Published : 15 Feb 2024 06:02 AM
Last Updated : 15 Feb 2024 06:02 AM

திருச்செந்தூர் மாசித் திருவிழா கொடியேற்றம்: பிப். 23-ம் தேதி தேரோட்டம்

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 23-ம்தேதி நடைபெறுகிறது.

கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. அதிகாலை 3 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கொடிப்பட்டம் 9 சந்திகளிலும் வலம் வந்தது.

தொடர்ந்து, கொடிப்பட்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அதிகாலை 4.52 மணிக்கு கோயில் உள்பிரகாரத்தில் உள்ளசெப்பு கொடிமரத்தில் மேளதாளங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. கொடிமர பீடத்துக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து, கொடிமர பீடத்தில் தர்ப்பை புல், பட்டு வஸ்திரங்கள் சார்த்தப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, காலை 6.18 மணிக்கு வேதமந்திரம் முழங்க, சோடச தீபாராதனை நடைபெற்றது. கட்டியம் கூறப்பட்டு, பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. வேதபாராயணம், தேவாரம், திருப்புகழ் பாடப்பட்டது.

நிகழ்ச்சியில், திருச்செந்தூர் சார்பு நீதிபதி வஷித்குமார், திருவாவடுதுறை ஆதீனம் மத் வேலப்பன் தம்பிரான் சுவாமிகள், கோயில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை அப்பர் சுவாமி தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வீதிகளில் உழவாரப்பணி செய்து கோயிலை சேர்ந்தார். இரவு பெலிநாயகர் அஸ்திரதேவருடன் தந்தப் பல்லக்கில்கோயிலில் இருந்து புறப்பட்டு, 9 சந்திகளில் உலா வந்து கோயிலை சேர்ந்தார்.

இன்று (பிப்.15) காலை சுவாமிகுமரவிடங்க பெருமான் சிங்ககேடய சப்பரத்திலும், தெய்வானை அம்மன் சிறிய பல்லக்கிலும், மாலையில் சுவாமி சிங்க கேடய சப்பரத்திலும், அம்மன் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளி, பரிவாரமூர்த்திகளுடன் 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது. வரும் 24-ம் தேதி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. வரும் 25-ம் தேதி சுவாமி-அம்மன் மஞ்சள்நீராட்டு விழாவுடன் மாசித் திருவிழாநிறைவு பெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x