Published : 29 Jan 2018 10:52 AM
Last Updated : 29 Jan 2018 10:52 AM
நாளை ஒருநாள்தான் தைப்பூசத் திருநாளுக்கு! முருகனுக்கு உகந்த தைப்பூசத் திருநாளில், கந்தக் கடவுளை வணங்கி அவனருளைப் பெறுவோம்.
இன்றைக்கு திண்டிவனம் என்று சொல்கிறோமே... அதாவது சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திண்டிவனத்துக்கு, அந்தக் காலத்தில் என்ன பெயர் தெரியுமா. இந்தப் பகுதியை என்ன சொல்லி அழைத்தார்கள் என்பதை அறிவீர்களா?
இந்தப் பகுதியை ஒய்மா நாடு என்று அழைத்தார்கள். சங்ககாலத்தில் இதை ஒய்மா நாடு என்று அழைக்கப்பட்டது. இந்த தேசத்தை ஆட்சி செய்த மன்னன், இங்கே உள்ள முருகப்பெருமானை வணங்கிவிட்டுத்தான் போருக்குச் செல்வான் என்கீறது வரலாறு.
அதாவது, இன்றைக்கு திண்டிவனம் என அழைக்கப்படுகிற ஊரில், கிடங்கல் எனும் கோட்டையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தான் நல்லியக்கோடன். நல்லாட்சி புரிந்தவன். இறை பக்தி மிகுந்தவன். குறிப்பாக, சிறந்த முருக பக்தனாகத் திகழ்ந்தவன்!
நல்லியக்கோடனின் தேசத்தைக் கைப்பற்றுவதற்காக, சோழர்கள் திட்டமிட்டுள்ள சேதி, ஒற்றர்கள் மூலமாக மன்னனுக்கு தகவல் வந்து சேர்ந்தது. அதையடுத்து உப்புவேலூர் எனும் சின்னஞ்சிறிய கிராமத்தில் பதுங்கி அமைச்சர்களுடன் கூடி, வியூகம் அமைத்தானாம்!
ஒருநாள்... முன்னூற்று மங்கலத்தில் உள்ள தன்னுடைய இஷ்ட தெய்வமான முருகப்பெருமானை மனம் உருகி வேண்டியபடியே தூங்கிப் போனான் நல்லியக்கோடன். அப்போது அவனுடைய கனவில் வந்தக் கந்தக்கடவுள், ‘’தாமரை மலர்களால் ஆயுதங்களை மறைத்து எடுத்து வந்து என் சந்நிதியில் வை. பூஜை செய்துவிட்டு; தைரியமாகப் போர் செய்யக் கிளம்பு. வேல் படையாக இருந்து காத்தருள்வேன்’’ என அருளி மறைந்தார் முருகப்பெருமான்.
அதன்படி, கிடங்கல் கோட்டையில் இருந்து ஆயுதங்கள் முன்னூற்றுமங்கலம் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டன. அங்கே முருகப்பெருமான் சந்நிதியில் ஆயுதங்கள் வைக்கப்பட்டன. முருகப்பெருமானுக்கும் ஆயுதங்களுக்கும் சேர்த்து பூஜைகள் செய்யப்பட்டன.
‘யாமிருக்க பயமேன்’ என்று முருகப் பெருமான் அருளியதை உள்வாங்கியபடி, அடுத்து போரில் ஈடுபட்டான் மன்னன்.
சூரிய ஒளி பட்டு தாமரைப் பூக்கள் மலர்ந்தன. அவ்வளவுதான்! உள்ளேயிருந்த வண்டுகள் பறந்து வந்து, எதிரிப் படையினரின் யானை களின் காதுகளுக்குள் புகுந்தன. இதில் மதம் பிடித்தாற்போல் யானைகள் தலை தெறிக்க ஓடின. எதிரிதேசத்து வீரர்கள் செய்வதறியாமல் திகைத்து கைபிசைந்து தவிக்க... நல்லியக் கோடன் விட்ட அம்பு மொத்தமும் முருகப்பெருமானின் வேலாக மாறின. எதிரிகளை அழித்தன என்கிறது ஸ்தல வரலாறு!
அந்த முன்னூற்று மங்கலம் இன்றைக்கு முன்னூர் என்று அழைக்கப்படுகிறது. திண்டிவனம் அருகே உள்ள முன்னூரில் உள்ளது ஸ்ரீஆடல்வல்லான் சிவாலயம். இங்கே சிவபெருமானின் திருநாமம் ஆடவல்லீஸ்வரர். இந்தத் தலத்தில், நல்லியக்கோடனுக்கும் இந்தநாட்டுக்கும் அருளிய முருகப்பெருமான் அற்புதமே உருவாகக் கோயில் கொண்டிருக்கிறார்.
பன்னிரு கரங்களிலும் ஆயுதம் ஏந்தியபடி எதிரிகளை அழிக்கக் காத்திருக்கிறார். மயில் மீது அமர்ந்து, போருக்குச் செல்லும் கோலத்தில், அதே வேகத்துடன் காட்சி தருகிறார் ! இவரை வணங்கினால், எதிரிகள் தொல்லை ஒழியும். தைரியம் பிறக்கும் என்கிறார் முன்னூர் ரமேஷ்.
தைப்பூச நன்னாளில், கிருத்திகை நட்சத்திர நாளில், சஷ்டி திதியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முன்னூருக்கு வந்து முருகக் கடவுளை மனதாரத் தரிசித்துப் பிரார்த்தனை செய்யுங்கள். வாழ்வில் முன்னுக்கு வரச் செய்து அருள்வார் மயில்வாகனன்.
-வேல்வேல்
தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT