Published : 03 Jan 2018 02:47 PM
Last Updated : 03 Jan 2018 02:47 PM
ஐயப்ப பக்தர்களே... உங்களுக்காக!
எல்லாக் கோயில்களிலும் பூஜைகளும் வழிபாடுகளும் ஆகம விதிகளின்படி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதேபோல், அந்தந்தக் கோயில்களில், சில சடங்குசாங்கியங்கள் மிகக் குறைவாக நடைபெறுவதையும் பார்க்கலாம். ஐயப்ப மலையில், சபரிமலையில், அப்படியான சடங்கு சம்பிரதாயங்கள் ஏராளம் உண்டு. இவை யாரோ கடைபிடித்து, அதன் பிறகு நாமெல்லாரும் ஏற்றுக் கொண்டு செய்யவில்லை. சாட்ஷாத்... அந்த ஐயப்ப சுவாமியே செய்தருளிய விஷயங்களை, பக்தர்களாகியம் நாம் செய்துகொண்டிருக்கிறோம். மற்ற கோயில்களை விட, ஐயப்பன் ஆலயத்துக்கு உள்ள தனித்துவமும் மகிமையும் இதேபோல் எண்ணிலடங்காததாக அமைந்திருக்கிறது.
சபரிமலை என்று சொன்னதுமே சிலிர்த்துப் போகிற பக்தர்கள் இருக்கிறார்கள். வருடந்தோறும் மாலையணிந்து, கடுமையான விரதங்களை மேற்கொண்டு, இருமுடி சுமந்து, சபரிமலைக்கு வந்து, ஐயன் ஐயப்ப சுவாமியைத் தரிசிக்கும் பக்தர்களின் எண்ணங்களில் எல்லாம் ஐயப்ப சுவாமியே முழுவதுமாக, பெளர்ணமி நிலவென நிறைந்திருக்கிறான். நிறைந்து அருள்பாலிக்கிறான்.
பந்தள ராஜாவுக்கு ராஜ்ஜியத்தை தன் மைந்தன் மணிகண்டன் ஆளவில்லையே, ஆள்வதற்கு ஒப்புக் கொள்ளவில்லையே என்பதில் வருத்தம்தான். அந்த மன்னனுக்கு எப்படித் தெரியும்... பின்னாளில், அவதார நோக்கங்கள் முடிந்ததும், இந்த தேசத்தில்... மலையில்... சபரிமலையில் அமர்ந்துகொண்டு, அகில உலகையே ஆளப்போகிற கண்கண்ட தெய்வமாகவே திகழப் போகிறான் என்பதையெல்லாம் உணரவே இல்லை.
ராஜ்ஜியமே வேண்டாம் என்ற மணிகண்டன், ‘எனக்கு இந்த தேசத்தில் இருந்து கொஞ்சம் இடம் தரமுடியுமா’ என்று கேட்டான். நெகிழ்ந்து போனான் மன்னன். கேட்டதில் கரைந்து மகிழ்ந்தான்.
‘என்ன கேள்வி இது. ராஜ்ஜியத்தையே உனக்குத் தருகிறேன் என்றேனே. தேசத்தையே நீ எடுத்துக் கொள் என்று சொன்னேனே. நீ என்னடாவென்றால், கொஞ்சம் இடம் கேட்கிறாய். சரிப்பா... எடுத்துக்கொள்’ என்றான் சந்தோஷத்துடன்!
உடனே மணிகண்டன், ‘நான் அம்பு விடுகிறேன்.வில்லில் இருந்து அம்பு விடுகிறேன். அந்த அம்பானது, எங்கே விழுகிறதோ... அந்த இடத்தைத் தாருங்கள். அதுபோதும். அங்கே கோயில் அமையட்டும். அங்கிருந்து பரிபாலனம் செய்கிறேன்’ என்று கைகூப்பினான். கண்கள் மூடி, நெஞ்சில் அம்பை அணைத்துக் கொண்டான். இது குறி பார்ப்பதற்கான பிரார்த்தனை அல்ல. நல்ல இடம் வேண்டும் என்பதற்கான வேண்டுதல் இல்லை. இந்த உலகம் உய்ய வேண்டும், உலக மக்கள், சீரும் சிறப்புமாக, செம்மையாக வாழவேண்டும் என்பதற்காக, சிவனாரையும் மகாவிஷ்ணுவையும் நினைத்துச் செய்த பிரார்த்தனை.
உங்களால் வந்தவன்... உங்களைப் போல் கோயில் கொண்டு அருள்பாலிக்க, ஆட்சி நடத்த, அருளாட்சி நடத்த அனுமதி தாருங்கள். அருள் மழை பொழியுங்கள் என்பதான பிரார்த்தனை அது.
மணிகண்டன், வில்லில் அம்பு பூட்டினான். தொடுத்தான். விடுத்தான். அந்த அம்பு பறந்து சென்று, ஓரிடத்தில் குத்திட்டு நின்றது. அப்படிக் குத்திட்டு நின்ற போது, வந்த வேகத்தில் இப்படியும் அப்படியுமாக ஆடியது. அப்படி ஆடியது, மணிகண்டனை அழைப்பது போல் இருந்தது.
இன்றைக்கு ஐயப்பன் அழைத்துக் கொண்டிருக்கிறான், லட்சக்கணக்கான பக்தர்களை! கார்த்திகை தொடங்கிவிட்டாலே, தினமும் ஆயிரக்கணக்காக, மார்கழி வந்துவிட்டாலே பல்லாயிரக்கணக்காவும் மார்கழி முடியும் வேளையில் லட்சக்கணக்காகவும் பக்தர்கள் சரம்சரமாக, சாரைசாரையாக வந்துகொண்டே இருக்கிறார்கள்.
எங்கே... சபரிமலை எனும் சாஸ்தாவின் பீடத்துக்கு! சாதாரண இடமா அது. சக்தி மிக்க இடம். சாந்நித்தியம் பரவியிருக்கும் இடம். சாஸ்தா குடிகொண்டிருக்கும் இடம். ஆம்... மணிகண்டன் விட்ட அம்பு, குத்திட்டு நின்று சுட்டிக் காட்டிய இடம்தான்... சபரிமலை! இன்றைக்கும் தவக்கோலத்தில் இருந்தபடி, உலகையும் மக்களையும் ரட்சித்துக் கொண்டிருக்கும் அற்புதமான மலை என்று போற்றிக் கொண்டாடுகிறார்கள் பக்தர்கள்!
அம்பு காட்டிய இடத்தை மணிகண்டன் பார்த்தான். மன்னன் பார்த்தான். அகத்திய மாமுனி கண்டு சிலிர்த்தார். தேவர் பெருமக்கள் பார்த்தார்கள். பந்தளதேசத்தின் வீரப்படையினர் பார்த்தார்கள்.
அகத்திய மாமுனிவர், ‘ஆஹா... ஆஹா... இந்த இடம்தானா. இந்த இடம்தானா...’ என்று சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். அந்தப் பூமியை முத்தமிட்டார். மண்ணை எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்டார். சிரசில் வைத்துக் கொண்டார். மண்ணைப் பிரசாதம் போல், வாயில் இட்டுக் கொண்டார். ஆமாம்... அது பிரசாதம்தான். மலை, மலையில் உள்ள மரங்கள், மரங்களின் கிளைகள், கிளைகளில் உள்ள இலைகள், இலைகளுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் கனிகள், மரத்தின் கீழே கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் விதைகள் என சகலமும் சபரிமலையின் பிரசாதங்கள்தான்!
ஐயனின் அருட்பிரசாதங்களுக்கும் அருளாடல்களுக்கும் அளவே இல்லை.
எல்லோரும் அந்த மலையையும் மலைபூமியையும் பார்த்தார்கள். பார்த்துவிட்டு, பரவசமானார்கள். பிறகு மணிகண்டன் பக்கம் திரும்பினார்கள்.
மணிகண்டனைக் காணோம். சிவாவிஷ்ணுவுடன் ஐக்கியமாகப் புறப்பட்டிருந்தார் மணிகண்டன்.
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!
-ஐயன் வருவான்
தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT