Published : 10 Jan 2018 04:16 PM
Last Updated : 10 Jan 2018 04:16 PM
ஐயப்ப பக்தர்களே... உங்களுக்காக..!
முன்பெல்லாம் பம்பா நதி வரைக்கும் வாகனங்கள் வருவதற்கு அனுமதி வழங்கினார்கள். ஆனால் இப்போதெல்லாம் இரண்டு கிலோ மீட்டருக்கு முன்னதாகவே நிறுத்திவிடுகிறார்கள். என்ன செய்வது என்று வருத்தத்துடன் சொல்கிறார்கள் தேவ ஸம் போர்டு அதிகாரிகள். ‘நாளுக்கு நாள் ஐயப்பனைத் தரிசிக்க வரும் பக்தர்கள் கூடிக்கொண்டே இருக்கிறார்கள். கார்த்திகையில் கொஞ்சமாக வருவார்கள். கார்த்திகையின் கடைசி வாரத்தில் அதிகமாகும். அடுத்து மார்கழி வந்துவிட்டால், தினமும் தேர்க்கூட்டம்தான்... திருவிழாக் கூட்டம்தான். அதிலும் மார்கழியின் பாதிநாள் முடிந்து ஜனவரி 1ம் தேதி வந்துவிட்டால், இடைவிடாமல் சரணகோஷம் கேட்டுக் கொண்டே இருக்கும். எங்கு பார்த்தாலும் பக்தர்கள்... பக்தர்கள்... பக்தர்கள். அந்த பக்தர்களைக் காண்பதே பேரானந்தம்’’ என்று ஒருமுறை சபரிமலையின் தந்த்ரி மகிழ்ச்சி பொங்கச் சொன்னார்.
பம்பா நதி. புண்ணிய நதிகளில் இதுவும் ஒன்று. ஏற்கெனவே இருந்த புண்ணியத்துடன், இந்தக் கரையில்தான் மணிகண்ட சுவாமி குழந்தையாக வந்து தவழ்ந்தான் என்பதால் இன்னும் புனித்துவம் கூடிற்று. புண்ணிய நதியாக இன்னும் களையுடன் காணப்பட்டு வருகிறது.
இதுவரை கோடிக்கணக்கான பக்தர்கள் இங்கே பம்பா நதியில் நீராடியிருக்கிறார்கள்.இன்னும் இன்னும் எத்தனையெத்தனை கோடி பக்தர்கள் இங்கு வந்து நீராடுவார்களோ... அது ஐயப்ப சுவாமிக்கு மட்டுமே தெரிந்த காலக்கணக்கு!
பம்பா நதி எனும் புண்ணிய நதியின் தீர்த்தத் துளிகளே நம் பாவங்களையெல்லாம் போக்கவல்லது. பெரும்பான்மையான கோயில்களில், தலம், தீர்த்தம், மூர்த்தம் என்பது பெருமைக்கு உரியனவாக, மகோன்னதமானதாக அமைந்திருக்கும். அப்படியொரு தீர்த்தப் பெருமை கொண்ட ஸ்தலம்... சபரிமலை!
இங்கே... பம்பா நதிக்கரையில், ஒருவிஷயம். பக்தர்கள் இதற்காகவே அரிசி, பருப்பு, வெல்லம் முதலான உணவு செய்யத் தேவையான பொருட்களைக் கொண்டு வந்திருப்பார்கள். அந்தப் பொருட்களைக் கொண்டு அங்கே உணவு சமைப்பது, பார்க்கவே பிரமிப்பாகவும் பேரனாந்தமாகவும் இருக்கும். இதற்கு ’பம்பாஸத்தி’ என்று பெயர்.
அதாவது, கிட்டத்தட்ட ஒரு விருந்து போல் களைகட்டியிருக்கும். சமையல் வாசனை அந்தப் பகுதியையே சூழ்ந்து, மணம் பரப்பியிருக்கும். இந்த விருந்து தயார் செய்வதும் சரி... அதை உண்பதும் சரி... சடங்காகவும் சம்பிரதாயமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது ஐயப்ப பக்தர்கள் அங்கே முன்பின் தெரியாத பக்தர்களுக்கும் உணவை வழங்கிக் கொள்வார்கள். அவர்களிடம் இருந்து உணவைப் பெற்றுக் கொள்வார்கள். எல்லோரும் ஒரே குடும்பம். ஐயப்ப குடும்பம். சாஸ்தாவின் குழந்தைகள்!
உணவு தயாரிக்க அடுப்பு மூட்ட வேண்டும். அப்படி எரிந்து சாம்பாலாகி விட்டதை, அதில் இருந்து விபூதி போல் நெற்றியில் இட்டுக் கொள்வார்கள். மேலும் வீட்டுக்கு எடுத்து வந்து, குடும்பத்தாரை நெற்றியில் இட்டுக் கொள்ளச் சொல்வார்கள். மிகவும் சக்தி வாய்ந்த, மகிமை மிக்கது இந்த விபூதிப் பிரசாதம்!
இனிய பக்தர்களே! இதோ... மகர ஜோதி நன்னாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. மகரஜோதிக்கு முந்தைய நாள் இரவை, ‘பம்பா விளக்கு” என்று போற்றுகிறார்கள். அங்கே கிடைக்கக் கூடிய, சின்னச்சின்ன மூங்கில் சப்பரங்களில், அகல்விளக்கை ஏற்றுகிறார்கள். அல்லது மெழுகுவர்த்தியை உள்ளே வைத்து ஏற்றி, நதியில்... பம்பா நதியில் விடுகிறார்கள். இதை பம்பா விளக்கு என்றும் விளக்கு நகர்த்தும் விழா என்றும் சொல்லுகிறார்கள். மகரஜோதிக்கு முந்தைய நாளை ஒளியுடன் கொண்டாடுகிற வைபவமாகவும் பார்க்கிறார்கள். பம்பா நதியைப் போற்றி ஆராதிக்கும் விழாவாகவும் சிலர் சொல்கிறார்கள். எப்படிச் சொன்னாலும் என்ன... ஜோதி சொரூபனை எப்படிக் கொண்டாடினால் என்ன. அந்தப் பம்பாவாசனை எப்படி ஆராதித்தால் என்ன?
அதையடுத்து கணபதிபெருமான், ராமபிரான் சந்நிதி என அடுத்தடுத்து அற்புதமான தரிசனங்கள். அப்பாச்சி மேட்டை அடைந்தால் இப்பாச்சிக்குழி என அதலபாதாளத்தைப் பார்க்கலாம். கன்னிசாமிகள், இங்கே பொரிகளையும் மாவு உருண்டைகளையும் வேண்டிக்கொண்டு வீசுவார்கள். இப்படியொரு பழக்கம் எப்படி வந்தது எனத் தெரியவில்லை. ஆனால் பல வருடங்களாகவே இதைச் செய்து வேண்டிக் கொள்கின்றனர் பக்தர்கள்!
அப்பாச்சி மேடு வந்துவிட்டால்... அவ்வளவுதான். அடுத்து நம் வாழ்க்கையையே மேட்டுக்குக் கொண்டு சென்று உயர்த்தி அருளக் கூடிய ஒப்பற்ற தெய்வமான ஐயன் ஐயப்ப சுவாமி, குடிகொண்டு ஆட்சி நடத்தும் சபரிபீடம் நான்கு கிலோமீட்டர் தூரம்தான். உலகாயத பயணத்தை பல்லாயிரம் கிலோ மீட்டர் கொண்ட வாழ்க்கைப் பயணத்தை கடந்து கொண்டிருக்கும் நமக்கு, இந்த நான்கு கிலோ மீட்டர் என்பதெல்லாம் அப்படி சட்டென்று பறந்துவிடும். அதுவரை கொஞ்சம் சாய்ந்து சாய்ந்து மெல்ல மெல்ல நடப்பவர்கள் கூட, அப்பாச்சி மேட்டை அடைந்ததும் சரசரவென நடக்கத் தொடங்குவார்கள். விறுவிறுவென வேகம் கூட்டுவார்கள். தடதடவென பாய்ந்தோடுவார்கள். கடகடவென கோஷங்கள் முழங்கி, பரபரவென சாஸ்தாவை தரிசிக்க விரைந்து கொண்டிருப்பார்கள்.
அது காணக் கிடைக்காத தரிசனம். இன்னொரு விஷயம்... நம்மைப் பார்ப்பதற்கு,அங்கே தயாராகி விட்டான் சபரி சாஸ்தா!
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!
- ஐயன் வருவான்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT