Published : 08 Feb 2018 10:42 AM
Last Updated : 08 Feb 2018 10:42 AM
பாபாவின் அருள் சொல்லும் அற்புதத் தொடர்
உங்கள் மனதில் வலியோ வேதனையோ எப்போது வந்து உங்களை படுத்துகிறதோ... அப்போது தைரியமாகவும் உறுதியுடனும் ‘சாய்ராம்’ என்று ஷீர்டி பாபாவைக் கூப்பிடுங்கள். ஏதோவொரு ரூபத்தில், பாபா உங்களிடம் வருவார். உங்களின் துக்கங்களையும் வேதனைகளையும் போக்கி அருள்வார்!
ஷீர்டி பற்றி இன்னும் சில சுவாரஸ்யத் தகவல்களைப் பார்ப்போம்.
ஷீர்டி பாபா கோயிலுக்குள் வரும் பக்தர்கள், கொண்டுவரும் எந்தப் பொருளையும் ஆலயமே வைத்துக் கொள்வதில்லை. நம்மிடமே திருப்பித் தந்துவிடுகிறது நிர்வாகம். ஒருவகையில், எல்லா பக்தர்களும் இது பாபாவின் பரிசு என்றே சிலிர்த்தபடி சொல்கிறார்கள்.
’சாய்’ என்றால் கடவுளின் சாயல் கொண்டவர், கடவுளுக்கு நிகரானவர், சாட்ஷாத் கடவுள் என்று அர்த்தம். ஆகவே, பகவான் சாயிபாபாவின் திருநாமத்தைச் சொல்லச் சொல்ல, பாபாவின் பேரருளும் பெருங்கருணையும் நம் இல்லத்தில் எப்போதும் சூட்சும ரூபமாக வியாபித்திருக்கும் என்கிறார்கள் பக்தர்கள்!
எது கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வார் பாபா. அதேபோல் எது கேட்டாலும் நமக்குத் தந்தருளவும் செய்வார். வாமன் தாத்யா என்பவர் பானைகள் தயாரிப்பவர். சாயிபாபாவின் தீவிர பக்தர். எந்த வசதியும் இல்லாத இவர், இரண்டு பானைகள் செய்து தினமும் பாபாவுக்குத் தருவார். அதுவும் எப்படி? சூளையில் இடாத, சுடப்படாத பானைகள் அவை. அந்தப் பானைகளை இன்முகத்துடன் வாங்கிக் கொள்வார் பாபா. பிறகு அந்தப் பானையில் தண்ணீர் நிரப்பி, அங்கே வளர்த்து வந்த செடிகளுக்கெல்லாம் தன் கையாலேயே தண்ணீர் விடுவார் பாபா. அந்தச் செடிகள், மிகப்பெரிய நந்தவனங்களாக இன்றைக்கும் பூத்து மணக்கின்றன.
பாபாவைத் தரிசித்துவிட்டு வரும் வழியில், பாபா எப்போதும் அமரும் மரம் இருக்கிறது. அந்த மரத்தடியில் இன்றைக்கும் ஊதுபத்தி ஏற்றி வணங்கி வழிபடுகிறார்கள் பக்தர்கள். ஊதுபத்தி ஏற்றி, மரத்தை நமஸ்கரித்து விட்டு, அங்கே ஊதுபத்திச் சாம்பல் படிந்த கரிப்பகுதியை நெற்றியில் இட்டுக் கொள்கிறார்கள் பக்தர்கள். இன்னும் சிலர் அதை மடித்து எடுத்துவந்து, நோய்வாய்ப்பட்டு சிகிச்சை, மருந்து, மாத்திரை என எடுத்துக் கொள்ளும் உறவினர்களுக்கோ நண்பர்களுக்கோ தருகிறார்கள். இதனால் விரைவில் நோய் நீங்கப் பெறலாம் என்பது ஐதீகம்!
நான்கு நுழைவாயில்களைக் கொண்டு, மிகப் பிரமாண்டமாகத் திகழும் ஷீர்டி பாபா கோயிலுக்குள் நுழைந்து வெளியே வந்தாலே, மனதின் பாரமெல்லாம் காணாமல் போய்விடும் என்பது உறுதி. மனசே தக்கையாகிப் போகும். கோயிலின் அமைதியும் தூய்மையும் அலைபாயும் நம் மனதை, ஒருநிலைப்படுத்திவிடும். எல்லாவற்றுக்கும் மேலாக பாபாவின் அருள் நிறைந்திருக்கும் புண்ணியத் திருத்தலம் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
ஷீர்டி பாபாவின் அதிஷ்டானம் அதாவது திருச்சமாதிக்குப் பின்னே இத்தாலியில் இருந்து வரவழைக்கப்பட்ட கல்லைக் கொண்டு அழகே உருவான பாபாவின் திருவுருவச் சிலை செய்யப்பட்டு, வைக்கப்பட்டுள்ளது. இந்த பாபா அத்தனை அழகு! வெள்ளிக்குடையின் கீழே அமர்ந்த நிலையில் உள்ள பாபா, நேரே இருந்து அருள்பாலிக்கும்படியாகவே அற்புதமாகக் காட்சி தருகிறார்.
ஷீர்டி பாபா கோயிலில் இன்னொரு வரப்பிரசாதம்.... அங்கே எப்போதும் பஜன் நடந்துகொண்டே இருக்கிறது. பிரமாண்டமான கோயிலில் நீங்கள் எங்கே இருந்தாலும் சாயி பஜன் பாடல்கள் உங்கள் செவிகளில் விழுந்து, மனதுக்குள் இறங்கி, நல்ல நல்ல அதிர்வுகளை நிகழ்த்திக் கொண்டே இருக்கும்.
இதைக் கொண்டுதான், இன்றைக்கும் தமிழகத்தில் இருக்கிற சாயிபாபா கோயில்களில் கூட, பஜன் ஒலித்துக் கொண்டே இருக்கும்படி வைத்திருக்கிறார்கள்.
சாயி நாமம் சொல்லுங்கள். சாயி பஜன் கேளுங்கள். சாயிநாதனை தரிசியுங்கள். உங்கள் வாழ்வில் எல்லாத் தருணங்களிலும் பகவான் சாயிபாபா, பக்கத்துணையாக இருந்து வழிநடத்திக் கொண்டே இருப்பார்.
ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம்!
- அருள்வார்
தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT