Published : 02 Dec 2017 08:36 AM
Last Updated : 02 Dec 2017 08:36 AM
‘இந்தப் பிச்சைக்காரன், 1952ம் வருடம்... சுவாமி பப்பா ராம்தாஸைத் தரிசித்த தருணத்தில், செத்துப் போய்விட்டான். சுவாமி பப்பா ராம்தாஸ், இவனைக் கொன்றுபோட்டார். அதற்குப் பிறகு... இங்கே எதுவும் இல்லை. எவரும் இல்லை. அவருடைய தாமரை போன்ற பாதங்களைக் கெட்டியாக நான் பற்றிக் கொண்டேன். அப்படிப் பற்றிக் கொண்டதால், இத்தனை பெரிய செயல், அழகாக நிகழ்ந்தது’ என்று பகவான் யோகி ராம்சுரத்குமார் அருளியிருக்கிறார்.
சுவாமி பப்பா ராம்தாஸை, தன் குருவாக வரித்துக் கொண்டார் பகவான் யோகி ராம்சுரத்குமார். அவரே எல்லாமும்... குருவே சகலமும் என்று உறுதியாக இருந்தார். அந்த உறுதி, அவரை இன்னும் இன்னும் குருவிடம் நெருங்கச் செய்தது.
குரு என்பவரும் அப்படி நெருங்கி வருவார். இன்னும் இன்னும் வேகமாக நெருங்கி வருவார். நெருங்கி வந்து ஆசீர்வதிப்பார்.
பகவான் யோகி ராம்சுரத்குமார், 1952ம் வருடத்தில்... குருநாதர் பப்பா ராம்தாஸை தரிசித்த போது, செத்துவிட்டேன் என்கிறார். என்னை, இந்தப் பிச்சைக்காரனைக் கொன்றுவிட்டார் என்று சிலாகிக்கிறார். அவருக்கு... அந்த மகானுக்கு... பகவான் யோகி ராம்சுரத்குமாருக்கு நேற்றைய தினம் நடந்தது ஜயந்தி விழா.
குரு யோகி ராம்சுரத்குமார் எனும் அற்புத மகான் அவதரித்த நாள் நேற்று. உலகின் பல இடங்களிலும் பல ஊர்களிலும் அவரின் அடியவர்கள் குழுவாக இருந்து, ஜயந்தி நாளை விழாவாக்கினார்கள். அந்த விழாவை, மிகப்பெரிய வழிபாடாக, பூஜையாக, சத்சங்கமாகச் செய்து பிரார்த்தித்தார்கள்.
குரு என்பவரை வணங்க வணங்க, குரு என்பவர் நம்மைத் தேடியே வந்துவிடுவார். குருவை நினைத்து எங்கெல்லாம் சத்சங்கம் கூடுகிறதோ... சத்தான நிகழ்வுகளைக் கொண்டு குருநாதர் ஆராதிக்கப்படுகிறாரோ... அங்கே குருநாதர் வந்து உட்கார்ந்து கொள்வார்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில், நர்த்ரா எனும் கிராமத்தில், 1918ம் வருடம், டிசம்பர் மாதம் 1ம் தேதி இரண்டு சூரியன்கள் உதித்தன. வானில் வழக்கம்போல்... அனுதினமும் உதிக்கிற சூரியன் ஒன்று. அடுத்து... நூறுகோடி சூரியப் பிரகாசத்துடன் பூமியில் உதித்த, ஜனித்த பகவான் யோகி ராம்சுரத்குமார்.
அந்தச் சூரியன் கிழக்கில் உதிக்கும். உதித்தது. இந்தச் சூரியன்... வடக்கே உதித்தது. தெற்கே நகர்ந்து, தன் கருணையையும் அன்பையும் அருளையும் கதிர்களெனப் பரவவிட்டது. பின்னாளில்... பகவான் யோகி ராம்சுரத்குமார் எனும் மகானைக் கண்டறிந்து, இவர் சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர் என்று சொன்னார்கள். சொல்லிப் பூரித்தார்கள்.
அப்பா அம்மா, அவருக்கு ராம்சுரத்குன்வர் என்று பெயரிட்டார்கள்.சீராட்டி வளர்த்தார்கள். ஒழுக்கமான குடும்பம், ஒழுக்கத்தை போதிக்காமல், வாழ்க்கையாகவே கடைப்பிடித்தது. இறை நம்பிக்கை கொண்ட அந்தக் குடும்பம், பிள்ளைக்கும் இறை நம்பிக்கையை சாதத்துடன் பிசைந்து ஊட்டியது. பின்னாளில்... இந்தக் குழந்தை, தெய்வக் குழந்தையாகவும் ஞானக்குழந்தையாகவும் வளர்ந்து, உலகுக்கே ஒளி தரும் ஞானச்சூரியனாகத் திகழும் என்பதையெல்லாம் அந்தக் குடும்பம் அறிந்திருக்கவில்லை. கடவுள் கதை சொல்லி வளர்க்க... கடவுளின் சரிதங்களைக் கேட்டு வளர... இந்தக் குழந்தை பின்னாளில் கடவுளாகவே கொண்டாடப்படும் என்பதை யாரால்தான் அறியவும் உணரவும் முடியும்.
காசி என்பது சாதுக்களின் தேசம். உலகின் எந்த மூலையிலிருந்தெல்லாமோ... அங்கே சாதுக்கள் வருவார்கள். எப்போது திரும்பிச் செல்வது என்கிற எந்தத் திட்டமிடலும் இல்லாமல் வருவார்கள். சிலகாலம் அங்கே தங்கியிருப்பார்கள். சிலர் சிவ பூஜையிலும் சிலர் தவத்திலுமாக இருப்பார்கள். சில நேரங்களில் சாதுக்கள் சேர்ந்து கொள்வார்கள். கடவுள் என்பவர் யார் என்று யாரோவொரு சாது கேள்வி கேட்க, அதற்கான பதிலை இன்னொரு சாது சொல்ல, அந்த சாதுவின் பதிலில் இருந்து ஒரு கேள்வியை வேறொரு சாது கேட்பார். அங்கே... இந்த உலகின், இந்தப் பிரபஞ்சத்தின், அற்பமான வாழ்வின் ரகசியங்கள் கொஞ்சம்கொஞ்சமாக உடைபடும்.
அவர்கள் சாதுக்கள். அது சாதுக்களின் கூட்டம். அவர்கள் கூடிப் பேசுகிற பேச்சு... வெறும் அரட்டை அல்ல. ‘இன்னும் தூக்கம் வரலை. அதனால கொஞ்சம் பேசிக்கிட்டிருக்கோமே...’ என்று பொழுதைப் போக்குவதற்கான பேச்சு அல்ல அது. ‘அவன் அன்னிக்கி என்ன பண்ணினான் தெரியுமா... இவன் ஏன் இப்படி அலையுறான்...’ என்றெல்லாம் அடுத்தவர் பற்றி, புறம் பேசுவதற்காக, புறம் பேசி சுவாரஸ்யமாக்கிக் கொள்வதற்காக, சுகம் என்பதாக நினைத்து மற்றவரை பரிகசிப்பதற்காகக் கூடியவர்கள் அல்ல.
அவர்கள் சாதுக்கள். கடவுள் தேடலை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர்கள். எண்ணம், செயல், வாக்கு என்று எல்லாவிதங்களிலும் கடவுள் பற்றியே, பற்றிக் கொண்டிருப்பவர்கள். சலனமே இல்லாமல், சத்தமே செய்யாமல் ஓடிக்கொண்டிருக்கிற கங்கையை சாட்சியாகவும் துணையாகவும் வைத்துக் கொண்டு, காசிக்கு அருகில் உள்ள கிராமத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கே சில்லென ஓடுகிற கங்கைக்கு அருகில், கங்கைக் கரையில், துளைத்தெடுக்கும் குளிருக்கு இதமாகவும் இருட்டைக் கிழித்து வெளிச்சம் பாய்ச்சுவதற்காகவும் நெருப்பை மூட்டிக் கொண்டு, அந்த நெருப்பைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு, அவர்கள் பேசுகிற பேச்சுகள்... சம்பாஷணைகள்... கடவுள் தேடலுக்கான விடைகள். கடவுளை அடைவதற்கான பாதைகள். அது... சாதுக்களின் சத்சங்கம்.
ராம்சுரத் குன்வர் எனும் சிறுவன், படிக்கிற நேரம் போக, சாதுக்கள் கூட்டத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அரை டிராயருடன், அந்த சின்னஞ்சிறுவன்... சாதுக்களின் கூட்டத்துக்கு அருகில் நின்று, மழையை ரசிப்பது போல், கடலை வியந்து பார்ப்பது போல், மலையைப் பார்த்துப் பிரமிப்பது போல சாதுக்களின் கூட்டத்தை ரசித்து, வியந்து, பிரமித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த சத்சங்கத்தை, சாதுக்களின் சத்சங்க உரையாடலைக் கேட்டபடி இருந்தான்.
இன்றைக்கு, பகவான் யோகி ராம்சுரத்குமாரின் பக்தர்கள், அன்பர்கள் கூடுகிறார்கள். கூடி சத்சங்கம் போல் கருத்துகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள். பகவான் யோகி ராம்சுரத்குமார் பற்றி, அவரின் பேரன்பு குறித்து, பெருங்கருணையைச் சொல்லி, அவரின் திருநாமங்களைக் கொண்டாடி, பாடுகிறார்கள்.
நேற்றைய தினம்... பகவான் யோகி ராம்சுரத்குமார் அவதரித்த தினம். 99வது ஜயந்தித் திருநாள். இதோ... இன்றில் இருந்து தொடங்குகிறது நூற்றாண்டு.
அன்பு மழையாக, அருட்கடலாக, ஞான மலையாக இருந்து திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமார் நம்மை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். அருள் வழங்கிக் கொண்டிருக்கிறார்.
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெய குரு ராயா!
-ராம் ராம் ஜெய்ராம்
தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT