Last Updated : 23 Dec, 2017 01:16 PM

 

Published : 23 Dec 2017 01:16 PM
Last Updated : 23 Dec 2017 01:16 PM

குருவே... யோகி ராமா..! 23: எட்டு லிங்கமும் வில்வமும்..!

பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்

பன்னெடுங்காலப் பழைமை கொண்ட பூமியான திருவண்ணாமலை, ஒவ்வொரு முறை செல்லும் போதும் ஒவ்வொரு வித உணர்வுகளை அள்ளித் தந்து கொண்டே இருக்கும் அதிசய பூமி என்று சொல்லிச் சொல்லிச் சிலாகிக்கிறார்கள் பக்தர்கள். முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு வரை, கிரிவலம் வந்த பக்தர்களின் எண்ணிக்கை, மிகமிகக் குறைவுதான். நூற்றுக்கணக்கில் மட்டுமே பக்தர்கள் அப்போது கிரிவலம் வருவார்கள். இது பெளர்ணமி கிரிவலத்தின் கணக்கு!

ஆனால் இப்போது பெளர்ணமி கிரிவலம் என்றில்லை. வருடம் 365 நாளும் எங்கிருந்தெல்லாமோ வருகிற பக்தர்கள், தினமும் கிரிவலம் வருகிறார்கள். நினைக்கும் போதெல்லாம் மிகப்பெரிய கூட்டம், அண்ணாமலையானுக்கு அரோகரா எனும் கோஷத்துடன் கிரிவலம் வருவதைப் பார்க்க முடிகிறது.

கிரிவலத்தைச் சுற்றி, அதாவது மலையைச் சுற்றி 108 சிவலிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது என்று சொன்னேன் அல்லவா. அதனால், பக்தர்களுக்கு ஒருவிஷயம்... கிரிவலம் செல்லும் போது, கண்ட இடங்களில் எச்சில் துப்புவதோ, உணவுப் பொட்டலங்களோ இஷ்டத்துக்குத் தூக்கிப் போடுவதோ செய்யாதீர்கள். அந்த இடத்தில் உள்ள சிவலிங்கம் புதைந்திருக்கலாம் என்று ஆர்வத்துடனும் பக்தியுடனும் சொல்கிறார்கள் அண்ணாமலையாரின் அடியவர்கள்.

கிரிவலம் செல்லும் போது எட்டு லிங்கங்களை நாம் தரிசிக்கலாம். இதை அஷ்ட லிங்கங்கள் என்று போற்றுகிறார்கள். எட்டு லிங்கங்களையும் அந்த லிங்கங்களைத் தரிசிப்பதால் கிடைக்கும் பலன்களையும் பார்ப்போம்.

இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் என எட்டு லிங்கங்கள் அமைந்துள்ளன. கிரிவலத்தின் முதல் லிங்கம்... இந்திர லிங்கம். இந்திரன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம் என்கிறது புராணம். கிழக்குப் பார்த்தபடி இருக்கும் லிங்கம் இது. சூரிய பகவானும் சுக்கிரனும் ஆட்சி செலுத்துகிற இந்த இந்திர லிங்கத்தை மனதார வணங்கினால், இழந்த மரியாதை, பதவி, பொருள் ஆகியவற்றை திரும்பப் பெறலாம் என்பது ஐதீகம். ஆயுள் அதிகரிக்கும். செல்வம் பெருகும் என்கிறார்கள் பக்தர்கள்!

அடுத்து... கிரிவலப் பாதையின் 2வது லிங்கம்... அக்னி லிங்கம். தென் கிழக்கு திசையில் உள்ள இந்த லிங்கத்தைத் தரிசிப்பது மிகவும் விசேஷம் என்பார்கள். தாமரை தெப்பக்குளத்துக்கு அருகில் உள்ளது இந்த லிங்கம். சந்திரனின் ஆதிக்கத்தில் உள்ள இந்த லிங்கத்தைத் தரிசித்து வழிபட்டால், தீராத நோயும் தீரும். ஆரோக்கியம் கூடும். அமைதியான வாழ்க்கை வாழலாம் என்கின்றனர் சிவாச்சார்யர்கள். கிடைத்தற்கரிய மனோபலம் கூடும். மகோன்னத வாழ்க்கை நிச்சயம்.

மூன்றாவதாக உள்ள லிங்கம்... எம லிங்கம். எமதரும ராஜா பிரதிஷ்டை செய்து பூஜித்த லிங்கம். தெற்குப் பார்த்தபடி அமைந்துள்ளது இந்த எம லிங்கம். செவ்வாய்க் கிரகத்தின் ஆதிக்கத்தில் உள்ள இந்த லிங்கத்திருமேனியை கண்ணாரத் தரிசித்து, மனதார வணங்கினால், பண நெருக்கடி, கடன் தொல்லை, மனதில் நிம்மதியில்லாத நிலை எல்லாமும் மாறிவிடும். இனிமையான வாழ்க்கை அமைவது உறுதி என்கின்றனர். சிம்ம தீர்த்தக் குளத்துக்கு அருகில் உள்ளது இந்த லிங்கம்!

அடுத்து நிருதி லிங்கம். 4வது லிங்கம் இது. தென் கிழக்கு திசை பார்க்க உள்ள இந்த லிங்கம், ராகு கிரகத்தின் ஆட்சிக்கு உட்பட்ட லிங்கம் என்கிறது ஸ்தல புராணம். நிருதி என்பவர், பூதகணம். சொல்லப் போனால், பூத கணங்களின் தலைவன். சனி தீர்த்தக் குளத்துக்கு அருகில் உள்ள நிருதி லிங்கத்தை வழிபட்டால், பிரச்சினைகள் யாவும் விரைவில் முடிவுக்கு வரும். மனதில் உள்ள குழப்பங்கள் யாவும் விலகிவிடும். நிம்மதியும் நிறைவுமாக வாழலாம்.

கிரிவலப் பாதையின் 5வது லிங்கம்... வருண லிங்கம். மேற்குப் பார்த்த லிங்கம். சனி பகவானின் ஆட்சியில் உள்ள லிங்கம் இது. வருண தீர்த்தக் குளத்துக்கு அருகில் உள்ள, வருண பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்பட்ட இந்த லிங்கத்தை மனதாரப் பிரார்த்தனை செய்து தரிசியுங்கள். வாழ்வில் முன்னேற்றம் நிச்சயம். கொடிய நோய்கள் ஏதும் தாக்காமல் காத்தருள்வார் வருண பகவான்!

அடுத்து... 6வது லிங்கம்... வாயு லிங்கம். வடமேற்கு திசையில், கேது பகவானின் ஆட்சிக்குக் உட்பட்ட லிங்கம் இது. இந்த வாயு லிங்கத்தை வழிபட்டால், இருதயம் சம்பந்தப் பிரச்னை இனி வரவே வராது. வயிறு மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட கோளாறுகளும் நீங்கிவிடும்.

ஏழாவதான லிங்கம்... குபேர லிங்கம். வடதிசை லிங்கம். குபேரன் வழிபட்ட லிங்கம். குரு பகவானின் ஆட்சியின் கீழ் உள்ள லிங்கம். ஆகவே இவரை வழிபட்டால், குரு யோகமும் கிடைக்கும். குபேர யோகமும் நிச்சயம். சொல்லப் போனால், இந்த குபேர லிங்கத்தின் முன்னே மனமுருகி வேண்டிக் கொள்பவர்கள்தான் அதிகம். உலகாயத வாழ்க்கையில், காசும் பணமும் யாருக்குத்தான் தேவையில்லை. பொருளாதார நெருக்கடிகள் இல்லாத மனிதர்கள் எத்தனைபேர். எனவே இந்த குபேர யோகத்தை மனதார, ஆத்மார்த்தமாக வேண்டிக் கொள்ளுங்கள். செல்வச் செழிப்புடன் வாழ்கிறோமோ இல்லையோ... கடனில்லாத நிலையில் வாழச் செய்யும் குபேர லிங்கம்.

அடுத்து... அஷ்ட லிங்கங்களின் வரிசையில், எட்டாவது லிங்கம். அஷ்ட லிங்கம். ஈசான்ய லிங்கம். வடகிழக்கு லிங்கம். புதன் கிரகத்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட லிங்கம். புதன் பகவான் தான் நம் எண்ணங்களுக்கு மூல காரணம். மனோகாரகன். மனதின் கிலேசங்களையும் குழப்பங்களையும் நீக்கி அருள்பவர் புதன் பகவான். இந்த ஈசான்ய லிங்கத்தை வழிபட்டால், மனதில் அமைதி தவழும். நிம்மதி கிடைக்கும். காரியத்தில் தெளிவு பிறக்கும். தெளிவுடன் காரியத்தில் இறங்க வெற்றி கிடைப்பது நிச்சயம்!

ஆக, திருவண்ணாமலை என்பது சித்தர்களின் பூமி. அதேசமயம் சித்தர்கள் மட்டுமின்றி, இந்திராதி தேவர்களும் வாயு, வருண, அக்னி, எம, குபேர முதலான தெய்வங்களும் பூதகணங்களும் தேவதைகளும் வழிபட்டு, ஈசனை பூஜித்த ஒப்பற்ற திருத்தலம்!

அடுத்து... கிரிவலம் செல்லும் போது, அஷ்ட லிங்கங்கள் அனைத்துக்குமே வில்வம் வாங்கிச் செல்லுங்கள். செவ்வரளி கொண்டு செல்லுங்கள். முடிந்தால், ஊதுபத்தியும் சூடமும் வாங்கிக் கொடுங்கள். மலையில் பட்ட காற்று, மலையிறங்கி அடிவாரத்தில், கிரிவலப் பாதையில் உள்ள லிங்கங்களைத் தழுவும். அப்படியே ஊதுபத்தி,. சூடத்தின் நறுமணமும் கலந்து, மலையே சிவமென இருக்கும் ஈசனைத் தொடும். நம்மையும் தொடும்.

இத்தனைப் பெருமை மிகு கிரிவலப் பாதையில்தான், மூன்று முக்கியமான மகான்களின் ஆஸ்ரமங்கள் அமைந்துள்ளன.

ஏனெனில்... திருவண்ணாமலை சூட்சும பூமி. அதிசயத் தலம்!

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜெயகுரு ராயா

- ராம்ராம் ஜெய்ராம்

 

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x