Last Updated : 17 Feb, 2018 10:13 AM

 

Published : 17 Feb 2018 10:13 AM
Last Updated : 17 Feb 2018 10:13 AM

நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!

உண்மையான பக்தனின் அழுகையைப் பார்த்துக் கொண்டிருக்கமாட்டார் ஆஞ்நேயர். ஓடிவந்து அபயக்கரம் நீட்டுவார். அருள் வழங்கி கைதூக்கி விடுவார் என்கிறார்கள் பக்தர்கள்.

உண்மையான பக்தன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாய் சொல்லவேண்டும் என்றால், முதலிடத்தில் இருப்பவர் ஆஞ்சநேயர்தான்!

ஆமாம். தன்னை வீர அனுமன் என்றோ, ஜெய் அனுமன் என்றோ சஞ்ஜீவி என்றோ பெருமையுடன் நாம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் இதையெல்லாம் அவர் ஒருபோதும் விரும்பியதே இல்லை. ராமபக்த அனுமன் என்று சொல்லும் போதே குதூகலமாகி விடுவார் அனுமார்.

அந்த அளவுக்கு ஸ்ரீராமபிரான் மீது, ஆழ்ந்த பக்தியுடன் திகழ்ந்தவர் அனுமன். அனுமாரின் பலம் அனுமாருக்கேத் தெரியாது என்பார்கள். ஒருவகையில் உண்மைதான். ஆனால் தன் பலமும் பராக்கிரமும், ராமபிரானை அனவரதமும் பூஜித்துப் போற்றுவதும் வணங்கித் தொழுவதுமே என்று உறுதியாக இருந்தார் ஆஞ்சநேயப் பெருமான்.

அனுமனிடம் உள்ள இன்னொரு சிறப்பைப் பாருங்கள். எல்லா தெய்வங்களும் அபய ஹஸ்தம் என்பதான முத்திரைகளில்தான் தங்கள் திருக்கரங்களை வைத்திருப்பார்கள். அப்படியே திருக்கரங்களை வைத்தபடி நமக்கு அருள்பாலிப்பார்கள். ஆனால் அனுமனோ... தன் இரண்டுகைகளையும் கூப்பிய நிலையில், நம்மைப் போல, அதாவது ஒரு பக்தனைப் போல காட்சி தருவார். இதுவே அனுமனின் மகத்தான சிறப்பு என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

ஆகவே பக்தர்களின் தலைவனாகத் திகழும் அனுமனை, அஞ்சனை மைந்தனை, ஆஞ்சநேயப் பெருமானை வணங்குங்கள். குறிப்பாக, சனிக்கிழமை நன்னாளில் மறக்காமல் வணங்குங்கள். அவனுடைய சந்நிதியில் நின்று கொண்டு, ‘ஜெய் அனுமன்’ ‘ஆஞ்சநேயருக்கு ஜே’ என்று சொல்கிறோமோ இல்லையோ... ‘ஜெய் ராம்... சீதாராம்... ராம்ராம் சீதாராம்’ என்று ராமநாமத்தை இப்படியாகவேனும் சொல்லுங்கள்.

அனுமன் சாலீசா பாராயணம் படியுங்கள். முடியாதவர்கள், அனுமன் சாலீசாவைக் காதாரக் கேளுங்கள். ஸ்ரீராம ஜெயம் எழுதுங்கள்.

இதில் மகிழ்ந்து குளிர்ந்து போவான் அனுமன். உங்கள் குறைகளையெல்லாம் சொல்லி, வருத்தங்களையெல்லாம் சொல்லி அனுமனிடம் அழுது புலம்பினால்... அவ்வளவுதான்... உங்கள் அழுகையை அவனால்தாங்கிக்க் கொள்ளவே முடியாது. ஒடோடி வருவான். உங்கள் துயரங்களைப் போக்குவான். உங்கள் வாட்டத்தையெல்லாம் போக்கியருள்வான் வாயுமைந்தன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x