவள் நமக்கெல்லாம் அன்னை. கொண்டு வந்தாலும் தாய். வராவிட்டாலும் தாய். காளிகாம்பாள் எனும் அன்னையும் நாம் என்ன கொண்டு வந்தாலும் சரி... வராது வெறும் கையுடன் அவளைப் போய்ப் பார்த்தாலும் சரி... பாகுபாடுகள் பார்க்காமல், அரவணைப்பதில் வள்ளல் அவள்!
சென்னை பாரிமுனையில் கோயில் கொண்டிருக்கும் காளிகாம்பாளை தரிசனம் செய்யும் போது இவற்றையெல்லாம் உணருவீர்கள்.
அந்தப் பெண்மணிக்கு வெளியூர். சென்னைக்கு எப்போதாவது வருவார். வந்து உறவுக்காரர்கள் வீட்டு விசேஷத்தில் கலந்துகொண்டுவிட்டு, கிளம்பிச் சென்றுவிடுவார். அப்படி ஒருமுறை அந்தப் பெண்மணி வந்திருந்த போது, அவளின் கணவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லை. மயங்கிச் சரிந்தவரை தூக்கியெடுத்துக் கொண்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்கள்.
மயக்கத்தில் இருந்து மீளவே இல்லை அவர். மாரடைப்பு என்றார்கள். ஆஞ்சியோ செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். காசுபணத்துக்குக் குறைவில்லை. வசதி வாய்ப்புகளெல்லாம் இருக்கின்றன. ஆனால் என்ன... இப்போது கணவர் கண் விழிக்கவேண்டும். பழையபடி எழுந்து நடமாட வேண்டும். இதுதான் அந்தப் பெண்மணியின் பிரார்த்தனை.
ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமாக அலைந்து கொண்டிருந்தவர், ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்குச் செல்ல ஆட்டோவில் ஏறினார். அந்த ஆட்டோவில் இருந்த படத்தைப் பார்த்தார். அது... காளிகாம்பாள் திருவுருவப் படம். படத்தையே பார்த்தார். அதில் உள்ள காளிகாம்பாளும் இவரையே பார்ப்பது போல் இருந்தது. ‘இது எந்த அம்மன்ங்க’ என்று டிரைவரிடம் கேட்டார். காளிகாம்பாள் என்று சொன்னார் அவர். சிறிது மெளனம்.
‘இந்தக் கோயில் எங்கே இருக்குப்பா’ என்றார். அவர் இடம் சொன்னார். மீண்டும் மெளனம்.
’அந்தக் கோயிலுக்கு விடுங்களேன்’ என்றார்.
வண்டி, பாரிமுனை நோக்கி சென்றது. வழியெல்லாம் அந்தப் படத்தையே பார்த்துக் கொண்டே வந்தார் அவர். கோயிலை அடைந்தார்கள். வாசலில் இறங்கினார்கள். விறுவிறுவென உள்ளே சென்றார் அந்தப் பெண்மணி.
அங்கே... கருவறை. காளிகாம்பாள் வீற்றிருந்தாள். ‘இப்படி வந்து உக்காருங்க’ என்றார்கள். அப்படியே காளிகாம்பாளுக்கு முன்னே வந்து அமர்ந்தார்கள். அவரும் வந்து உட்கார்ந்தார். அம்பாளைப் பார்த்தார். பார்த்துக் கொண்டே இருந்தார். சுற்றி உட்கார்ந்திருந்தவர்கள், அரளிப் பூமாலை கொடுத்தார்கள். தாமரை மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையை வழங்கினார்கள். ரோஜாப்பூ மாலையைக் கொடுத்தார்கள். அந்த அம்மாள், தன் இரண்டு கைகளையும் அம்பாளைப் பார்த்து நீட்டிய நிலையிலேயே இருந்தார்.
’எல்லாரும் அரளியும் தாமரையுமா கொடுக்கறாங்க. எல்லாரும் ரோஜாவும் சம்பங்கியுமா தர்றாங்க. நான் பணம் எடுத்துட்டு வரலை. இப்ப எங்கிட்ட காசு இல்ல. என் கணவர் இப்ப ஹார்ட்ல பிரச்சினைன்னு ஆஸ்பத்திரில இருக்கார். என் கணவரை நீதான் பாத்துக்கணும். நீதான் காப்பாத்தணும். என் தாலிக்கு எந்தப் பங்கமும் வராம, நீதான் காபந்து பண்ணனும். என் கணவரை குணமாக்கி, என் தாலியைக் காப்பாத்திக் கொடுத்தீனா, என் தாலியவே தரேன். பத்து பவுன் தாலி இது. அந்தத் தாலியை, உனக்கோ ஏழைப் பொண்ணோட கல்யாணத்துக்கோ தந்துடுறேன்’’ என்று கண்ணீரும் கவலையுமாய் அழுதார். அழுதபடியே தன் கோரிக்கையை வைத்தார்.
மாங்கல்யத்தைத் தருபவளும் அவள்தான். மாங்கல்யத்தைக் காப்பவளும் அவளே! சும்மா இருந்துவிடுவாளா. முதன்முதலாக தன் சந்நிதிக்கு வந்திருப்பவளை, கைவிட்டுவிடுவாளா. கைதூக்கி கரை சேர்ப்பதுதானே அவளின் வேலை.
அடுத்த நான்காம் நாள், ஆஞ்சியோக்ராம் செய்யப்பட்டது. ஆபரேஷன் எதுவும் தேவையில்லை என்று சொல்லப்பட்டது. ஐந்தாம் நாள், மருத்துவமனைவியில் இருந்து வீட்டுக்கு வந்தார்கள். ஒன்பதாம்நாள், சாதாரண செக்கப்பிற்காக மருத்துவமனைக்குச் சென்றார்கள். ‘ஒரு பிரச்சினையும் இல்ல. ஊருக்குக் கிளம்பலாம்’ என்று டாக்டர்கள் சொல்ல... முதலில் நேராக காளிகாம்பாள் கோயிலுக்கு வந்து நின்றார்கள். 108 தாமரைகள் கொண்ட மாலையை செய்யச் சொன்னார்கள். வழியில் அரக்கு கலரில் அம்பாளுக்கு புடவையும் வாங்கிவைத்திருந்தார்கள். மாலை கட்டக் காத்திருந்தார்கள். கை கொள்ளாத அரளி மாலையும் தாமரைப் பூமாலையும் சம்பங்கியும் ரோஜாவும் கொண்ட மாலையுமாய் வாங்கிக் கொண்டு, அவளின் சந்நிதியில் உட்கார்ந்தார்கள். கூடவே எலுமிச்சை மாலையும் வாங்கியிருந்தார்.
மீண்டும் அந்தப் பெண்மணி வெடித்துக் கதறினார். அம்பாளுக்கு அத்தனையும் சமர்ப்பித்தார். ‘ என் வேண்டுதலை நிறைவேத்திட்டே தாயே’ என்று பூரித்துப் போனார்.
அங்கேயே மாங்கல்யச் சரடு வாங்கி, அம்பாள் சந்நிதியிலேயே கட்டிக் கொண்டார். கழுத்தில் எடைகொள்ளாத அளவுக்கு இருந்த பத்துபவுன் தாலியை அப்படியே எடுத்து, புடவைத் தலைப்பில் முடிந்து கொண்டாள்.
காளிகாம்பாளுக்கு புடவை சார்த்தப்பட்டது. அரளி மாலைகளும் தாமரைப் பூ மாலையும் சமர்ப்பிக்கப்பட்டன. குங்கும அர்ச்சனை செய்யப்பட்டது. நெக்குருகி வேண்டிக் கொண்டார்கள். ‘ சொன்னபடி என் புருஷனையும் தாலியையும் காப்பாத்திக் கொடுத்திட்டேம்மா. நான் சொன்னபடி, என் தாலியை ஒரு ஏழைப் பெண்ணோட கல்யாணத்துக்கு கொடுத்துடுறேன்’ என்று வேண்டியபடி, கிளம்பிச் சென்றார்.
காளிகாம்பாள், நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதையெல்லாம் செய்து தருவாள். அதேபோல் அவள் உங்களுக்குச் செய்ய நினைப்பதையெல்லாம் வழங்கியே தீருவாள். குறிப்பாக, மாங்கல்யத்துக்கு சோதனை வரும்போது, மாங்கல்யத்தை காபந்து செய்து, மாங்கல்யத்துக்குப் பலம் கூட்டித் தந்தருள்வாள் கருணைக்கார காளிகாம்பாள்!
ஒரேயொரு முறை அவளின் சந்நிதிக்கு எதிரே, அவளுக்கு எதிரே அமர்ந்து அவளைக் கவனித்துப் பாருங்கள். அந்தக் கனிவுச் சிரிப்பை கூர்ந்து கவனியுங்கள். அப்போதே உங்கள் துக்கமெல்லாம் பறந்தோடிவிடும். கஷ்டங்களெல்லாம் காணாமல் போய்விடும்.
தாலி காக்கும் காளியைக் கண்ணாரத் தரிசியுங்கள்!
- தரிசனம் தொடரும்
தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT