Published : 22 Feb 2018 10:37 AM
Last Updated : 22 Feb 2018 10:37 AM
வி
ழிகளால் பார்க்க முடியாதவையும் செவிகளால் கேட்க முடியாதவையும் அறிவால் உணர முடியாதவையும் மனிதருக்கு எப்போதும் ஒருவித அச்சத்தையே ஏற்படுத்தும். அந்த அச்சத்தை தாம் உருவாக்கிய நம்பிக்கையைக் கொண்டு கடக்க முயல்வார்கள். அந்த நம்பிக்கைகள் பார்க்க முடியாதவற்றுக்கு ஓர் உருவையும் கேட்க முடியாதவற்றுக்கு ஓர் ஒலியையும் உணர முடியாதவற்றுக்கு ஓர் உணர்வையும் அளிக்கும்.
அவற்றின் மூலம் தெளிவற்றவை குறித்து ஒரு தெளிவை மனிதர்கள் கற்பித்துக்கொள்கிறார்கள். அதன் மூலம் நிச்சமற்றவைக்கு ஒரு நிச்சயத் தன்மையை உருவாக்கிக்கொள்கிறார்கள். ஏதோ ஒரு நம்பிக்கையைப் பிடித்துக்கொள்ளாமல் மனிதரால் ஒரு நிமிடம்கூடக் கடக்க முடியாது அது நம்பிக்கையற்றவர்களுக்கும் பொருந்தும்.
ஏனென்றால், நம்பிக்கையின்மையும் ஒருவித நம்பிக்கைதான். மனிதரின் வாழ்வுக்குக் காற்று, நீர், உணவு எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு மனிதரின் வாழ்வுக்கு நம்பிக்கையும் இன்றியமையாத ஒன்று.
சமயங்கள் எல்லாம் தோன்றும்முன், பண்டைக் காலத்தில் கிரீஸ் நாட்டில் வாழ்ந்த ஒருவனுக்கு திடீரென்று ஒரு சந்தேகம் ஏற்பட்டது. மாலையில் மறைந்த சூரியன் காலையில் மீண்டும் உதிக்குமோ என்பதே அந்தச் சந்தேகம். இன்று நமக்கு நகைப்பை ஏற்படுத்தும் அந்தச் சந்தேகம் அன்று நகைப்பை ஏற்படுத்தவில்லை. மாறாக, ஒரு வேளை உதிக்கவில்லை என்றால் என்ன ஆகும் என்ற பயத்தையே ஏற்படுத்தியது. அந்தப் பயம் காட்டுத் தீயைப் போன்று நாடெங்கும் பரவியது. மக்கள் அதற்கு விடைதேடி நாட்டின் தலைவரிடம் சென்றனர்.
தலைவருக்கும் விடை தெரியாது. ஆனால், தெரியாது என்று சொல்வதற்கு அவரின் அகங்காரமும் ஆணவமும் அனுமதிக்கவில்லை. அவர் சூரியனுக்குப் பலவிதக் காணிக்கைகளும் பலிகளும் கொடுத்து மனமுருகி மன்றாடிச் சூரியனை அழைக்கச் சொன்னார். மக்களும் அவ்வாறே செய்தனர். மறுநாள் சூரியன் உதித்தது. தலைவர் கொண்டாடப்பட்டார். அந்தச் சடங்குகள் வாடிக்கையாகி நிலைபெற்றன.
புரிதல் அகற்றிய பயம்
ஆனால், இன்று நமக்குச் சூரியன் உதிக்குமா உதிக்காதா என்று சந்தேகமோ பயமோ தோன்றுவதில்லை. ஏனென்றால், பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்பது நமக்குத் தெளிவாகத் தெரியும். அது மட்டுமின்றி, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நம்பினாலும் நம்பாவிட்டாலும் சூரியன் தன் கடமையைத் தன் போக்கில் நிறைவேற்றிக்கொண்டுதான் இருக்கும் என்பதும் நமக்குத் தெரியும்.
இந்தத் தெளிவும் புரிதலும் சூரியன் குறித்த பயத்தை நம்மிடமிருந்து அகற்றிவிட்டன. இன்று நாம் அதைப் பற்றிப் பேசுவதுமில்லை, எண்ணுவதுமில்லை, கவனிப்பதுமில்லை. ஏனென்றால், இன்று நமக்கு அந்த நிகழ்வு இயல்பாக, இயற்கையாக, வாடிக்கையாக நடக்கும் ஒன்று. ஆனால், இன்றைய இந்த நிலையை அடைவதற்கு. நமக்கு அன்றைய அந்த நம்பிக்கைதான் உதவியது.
பிரம்மாண்டமான இயற்கையின் முன் நாம் அனைவரும் ஒரு சிறு துகள்தான். இயற்கையின் முன்னே நமது நிலை அப்படியென்றால் அதைப் படைத்த கடவுளின் முன் நாம் எம்மாதிரம்? அதை நாம் அறியவோ பார்க்கவோ முடியுமா என்றால் நிச்சயம் முடியாதுதான். கடவுளைப் பற்றி உணர்வதும் புரிவதும் நம் புலன்களின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று. ஆனால், இந்தத் திறனின்மையை ஒப்புக்கொள்வதற்கு நமது அகங்காரத்தை இழக்க வேண்டியிருக்கும்.
ஒன்றுக்கும் பயனற்ற அந்த அகங்காரம் ஒழிந்தால், நாம் கடவுளைப் பற்றிப் பேச மாட்டோம். கடவுளின் மேல் நாம் வைத்திருக்கும் நம்பிக்கையை உலகுக்குப் பறைசாற்ற விழைய மாட்டோம். அந்த நம்பிக்கைதான் உயர்வானது என்று பிறரை இகழ மாட்டோம். ஏனென்றால், அகங்காரத்தைத் தொலைத்த பின் நாம் தனியாக இருப்பதில்லை.
நாம் அந்த நம்பிக்கையில் கரைந்து கடவுளிடம் ஐக்கியமடைந்து இருப்போம். இவ்வாறு தன்னறிவைத் தொலைத்து அகங்காரத்தைக் களைந்து கேள்விகள் எவையுமற்று கடவுளிடம் கலந்து ஐக்கியமானவர்தான் அஹ்மது இப்னு ஹார்ப்.
கடமையில் ஏற்பட்ட சலிப்பு
அவர் 764-ம் வருடம் ஈராக்கின் நிஷாப்பூரில் பிறந்தார். மிகப் பெரிய சூபி ஞானியாகப் போற்றப்படும் அஹ்மது ஆரம்ப காலங்களில் ஒரு படைவீரராக இருந்தார். சிறு வயதிலேயே பயத்தைப் பற்றி அவர் எண்ணியதில்லை. அவருக்குப் பயம் என்றால் என்னவென்றே தெரியாது. அந்த அளவுக்கு அவர் ஒரு அப்பழுக்கற்ற வீரராகத் திகழ்ந்தார். அவர் கலந்து கொண்ட போர்களும் அந்தப் போர்களில் அவர் மாய்த்த உயிர்களும் கணக்கில் அடங்காதவை.
ஆக, தோல்வி என்றால் என்னவென்று அவருக்கு இறுதிவரை தெரியாமலே போனது. ஆனால், ஆச்சரியம் என்னவென்றால் எந்த வெற்றியும் அவருக்குத் தலைக்கனம் அளித்தது இல்லை.போர்களில் அவர் மாய்த்த எந்த உயிரும் அவரைக் குற்றஉணர்வில் மூழ்கடிக்கவில்லை. அவரைப் பொறுத்தவரை அது அவரின் கடமை, அவ்வளவுதான்.
ஆனால், அந்தக் கடமை ஒருவித சலிப்பை ஒருகட்டத்தில் அவருக்கு ஏற்படுத்தியது. போர்களின் வெற்றி அவருக்கு அயர்ச்சியை அளித்தது. நாட்டமற்ற ஒன்றைத் தொடர்வது அவருக்கு அர்த்தமற்றதாக இருந்தது. தனக்கு நாட்டமானது எதுவென்பதைத் தேடி பாக்தாத்துக்கு அஹ்மது வந்தார். அங்கு சூபி ஞானிகளுடன் ஏற்பட்ட அறிமுகம் அவரது எஞ்சிய வாழ்வை மாற்றியமைத்து, அவரது புதிய அடையாளத்தை வரலாற்றில் நிலைபெறச் செய்தது.
அஹ்மது, சிறுவயது முதல் எதைச் செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்வார். இதனால், ஞானிகளின் அறிமுகத்துக்குப் பின் முழு ஈடுபாட்டுடன் சூபி ஞானத்தை அவர்களிடமிருந்து கற்றார். அவருடைய முயற்சியின் வீரியம் குறுகிய காலத்திலேயே அஹ்மதுவை ஆன்மிக ஞானத்தில் மேலெழுப்பிப் பேருண்மையில் கரையவைத்தது. அவர் வசிக்கும் வீட்டில் ஒளிரும் ஆன்மிக ஒளி, மக்களை ஈர்த்தது.
அவரது பக்கத்து வீட்டில் பஹ்ராம் எனும் வணிகர் வசித்து வந்தார். அவர் ஜொராஷ்ட்ரிய மதத்தைச் சேர்ந்தவர். ஒரு நாள் அவரது கூட்டாளி எடுத்துச் சென்ற சரக்குகள் கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டன. இதைக் கேள்விப்பட்ட அஹ்மது அவருக்கு ஆறுதல் அளிக்க அவருடைய வீட்டுக்குச் சென்றார். அப்போது பஹ்ராம் அக்னியை மூட்டி வழிபாட்டில் மூழ்கியிருந்தார். வழிபாடு முடிந்ததும் அஹ்மதுவை மிகுந்த ஆச்சரியத்துடன் வரவேற்றார்.
அப்போது பாக்தாத்தில் பெரும் பஞ்சம் நிலவியதால் ஒருவேளை உணவு நாடி வந்திருப்பாரோ என்றெண்ணி அஹ்மதுவுக்கு உணவு தயார் செய்யச் சென்றார். அதைப் புரிந்துகொண்ட அஹ்மது அவரை நிறுத்தித் தான் அவருக்கு ஆறுதல் சொல்லவே வந்திருப்பதாகத் தெரிவித்தார்.
வெளிச்சம் வழங்கிய அண்டை வீட்டு வணிகர்
“எனக்கு எந்த வருத்தமும் துயரமும் இல்லை நண்பரே, உண்மையில் நான் மூன்று காரணங்களுக்காக மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். முதல் காரணம் அந்தக் கொள்ளைக்கார்கள் பிறருடையதைத் திருடாமல் என்னுடையதைத் திருடினர். இரண்டாவது காரணம், முழுவதையும் திருடாமல் பாதியை மட்டும்தான் திருடினர்.
மூன்றாவது எனது புண்ணியத்தைத் திருடாமல் எனது உடைமைகளை மட்டுமே திருடினர். அதற்குத்தான் நீங்கள் வரும்போது கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டு இருந்தேன் ” என்று பர்ஹாம் தெரிவித்தார். அஹ்மது பதில் எதுவும் சொல்லாமல் கண்களில் நீர் மல்க வீடு திரும்பினார்.
அந்தச் சம்பவத்துக்குப் பின் அஹ்மது வாழ்க்கையில் ஆதங்கம் என்ற ஒன்றே இல்லாமல்போனது. எது நடந்தாலும் அதை நன்றியுடன் ஏற்றுக்கொண்டார். தன் அறிவைத் தொலைத்து அகங்காரத்தை விட்டொழித்துப் பேருண்மையில் கொஞ்சம் கொஞ்சமாகக் கரையத் தொடங்கிய அஹ்மது 849-ம் வருடம் தனது எண்பத்தைந்தாவது வயதில் முற்றிலும் கரைந்துபோனார்.
அன்று தன்னை நாடி வந்தவர்களின் வாழ்வுக்கு வெளிச்சம் அளித்தவர் இன்று தன் எழுத்துகளின் மூலம் வெளிச்சம் அளித்துக்கொண்டிருக்கிறார். அந்த வெளிச்சத்துக்கு ஏது இருள்?
(ஞானப் பொக்கிஷம் திறக்கும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT