Last Updated : 02 Feb, 2018 02:13 PM

 

Published : 02 Feb 2018 02:13 PM
Last Updated : 02 Feb 2018 02:13 PM

கல்யாண வரம் தரும் ‘பொட்டு’ காணிக்கை! மாங்கல்யம் காப்பாள் அரியநாச்சியம்மன்!

புதுக்கோட்டை அரியநாச்சி அம்மனை தரிசித்து வேண்டிக் கொண்டால், திருமண பாக்கியம் தந்தருள்வாள் என்கின்றனர் பக்தர்கள்.

புதுக்கோட்டை தேவஸ்தான கோயிலுக்கு உட்பட்ட கோயில்கள், புதுக்கோட்டை மற்றும் இந்த ஊரைச் சுற்றிலும் நிறையவே உள்ளன. அவற்றில் முக்கியமான கோயில்களில், அரியநாச்சி அம்மன் கோயிலும் ஒன்று.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்துக்கு அருகில் கீழராஜ வீதியில் அமைந்துள்ள ஸ்ரீஅரியநாச்சி அம்மன் கோயில், இந்த ஊர் மக்களின் மனங்களுக்கு நெருக்கமான கோயில் என்கிறார்கள் பக்தர்கள்.

புராதனமான கோயில். குலோத்துங்க சோழன், புதுக்கோட்டை நகரில் ஸ்ரீசாந்தநாத ஸ்வாமி ஆலயம் எழுப்பினான். சிவபெருமானுக்கு கோயில் எழுப்பும் அதே வேளையில், அருகில் அம்பிகைக்கும் தனியே ஓர் ஆலயம் அமைக்க வேண்டும் என ஆசைப்பட்டான். அதன்படி ஆலயம் அமைத்தான். அந்த அம்பாளின் பெயர் அரியநாச்சி அம்மன்.

சோழர்கள் காலத்திய ஆலயம் என்றாலும் பாண்டியர்களும் இந்தக் கோயிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளனர். எனவே, பாண்டிய மன்னர்களின் மீன் சின்னம் இங்கு பொறிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அம்மனின் அருளைக் கண்டு வியந்த பல்லவ மன்னர்கள் இந்தப் பகுதியை ஆட்சி செய்தபோது, இந்தக் கோயில் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனர் என்கிறது ஸ்தல வரலாறு.

இந்தக் கோயிலுக்கு தன்னை நாடி வருவோருக்கு அருளை வாரி வழங்குகிறாள் அரியநாச்சி அம்மன். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனைத் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் ஊர்க்காரர்கள்!

குறிப்பாக, செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில்... ராகு கால வேளையில் அரியநாச்சி அம்மனுக்கு அரளிமாலை சார்த்தி, நெய்தீபமேற்றி வழிபட்டால்... விரைவில் திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கை!

மேலும், திருமணத் தடை நீங்க, தங்கம் அல்லது வெள்ளியில் பொட்டு வாங்கி, அம்மனிடம் வேண்டிப் பிரார்த்திக்கின்றனர். கோயில் உண்டியலில் காணிக்கையாகச் செலுத்திவிட்டு, ஆலமரம் மற்றும் வேம்பு மரம் ஆகியவை சேர்ந்திருக்கும் மரங்களைச் சுற்றிப் பிராகாரம் வந்து, மஞ்சள் சரடை மரத்தில் கட்டி வேண்டிக் கொண்டால், திருமணத் தடை அகலும்!

பிள்ளை வரம் இல்லை என ஏங்கித் தவிப்பவர்கள், அம்மனுக்குப் பாலபிஷேகம் செய்து தொட்டிலும் வளையலும் கட்டிப் பிரார்த்தனை செய்து கொண்டால், விரைவில் குழந்தை வரம் நிச்சயம் என்கிறார்கள் பெண்கள்!

தை மாத செவ்வாய், வெள்ளி என்றில்லாமல் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசிக்கின்றனர். பௌர்ணமிதோறும் லட்சார்ச்சனையும் திருவிளக்கு பூஜையும் இங்கு நடைபெறுவது சிறப்பு. இங்கே உள்ள நாகர் விக்கிரகத்துக்குப் பாலபிஷேகம் செய்து அம்மனை வேண்டிக்கொண்டால், தோஷங்கள் விலகும்!

அரியநாச்சி அம்மனைக் கண்ணாரத் தரிசித்து, மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். நம் அல்லல்கள் அனைத்தையும் தீர்த்தருள்வாள் என்று சிலாகித்துச் சொல்கின்றனர் பக்தர்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x