Last Updated : 19 Nov, 2017 08:56 AM

 

Published : 19 Nov 2017 08:56 AM
Last Updated : 19 Nov 2017 08:56 AM

சுவாமி சரணம் 3: ஐயப்ப பக்தர்களே... உங்களுக்காக..!

பயணங்கள் எப்போதுமே சுகமானவை. மனிதர்களையும் மலைகளையும், மரங்களையும் கடைகளையும் பார்த்துக் கொண்டே செல்வதில், ஒரு சந்தோஷம் இருக்கத்தான் செய்கிறது. இன்றைக்கு சாலைகள் விரிவாக்கத்தால், பயணங்களின் காலநேரம் சுருங்கிவிட்டன. அதனாலேயே பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. வாகனங்கள் பெருமளவு வந்துவிட்டன. அவரவர் வசதிக்கேற்ப, உரிய வாகனங்களைத் தேர்வு செய்து கொண்டு, நாற்கரச் சாலைகளில் ஊரை நோக்கிப் பறக்கிறோம். ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்குப் பயணப்படுவதே சுகமெனில், ஊரில் உள்ள உறவுகளையோ நண்பர்களையோ பார்ப்பதற்குப் பயணப்படுவதே அலாதி ஆனந்தமெனில், இறைவனைத் தரிசிப்பதற்கான பயணம், இன்னும் சுகமானது அல்லவா. இன்னும் இன்னுமான ஆனந்தம்தானே!

சபரிமலை யாத்திரை என்பதும் அப்படியொரு புதிய அனுபவம்தான். அந்த சந்தனம் மணக்கும் மலையில், ஏகாந்தமாய் வீற்றிருக்கும் சபரிமலையானைத் தரிசிப்பதே மிகப்பெரிய குதூகலம்தான்.

ஆனால் என்ன... இன்றைக்கு சபரிமலைப் பயணத்துக்கு ரயில் வசதிகள் அதிகரித்துவிட்டன. கார் வேன்கள் பெருகிவிட்டன. பம்பா நதிக்கரை வரை வாகனங்களில் சென்று விடலாம். எங்கு பார்த்தாலும் பம்பையில் இருந்து மின் விளக்குகள் ஒளியை பாய்ச்சிக் கொண்டிருக்கின்றன. பகலைப் போல் வெளிச்சத்தைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன.

நடப்பதற்குப் பாதைகளும் படிகளும் இன்றைக்கு போடப்பட்டாகி விட்டன. ஆங்காங்கே இளைப்பாறுவதற்கு, சின்னச் சின்னதான மேடைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தடுக்கி விழுந்தால் அடுத்த கடை அடுத்த கடை என்று டீக்கடைகளும் ஜூஸ் கடைகளும் உணவகங்களும் வழிநெடுக இருக்கின்றன. படியில் ‘ஏத்தி விடப்பா... தூக்கி விடப்பா...’ என்று சொல்லிக் கொண்டே சாமிமார்கள் விறுவிறுவென நடந்து கொண்டிருக்கும் அதேவேளையில், உடல் பருமனானவர்களும் வயதானவர்களும் நடப்பதற்கு வசதியாக கைப்பிடிகள் உதவிக்கரம் நீட்டுகின்றன.

‘வயசாயிருச்சுதான். ஆனாலும் ஐயப்பனை போன வருஷம் போல, அதுக்கும் முந்துன வருஷம் போல தொடர்ந்து இத்தனை வருஷமாப் பாத்தது போல, இந்த வருஷமும் பாத்துடணும். ஆனா வயசாயிருச்சு. உக்கார்ந்தா எந்திரிக்க முடியல. நின்னா உக்கார முடியலை. நடந்தா, மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்குது’ என்று உடலை நினைத்து புலம்பினாலும் விரதமிருந்து, இருமுடி சுமந்து, மலையேற முடியாமல் சிரமப்படுவோருக்கு, ‘டோலி’கள் ஏகப்பட்டதுகள் வரிசைகட்டி இருக்கின்றன.

அந்தக் காலத்திலும் ‘டோலி’கள் உண்டு. ஆனால் அவையெல்லாம் மனிதர்களைச் சுமந்து செல்ல ஏற்பட்டது அல்ல. ஐயப்ப சுவாமிக்கு, பூ பழங்களும் பூஜைப் பொருட்களும் எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்டன. ஐயப்ப சுவாமியைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு உணவு வழங்குவதற்காக, மளிகைப் பொருட்களும் காய்கறிகளும் அரிசி மூட்டைகளும் எடுத்துச் செல்லப்பட்டன. மாறிவிட்ட உணவுப் பழக்கங்களும் தடாலென்று வருகிற உடல் பருமனும் இன்றைய பக்தர்களுக்கு கொஞ்சம் சிரமம்தான். அந்தச் சிரமத்தில் இருந்து அவர்களைக் காக்க, ‘டோலி’கள் உதவுகின்றன.

‘‘இன்னிக்கி இருமுடி தவிர, வேற எதையும் தூக்கிட்டுப் போகத் தேவையில்ல. ஆனா அன்னிக்கி அப்படியில்லை. அப்பப்ப பசியாற பிஸ்கட்டோ பழமோ எடுத்துட்டுப் போகணும். அங்கங்கே சமைச்சுச் சாப்பிட பொருட்களும் அடுப்பும் தூக்கிட்டுப் போகணும். டார்ச் லைட் ரொம்பவே அவசியம். வழில கடைகளெல்லாம் கிடையாது. எதுனா ஒரு கடை இருந்தாலே அபூர்வம். அந்தக் கடையிலயும் மொத்த பக்தர்கள் கூட்டமும் நிக்கும்’’ என்கிறார்கள் இருபது முப்பது வருடங்களாக சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள்.

என் அத்தை மகன்கள் சென்னையில் இருக்கிறார்கள். நாங்கள் திருச்சியில் இருந்தோம். ஆறாவது ஏழாவது படித்துக் கொண்டிருந்த காலம் அது. ‘இத்தனாம்தேதி சபரிமலைக்குக் கிளம்புகிறோம். இந்த ரயிலில் திருச்சிக்கு இத்தனை மணிக்கு வருகிறோம்’ என்று கடிதம் போட்டுவிட்டுவார் அத்தையின் மூத்த மகன் ரவி அண்ணா. அதில், எத்தனை பேர் என்பதையும் குறிப்பிட்டு விடுவார்.

அம்மா, இட்லியும் புளியோதரையும் தயிர்சாதமும் எனப் பண்ணி, இலையில் வைத்து, பேப்பரில் மடித்து பொட்டலம் பொட்டலமாகக் கட்டி வைப்பாள். பெரிய தூக்கு வாளியில், சுடச்சுட காபியை கிளம்பும்போது அடுப்பில் இருந்து இறக்கி எடுத்துக் கொண்டு திருச்சி ஜங்ஷன் ரயில்நிலையத்தில் காத்திருந்து, அவர்களைப் பார்த்துக் கொடுப்போம். அவர்களுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு, கிளம்புவோம். கட்டிக் கொடுத்த உணவை, புனலூர் தாண்டியதும் பிரித்துச் சாப்பிடுவார்களாம்.

புனலூர் என்று சொல்லும்போதே, நெக்குருகிப் போகிறேன். அது சாதாரண ஊர்தான். ஆனால் இப்போது ஐயப்ப பக்தர்களின் முக்கியமான வாசஸ்தலமாகிவிட்டது.

நினைக்க முக்தி திருவண்ணாமலை என்றும் பிறக்க முக்தி திருவாரூர் என்றும் சொல்கிறோம். அந்த ஸ்தலத்துக்குச் சென்றதால் பெருமையும் புண்ணியமும் அடைகிறோம். அங்கே பிறந்ததால், பிறவிப்பயனைப் பெறுகிறோம். ஆனால் புனலூர் அப்படியில்லை. அங்கே பிறந்தவரால், வாழ்ந்தவரால் அந்த ஊரும் பிரபலமாயிற்று.

அதற்கு முன்னதாக, மலையின் பாதையை இன்னும் கொஞ்சம் பார்ப்போம்.

‘‘அந்தக் காலத்துல மலையேறும் போதும் படிகள் இருந்துச்சு. அதாவது, மரங்களோட வேர்கள்தான் எங்களுக்குப் படிகள். வழிநெடுக, குறுக்கும்நெடுக்குமா மரங்கள் இருக்கும். அந்த மரங்களோட வேர்கள், நல்லா கனமா பரவியிருக்கும். அந்த வேர்கள்ல கால் வைச்சு, கால் வைச்சு, மேலே ஏறுவோம்.

பக்கத்துல இருக்கிற சாமிகிட்டே பேச்சுக் கொடுத்துக்கிட்டே ஏறமுடியாது. இன்னிக்கி மாதிரி செல்போன் நோண்டிக்கிட்டே போக முடியாது. நம்ம பார்வை, புத்தி, கவனம் எல்லாமே பாதைல இருக்கணும். கொஞ்சம் அசால்ட்டா நடந்தாலும் சறுக்கிவிட்டுரும். கால் பிசகிரும். சரணம் சொல்லிக்கிட்டே, பாதைல கவனம் வைச்சுக்கிட்டே மலைல ஏறி, ஐயப்பனைப் பாக்கும்போது, எல்லாக் கவலையும் வலியும் காணாமப் போயிரும். எங்களை வழிநடத்திக் கூட்டிட்டுப் போன குருசாமிமார்களை இப்பவும் நன்றியோட நினைச்சுப் பாக்கறேன்’‘ என்று உணர்வு பொங்கச் சொல்லும் பழுத்த சாமிமார்களைப் போன்றவர்கள்தான் பெருகிக் கொண்டே இருக்கும் இன்றைய பக்தர் கூட்டங்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டிகள்.

அந்த வழிகாட்டிகளில் மிக முக்கியமான ஐயப்ப பக்தர்தான்... புனலூர் மண்ணைச் சேர்ந்தவர். இப்போது எல்லா ஐயப்ப சாமிகளின் மனங்களில் குடியிருப்பவர்.

புனலூர் தாத்தா என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். ஆனால் ஐயப்ப சுவாமிக்கு செல்லப்பிள்ளை இவர். நமக்கெல்லாம் மகா குரு.

மகா குரு, மனிதநேயமிக்க புனலூர் தாத்தாவுக்கு சுவாமி சரணம் சொல்லுவோம். அவரை மனதார நமஸ்கரித்து நினைவுகூர்வோம்.

அந்த மகான், வழக்கம்போல் இந்த வருடம் மாலையணிந்து, விரதம் இருக்கிற ஐயப்ப பக்தர்களை வழிநடத்தி ஆசீர்வதிப்பார்.

சுவாமியே சரணம் ஐயப்பா!

- ஐயன் வருவான்

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x