Published : 26 Dec 2017 06:14 PM
Last Updated : 26 Dec 2017 06:14 PM
ஐயப்ப பக்தர்களே... உங்களுக்காக!
வாழ்வில் தர்மசங்கடமான தருணங்கள் நிறைய வரும். சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது போகும். சில செயல்களைச் செய்ய முடியாமல், தவிப்போம். சில செயல்களைச் செய்துவிட்டதாலேயே அடுத்து என்ன செய்வது எனப் புரியாமல் குழம்ப நேரிடும்.
அப்படியொரு மனநிலையில்தான் இருந்தார் மணிகண்ட சுவாமி. மகிஷியின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை. தேவர்களும் முனிவர்களும் நொந்துபோனார்கள். மகிஷியோ பிரம்மாவிடம் வரம் வாங்கிவைத்திருந்தாள். அதுவும் எப்படி? பெண்ணின் கருப்பையில் பிறக்காதவன், ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவன், 12 வயது பாலகன்... அவனே என்னை சாகடிக்கத் தகுதி உடையவன். என் மரணம் அவனாலேயே நிகழவேண்டும் என கோக்குமாக்காக வரம் வாங்கி வைத்து, எல்லோரையும் இம்சித்தாள்.
பிரம்மா கொடுத்த வரத்தால், எல்லோரும் சிவபெருமானிடமும் பெருமாளிடம் ஓடினார்கள்... பிரம்மா உட்பட! ஏற்கெனவே பல முறை எடுத்த மோகினி அவதாரத்தை திருமால் எடுக்க... சிவ - விஷ்ணு பேரருளால், மணிகண்ட அவதாரம் நிகழ்ந்தது என்கிறது சாஸ்தா புராணம்!
குழந்தையாக பம்பா நதிக்கரையில் கிடக்க, பந்தளதேசத்தின் ராஜசேகர மகாராஜா குழந்தையைப் பார்த்ததும் அரண்மனைக்கு தூக்கிச் செல்ல, மகாராணிக்கும் சந்தோஷம். ஆனால் அவளுக்கொரு குழந்தை அப்புறமாய்ப் பிறக்க, அங்கே இருந்த முதலமைச்சர் மணிகண்டனின் மீது வெறுப்பில் இருக்க, முதலமைச்சரும் மகாராணியும் திட்டமிட்டு புலிப்பால் கேட்டு வனத்துக்கு அனுப்பினார்கள்.
அங்கே வனத்துக்குள் வந்ததும் மகிழ்ந்து கூத்தாடினார்கள் தேவாதிதேவர்கள். பூமாரி பொழிந்தார்கள். நெகிழ்ந்தார்கள். நெக்குருகினார்கள். இப்போதைய பொன்னம்பல மேட்டில் அமரவைத்து, சிம்மாசனமாக்கினார்கள். ஆராதனைகள் செய்தார்கள்.
அதன் பிறகுதான் நிகழ்ந்தது... மகிஷியுடனான யுத்தம். அசுரக்கூட்டத்தார் அனைவரையும் அழித்தொழித்த மணிகண்டன், கடைசியாய் மகிஷியையும் வீழ்த்தினான். மணிகண்டன் எனும் 12 வயது பாலகனின் அந்த அவதாரமும் அவதாரத்துக்கான சம்பவமும் இனிதே நடக்க, தேவர்களும் முனிவர்களும் ஞானிகளும் யோகிகளும் மகிழ்ந்தனர். ‘எங்கள் கண்கண்ட தெய்வமே...’ என்று அவரைக் கட்டிக் கொண்டனர்.
அவர்கள் மட்டுமின்றி, அங்கிருந்த மரம் செடிகள் கூட, தலை தூக்கி நன்றி தெரிவித்தன. நறுமணம் பரப்பின. மலர்ந்து முகம் பார்த்தன.
இந்த சமயத்தில்தான், மகிஷியின் உடலிலிருந்து இன்னொரு உடல் வெளியே வந்தது. அவள் ஒரு பெண். வரத்தினால் கிடைத்த சாபத்தால் செத்தொழிந்தாள் மகிஷி. இங்கே சாபத்தால் அரக்கிக்குள் ஐக்கியமாகி அடைபட்டுக் கிடந்த அந்தப் பெண், சாபத்தில் இருந்து விமோசனமானாள்.
மணிகண்ட சுவாமியிடம் வந்தாள். கைகூப்பினாள். நமஸ்கரித்தாள். விழுந்து வணங்கினாள். ‘நன்றி ஐயனே. அதேசமயம், என்னை அரவணைத்துக் கொள்ளுங்கள். மணம் புரிந்து என்னை வாழச் செய்யுங்கள். என் பெயர் லீலாவதி’’ என்றாள்.
திக்கென்று ஆகிவிட்டது மணிகண்ட சுவாமிக்கு! என்ன பேசுவது, என்ன சொல்வது. தெரியாமல் மெளனம் காத்தார். அவளும் அமைதியாக மணிகண்டனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
பிறகு மணிகண்டனே பேச ஆரம்பித்தார். ’இந்த அவதாரம் வேறு விதம். நித்ய பிரம்மச்சாரி நான் இந்தத் தருணத்தில். அதாவது தருணம் என்பது, இந்தச் சூழல், இந்த காலநிலை, இந்த அவதாரம். நித்யபிரம்மச்சாரியாகவே இருப்பதாகத்தான் தீர்மானித்திருக்கிறேன். சங்கல்பம் எடுத்திருக்கிறேன். ஆகவே என்னை அடையவேண்டும் என்கிற உன்னுடைய விருப்பம் மாற்றிக் கொள். அது நிறைவேறாது லீலாவதி’ என்றார்.
அப்போதும் விடவில்லை அவள். அதையெல்லாம் பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவுமில்லை. ’சுவாமி... அப்படி என்னை ஒரேயடியாகப் புறக்கணித்தால் நியாயமே இல்லை. இப்படியெல்லாம் நிராகரிக்காதீர்கள் என்னை! கொஞ்சம் கருணையுடன் என்னை அணுகுங்கள். ஏற்றுக் கொள்ளுங்கள் சுவாமி’ என்றாள் கெஞ்சலாக! சிறிது மெளனத்துக்குப் பிறகு குரல் உடைந்து அழ ஆரம்பித்தாள்.
‘சரிம்மா. உனக்கொரு வாய்ப்பு. ஒரேயொரு வாய்ப்பு. இங்கே... இந்த மலையில்... எனக்கே எனக்கென ஆலயம் ஒன்று அமையப்போகிறது. அதில்தான் நான் நிரந்தரமாகக் குடியிருக்கப் போகிறேன். என்னைத் தரிசிக்க இந்த மலை மீது ஏறி வருகிற, கோடிக்கணக்கான பக்தர்களுக்கு இங்கே தவக்கோலத்தில் இருந்தபடி அருள் செய்யப் போகிறேன்.
அப்படி இங்கே வரும் பக்தர்கள், அடுத்த முறை வரும்போது, ஒரு பக்தரையேனும் புதிதாக அழைத்து வருவார். அப்படி வருகிற புதியவர், மறுவருடம் இன்னொரு புதியவர், இன்னொரு புதியவர் என வந்துகொண்டே இருப்பார்கள்.
ஆக, வருடாவருடம் கன்னிசாமி என்று அழைக்கப்படும் புதிய பக்தர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். இது தொடரும். தொடர்ந்து கொண்டே இருக்கும். இதுவே விதி. அதாவது இந்தத் தலத்தின் மகிமை.
எனவே, ஏதேனும் ஒரு வருடத்தில், கன்னிச்சாமிகள் ஒருவர் கூட வராத நிலை ஒன்று அமையுமா. தெரியவில்லை. அப்படி அமையாத நிலை வந்தால், அதாவது கன்னிச்சாமி ஒருவர் கூட வராத வருடம் அமைந்தால், உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன்’ என்றார் மணிகண்ட சுவாமி!
லீலாவதி யோசித்தாள். இது நடக்குமா என்று கலங்கினாள். நடக்கவேண்டுமே என்று ஆசைப்பட்டாள். நடந்துவிடும் என்று முழுதாக நம்பினாள்.
அப்போது மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார் மணிகண்ட சுவாமி. ‘இந்த மலையில், என் ஆலயத்துக்கு அருகிலேயே உனக்கும் ஆலயம் எழுப்பச் செய்கிறேன். எனக்கு இடப்பக்கத்தில் கோயில் கொண்டிரு. கோயிலில் இரு. மாளிகைபுரத்து அம்மனாக இருந்து அருள் செய். என்னைப் பார்க்க வருவோர், உன்னையும் பார்க்க வருவார்கள். எல்லோர்க்கும் அருள் செய். உன்னை எல்லோரும் மஞ்சமாதா என்று அழைப்பார்கள்’ என்று சொல்லி ஆசீர்வதித்தார்.
அவள்... லீலாவதி மீண்டும் அவரை நமஸ்கரித்தாள்.
விருப்பமானவருக்கு அருகில் இருக்கக் கசக்குமா என்ன? அதிலும் நாம் விரும்புவது சாமான்யரையா. சாஸ்தாவை! அவர்... தர்மசாஸ்தா. ஆக, தர்மசாஸ்தாவுக்கு அருகில் நாம். அதுவும் எப்படி? அவருக்கு அடுத்து உள்ள ஆலயத்தில்! அந்தக் கோயில் யாருக்காக? நமக்காக. இப்படியொரு பாக்கியம் எவருக்குக் கிடைக்கும்? இதுதான் உண்மையான சாப விமோசனமா. இதுதான் சத்தியமான வரமா? யோசித்து நெகிழ்ந்தவள், சந்தோஷத்துடன் சம்மதித்தாள்.
இன்றைக்கும் சந்தோஷத்துடன் அங்கே காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறாள் மஞ்சமாதா. துக்கத்துடனும் வேதனையுடனும் கவலையுடனும் கண்ணீருடனும் சந்நிதிக்கு வருகிற கோடிக்கணக்கான பக்தர்களுக்கு, கருணையுடன் தாயுள்ளத்துடன் அருள்மழை பொழிந்து கொண்டிருக்கிறாள் இந்த மஞ்சமாதா!
சபரிமலை செல்லும் பக்தர்களே... மலையில், மஞ்சமாதா சந்நிதியில், உங்கள் அம்மாவுக்காக, சகோதரிகளுக்காக, உறவில் உள்ள பெண்களுக்காக, அக்கம்பக்கத்தில் உள்ள பெண்களுக்காக, அலுவலகத்தில் உடன் பணிபுரியும் தோழியருக்காக... அவர்களின் நலனுக்காக, அவர்கள் குடும்ப நலனுக்காக மனதார வேண்டிக் கொள்ளுங்கள். ஆத்மார்த்தமாக அவளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அவர்களின் குறைகளையெல்லாம் சொல்லி வேண்டுகிற உங்கள் குறைகளையும் சேர்த்துத் தீர்த்து வைப்பாள் மஞ்சமாதா!
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!
- ஐயன் வருவான்
தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT