Published : 12 Feb 2018 01:08 PM
Last Updated : 12 Feb 2018 01:08 PM
இந்த நாள் என்றில்லை... எல்லா நாளிலும், எல்லா தருணங்களிலும் ‘நமசிவாயம்’ சொல்லச் சொல்ல, உடனே நல்லதுகளை நமக்கு வழங்கி அருள்கிறார் சிவனார். குறிப்பாக, மகா சிவராத்திரி நன்னாளில், ‘நமசிவாயம்... நமசிவாயம்... நமசிவாயம்...’ என்று சொல்லிக் கொண்டே இருங்கள். வாழ்வில், சத்விஷயங்கள் உங்களைத் தேடி வந்தே தீரும் என்பது உறுதி!
சிவனாரை பூஜிப்பதும் தரிசிப்பதும் பேரின்பம். அதிலும் விரதம் இருந்து வணங்கிப் பிரார்த்திப்பது வாழ்வில் இன்னும் இன்னுமாய் எல்லா வரங்களையும் தந்தருளும். அதில் மிக முக்கியமான விரதம்... மகா சிவராத்திரி விரதம்!
இருப்பதிலேயே மிகவும் எளிமையான விரதம் மகா சிவராத்திரி விரதம் என்கிறார்கள் பக்தர்கள். சிவ ராத்திரி நாளில், காலையில் நீராடி சுத்தமான ஆடை அணிந்து அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று ‘சிவ சிவ’ என்று முடிந்த அளவு சொல்லிக் கொண்டே இருங்கள். ‘நமசிவாய’ என்று சிவநாம மந்திரத்தை உச்சரித்தபடியே இருங்கள்.
சிவ தரிசனம் முடிந்து வீடு திரும்பியதும் தண்ணீர் மட்டும் குடியுங்கள். கிட்டத்தட்ட இந்த உபவாசம்... அதாவது உண்ணா நோன்பு... உங்கள் உடலை மட்டும் அல்ல... உள்ளத்தையும் பண்படுத்தி, சீர்படுத்தி, செம்மையாக்கிவிடும்! இயலாதவர்கள், திட ஆகாரத்திற்குப் பதிலாக திரவ உணவு எடுத்துக் கொள்ளலாம். கஞ்சி போன்றவற்றைச் சாப்பிடலாம். உடல் நிலை சரியில்லாதவர்கள், வயதானவர்கள் பழம் சாப்பிடலாம்.
மாலையில் சிவாலயத்திற்கு செல்லுங்கள். பூ, பழம், பால் மற்றும் உள்ள அபிஷேகத் திரவியங்களை இயன்ற அளவு சிவபெருமானுக்கு வழங்குங்கள். முடிந்த அளவுக்கு வில்வம் வழங்குங்கள்!
நாளைய தினம் (13.2.18) இரவு நடைபெறும் நான்கு கால பூஜையில் கலந்துகொள்ளுங்கள். அர்த்தஜாம பூஜை முடிந்ததும் வீட்டிற்கு வந்து, பிறகு நீராடிவிட்டு, அதிகாலை மீண்டும் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும். பின்னர் உணவருந்தி விரதத்தை முடிக்க வேண்டும்.
இந்த எளிய விரதத்தை தொடர்ந்து கடைபிடிப்போருக்கு வாழும் காலத்தில் செல்வ வளமும் பிறப்பற்ற நிலையும் கிடைக்கும் என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்!
நமசிவாயம்... நமசிவாயம்... நமசிவாயம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT