Last Updated : 20 Jan, 2018 11:17 AM

 

Published : 20 Jan 2018 11:17 AM
Last Updated : 20 Jan 2018 11:17 AM

வாழ்வில் வசந்தம் தருவாள் தேவி! வசந்த பஞ்சமியை மறக்காதீங்க..!

வளமான எதிர்காலம் வேண்டும் என்பதுதான் எல்லோரின் ஆசையும் பிரார்த்தனையும். அதற்கு நிகழ்காலத்தில் உழைப்பும் சேமிப்பும் இருக்க வேண்டும் என்பதுதான் நம் எல்லோருடைய எதிர்பார்ப்பும் வேண்டுதலும்! சுக்ல பஞ்சமி என்று சொல்லப்படும் வசந்த பஞ்சமி நாளில், அம்பாளைத் தொழுது பிரார்த்தித்தால், வாழ்வில் வசந்தம் நிச்சயம் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

சக்தி வழிபாடு என்கிற சாக்த வழிபாட்டுக்கு எப்போதுமே வலிமை அதிகம் உண்டு. அம்பாள் என்கிற மகாசக்தியை எப்போது வணங்கினாலும் எப்போதும் நம்மைக் காத்தருள்வாள் தேவி!

ஆடி என்பது அம்மனுக்கு உகந்த மாதம். சொல்லப்போனால், ஆடி என்பதே அம்மனுக்கான மாதம் என்பார்கள்.

அதேபோல், தை மாதத்தின் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் அம்பாள் வழிபாட்டுக்கு உரிய நாட்கள் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

மேலும் அவர், ‘பஞ்சமி திதியில் அம்பிகையை வணங்குவது கூடுதல் பலன்களைத் தரும். அதிலும் தை மாதத்தின் சுக்ல பஞ்சமியை வசந்த பஞ்சமி என்றும் போற்றுகின்றன ஞானநூல்கள். எனவே சுக்ல பஞ்சமி எனப்படும் வசந்த பஞ்சமியில், அம்பாளை வணங்குவதும் அர்ச்சித்து பூஜிப்பதும் நைவேத்தியங்கள் படைத்து பிரார்த்தனை செய்து கொள்வதும் வாழ்வில், நல்ல நல்ல விஷயங்களைத் தந்தருள்வாள் அன்னை என்பது சத்தியம்! என்றார்.

வருகிற 22.1.18 திங்கட்கிழமை அதாவது நாளை மறுதினம் சுக்ல பஞ்சமி. அதாவது வசந்த பஞ்சமி. அம்பிகையைக் கொண்டாடுவதற்கு உரிய அற்புதமான நாள்.

இந்த நாளில், காலையில் விரதம் மேற்கொள்ளுங்கள். வீட்டில் விளக்கேற்றி அபிராமி அந்தாதி பாராயணம் செய்யலாம். ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். இவை வாழ்வில் பல உன்னதங்களைப் பெற்றுத் தரும். சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம், கேசரி முதலான நைவேத்தியங்களைப் படைத்து தேவியை உபாஸிக்கலாம்.

அதேபோல், அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று அம்பாளை வணங்கி வழிபடுங்கள். செவ்வரளி மாலை சார்த்துங்கள். செந்நிற மலர்கள் சூட்டுங்கள். நெய் விளக்கு ஏற்றி வழிபடுங்கள். எலுமிச்சை மாலை சார்த்தி வழிபடுவது இன்னும் வளமும் பலமும் சேர்க்கும்.

முடிந்தால், அன்றைய நாளில், அம்பாளை வழிபட்டு, இயலாதோருக்கு தயிர்சாதம் வழங்குங்கள். அதில் குளிர்ந்து போய், நம் வாழ்வில் வசந்ததத்தைத் தந்தருள்வாள். நம் வாழ்க்கையையே குளிரச் செய்துவிடுவாள் தேவி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x