Published : 05 Feb 2018 12:36 PM
Last Updated : 05 Feb 2018 12:36 PM
பகவான் யோகி ராம்சுரத்குமார் அற்புதங்கள்
’என்னவோ உள்ளுணர்வு சொல்லுச்சு’ என்று சொல்லாதவர்களே இல்லை. இந்த உள்ளுணர்வு என்பது நினைவாலும் எண்ணத்தாலும் வருவது மட்டுமே அல்ல. தத்துவஞானிகள், இது சிந்தனையால் வருவதாகச் சொல்கிறார்கள். இது கிரகங்களின் விளையாட்டு என்று ஜோதிடர்கள் தெரிவிக்கிறார்கள். ‘இது குருவருள்’ என்கிறார்கள் அடியவர்கள். மகான்கள், ‘இறையருள்.. கடவுள் சித்தம்’ என்று அருளுகிறார்கள்.
பகவான் யோகி ராம்சுரத்குமார், தன்னிடம் வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் தருணங்களிலெல்லாம்... ‘நான் ஆசீர்வதிக்கிறேன்’ என்று ஒருபோதும் சொன்னதே இல்லை. ‘என் தகப்பன் உன்னை ஆசீர்வதிக்கிறேன்’ என்றுதான் ஆசி வழங்குவார். பகவான் யோகி ராம்சுரத்குமார் எனும் மகானை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், குருவாக, யோகியாக, மகானாக வரித்துக்கொண்டதற்கு, இவையும் ஒரு காரணம்.
ரமணாஸ்ரமத்தில், சம்ஸ்க்ருதப் பாடல்கள் மட்டுமே பாடப்பட்டு வந்ததைக் கவனித்தார் பகவான் யோகி ராம்சுரத்குமார். முன்பு பாடிய தமிழ்ப்பாடல்கள் இல்லை என்பதை உணர்ந்தார். மீண்டும் தமிழ்ப்பாடல்கள் பாடச் சொல்லி வலியுறுத்தினார். ‘அதைத் தெரிந்த ஆட்கள் இல்லையே.. அதையெல்லாம் தொகுக்க ஆளில்லையே..’ என்று ரமண மகரிஷியின் சகோதரர் மகன் கணேசன் தெரிவித்தார்.
‘இதோ... இவங்க அதுக்குத்தான் வந்திருக்காங்க’ என்று சொல்லி கைதூக்கி ஆசீர்வதித்துச் சென்றார் பகவான் யோகி ராம்சுரத்குமார்.
அடுத்தடுத்து சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது போல் நடந்த தமிழ்ப்பாடல்களைத் திரட்டும் பணிகள். கணேசனின் தோழியான அனுராதா என்பவர், அப்படியொரு வேகமாக ஈடுபாடு காட்டினார். சந்ததம் வந்தது போல், அந்தப் பணியிலேயே மூழ்கினார். வயதானவர்கள், ரமணாஸ்ரமத்தில் இருந்த காமாட்சி அம்மா என பலருடன் பேசிப்பேசி, தமிழ்ப்பாடல்கள் திரட்டப்பட்டன.
ஒருநாள்... பகவான் யோகி ராம்சுரத்குமார் ரமணாஸ்ரமத்துக்கு வந்தார். கணேசனும் அனுராதாவும் இன்னுமான ஊழியர்களும் ஓடிவந்து வரவேற்றார்கள். ‘தமிழ்ப்பாராயணம் தயாராகிவிட்டதா?’என்று அனுராதாவிடம் கேட்டார் பகவான்.
‘ஆறுநாட்களுக்குத் தயாராகிவிட்டது. தினமும் ஒரு பாராயணம் என்று ஆறுநாட்களுக்குப் பாடலாம்’ என்றார் அனுராதா. உடனே பகவான் யோகி ராம்சுரத்குமார்... ‘ஏன் ஏழாவது நாளுக்கு தயாராகவில்லையா. அன்று விடுமுறையா. சண்டே ஹாலிடேயா..?’ என்று சொல்லிவிட்டுச் சிரித்து ஆசீர்வதித்தார்.
’ரமணாஸ்ரமத்துக்கு வந்து சிலநாள் இருக்கவேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் இப்படியொரு பொறுப்பு, ரமணர் குறித்த தமிழ்ப்பாடல்கள் சேகரிக்கும் பணி என்பதெல்லாம் நினைத்துக் கூட பார்க்கவில்லை. பார்த்தவுடன் ‘யாரோ பைத்தியம்’ என்று பகவான் யோகி ராம்சுரத்குமாரைப் பார்த்து பயந்தேன். ஆனால் அப்போது அவரின் அருள் எனக்குக் கிடைத்தது. ‘பகவான் அருள் கிடைத்திருக்கிறது’ என்று உள்ளுணர்வு சொல்லியது. அதேபோல் அந்த வேலையைச் செவ்வனே செய்து, பாடல்களைக் கற்றுக் கொண்டு என எல்லாமே பகவான் யோகி ராம்சுரத்குமாரின் பேரருளால் நிகழ்ந்தவையே...’ என்று அனுராதா அப்போது சிலிர்ப்புடன் தெரிவித்தார்.
இப்படித்தான்... பகவான் யோகி ராம்சுரத்குமார் நம் உள்ளுணர்வை உசுப்பிவிடுவார். அந்த உசுப்பிவிடுதல் என்பதே அவரின் அருளாகவும் ஆசியாகவும் அன்பாகவும் கருணையாகவும் இருந்தது.
சொல்லப்போனால், இது ஒருவகை குருபக்தி. பகவான் ரமண மகரிஷி மீது அவர் கொண்ட குருபக்தியின் வெளிப்பாடு இது. அன்று தொடங்கி, இன்றளவும் ரமணாஸ்ரமத்தில் தமிழ்ப்பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன.
இத்தனைக்கும் பகவான் யோகி ராம்சுரத்குமாருக்கு தமிழ் அவ்வளவாகத் தெரியாது. அவருக்குத் தெரிந்த முதல் தமிழ் வார்த்தை... ‘சரி’!
அதாவது, வடக்கே சொந்த ஊரில் இருந்து ரமணருக்கு இவர் வேண்டுகோள் விடுக்க, அதற்குப் பதிலளிக்கும் விதமாக திருவண்ணாமலையில் இருந்துகொண்டே ரமண மகரிஷி சொன்னார் அல்லவா... ‘சரி’ என்று! இதுதான் பகவான் யோகி ராம்சுரத்குமாருக்குத் தெரிந்த முதல் தமிழ்வார்த்தை! அடுத்ததாக... பகவான் ரமணர் மீது கொண்ட பக்தியாலும் அன்பாலும் ரமணரின் பக்தர்களை உணர்ந்ததாலும் தமிழ்ப்பாராயணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என நினைத்து , அதை செயல்படுத்தவும் ஆசீர்வதித்தார் பகவான் யோகி ராம்சுரத்குமார்!
திருவண்ணாமலையில் சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமமும் அதற்கு அருகில் ரமணாஸ்ரமமும் அமைந்துள்ளது. எத்தனையோ மகான்கள் உலவிய பூமிதான் திருவண்ணாமலை என்றாலும் சேஷாத்ரி சுவாமிகள், அதையடுத்து பகவான் ரமணர், இவருக்குப் பிறகு யோகி ராம்சுரத்குமார் என்று இறைவனும் ஓர் கணக்கு போடுகிறான்.
’கடவுளின் நிலை சரியாகவே நடந்துகொண்டிருக்கிறது. ஏனெனில், கடவுள் நிறைநிலையில் உள்ளவர். அவர் எதைச் செய்தாலும் அது சரியாகவே இருக்கும்’ என அருள்கிறார் பகவான் யோகி ராம்சுரத்குமார்.
ஆமாம்... கடவுள் செய்தது எல்லாமே சரியாகத்தான் இருக்கும். திருவண்ணாமலை எனும் புண்ணிய பூமியில், எங்கோ தெற்கில் இருந்து ரமண மகரிஷி வந்தார். காஞ்சியில் இருந்து சேஷாத்ரி சுவாமிகல் வந்தார். வடக்கே இருந்து பகவான் யோகி ராம்சுரத்குமாரை வரச் செய்தார் இறைவன்!
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெயகுரு ராயா!
- ராம்ராம் ஜெய்ராம்
தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in
முந்தைய அத்தியாயம் படிப்பதற்கு...
Keywords
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT