Published : 20 Jan 2018 12:17 PM
Last Updated : 20 Jan 2018 12:17 PM
வாழ்வில் திருப்பங்களைத் தரும் திருப்பட்டூர் பிரம்மா கோயில் தெரியும்தானே. திருச்சியில் இருந்து சென்னை செல்லும் நான்குவழிச் சாலையில், 28 கி.மீ. தொலைவில் உள்ளது சிறுகனூர். இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் 5 கி.மீ. பயணித்தால்,திருப்பட்டூரையும் அங்கே அருள்பாலித்துக் கொண்டிருக்கும் பிரம்மா கோயிலையும் அடையலாம்.
கிழக்கு நோக்கிய கோபுரம். உள்ளே நுழைந்ததும் கிழக்குப் பார்த்தபடி காட்சி தரும் பிரம்மபுரீஸ்வரர். அதையடுத்து எந்தக் கோயிலிலும் காண்பதற்கு அரிதான பிரம்மாவின் பிரமாண்டத் திருக்கோலம். அதுவும்... தனிச்சந்நிதியில் இருந்தபடி அருள்பாலிக்கும் இந்த பிரம்மாவைத் தரிசித்தால், நம் தலையெழுத்தையே திருத்தி அருள்வார் என்பது ஐதீகம்!
பிரம்மாவின் சாபம் நீக்கி அருளிய சிவனார், இங்கே என்னை நாடி வரும் அன்பர்களின் தலையெழுத்தை திருத்தி அருள்வாயாக என்றார். அதாவது விதி இருப்பின் விதி கூட்டி அருளுக என்றார். அதன்படி, இந்தக் கோயிலில் காலடி எடுத்து வைக்கும் அன்பர்கள் அனைவரின் தலைவிதியை திருத்தி எழுதி அருள்பாலிக்கிறார் பிரம்மா என்கிறார் திருப்பட்டூர் கோயிலின் பாஸ்கர் குருக்கள். .
வியாழக்கிழமைகளிலும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் உங்களுடைய நட்சத்திர நாளிலும் சென்று பிரம்மாவை வணங்குவது சகல யோகங்களையும் தந்தருளும் என்கிறார்கள் பக்தர்கள்.
எந்தக் கோயிலிலும் இல்லாத தனிச்சிறப்புகளில் ஒன்று...
பிரம்மாவின் சந்நிதியில் நின்று கொண்டு, பிரம்மாவை த் தரிசிக்கும் போது, அப்படியை பக்கவாட்டு கோஷ்டப் பகுதியில் பார்த்தால், குரு தட்சிணாமூர்த்தியைத் தரிசிக்கலாம். அதாவது குரு பிரம்மாவைத் தரிசித்துக் கொண்டே, குரு தட்சிணாமூர்த்தியையும் வழிபடலாம்.
அதுமட்டுமா?
பிரம்மாவின் சந்நிதிக்கு எதிரே பக்தர்கள் நின்று வணங்கும் இடத்தில், வரிசையாக தூண்கள் இருக்கின்றன. இந்தத் தூண்களில் ஒன்றில்... சனீஸ்வர பகவானின் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. பிரம்மா என்பவர் குரு. குரு பிரம்மாவை, நேராக நின்று தரிச்க்க வேண்டும் என்பது ஐதீகம். ஆகவே குரு பிரம்மாவையும் பிரம்மாவைத் தரிசிக்கும் போதே குரு தட்சிணாமூர்த்தியையும் ஒருசேர தரிசித்து அருளைப் பெறலாம்!
அதேவேளையில், பிரம்மாவை வணங்கியதும் அப்படியே தலையை மட்டும் திருப்பி, தூணில் காட்சி தரும் சனீஸ்வரரையும் தரிசித்து, மனதார வேண்டிக் கொள்ளுங்கள். நம் தலையெழுத்தை நல்லவிதமாக திருத்தி அருள்வார் பிரம்மா. அப்படியே சனீஸ்வரரின் பேரருளைப் பெற்று இனிதே வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT