Last Updated : 20 Feb, 2018 12:16 PM

 

Published : 20 Feb 2018 12:16 PM
Last Updated : 20 Feb 2018 12:16 PM

தாயே நீயே துணை! 7: கர்வம் தொலைத்தால் கமடேஸ்வரர் காப்பார்!

அம்மன் தலங்கள்... அற்புதங்கள்

சிவனின்றி சக்தியில்லை என்பார்கள். சக்தியில்லையேல் சிவமில்லை என்போம். சிவமும் சக்தியுமாக, சக்தியும் சிவமுமாக குடிகொண்டு அருள்பாலிக்கும் தலம்தான் சென்னை காளிகாம்பாள் கோயில்.

இங்கே, சக்தியின் ராஜ்ஜியம்தான். மகாசக்தியே பிரதான தெய்வமாக, வியாபித்து ஆட்சி செய்துகொண்டிருக்கிறாள். என்றாலும் கூட, சிவமும் தன் அருளால், வருவோருக்கு ஞானத்தையும் யோகத்தையும் தந்துகொண்டிருக்கிறார் இங்கே!

ஒருநல்ல நாள் பெரியநாள் என்றால், பிறந்தநாள் கல்யாண நாள் என்றால், அப்பாவையும் அம்மாவையும் நமஸ்கரித்து வணங்கி மகிழ்வோம்தானே. அப்படித்தான் ,இங்கே இந்த காளிகாம்பாள் கோயிலில், சக்தியையும் சிவத்தையும், சிவத்தையும் சக்தியையும், சிவ சக்தியையும் ஒருசேர வணங்கி வழிபடுகிறார்கள் பக்தர்கள்.

காளிகாம்பாள் குடிகொண்டிருக்கும் இந்தக் கோயிலில், ஒரு சிவனுக்கு இரண்டு சிவனார் சந்நிதி கொண்டிருக்கின்றனர். ஒருவரின் பெயர் அருணாச்சலம். ஆமாம்... அருணாசலேஸ்வரர். நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையின் நாயகன் அருணாசலேஸ்வரர் எனும் திருநாமத்துடன் இங்கே குடிகொண்டிருக்கிறார்.

அடுத்து... கமடேஸ்வரர். கமடம் என்றால் ஆமை. அந்தத் திருநாமத்துடன் கோயில் கொண்டிருக்கிறார் சிவபெருமான். ஆக அருணாசலேஸ்வரரையும் கமடேஸ்வரரையும் நின்று நிதானித்து வணங்கவேண்டும்.

ஏன்... என்ன காரணம்?

அருணாசலேஸ்வரருக்கும் கமடேஸ்வரருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.

ஆமாம். இருவருமே சிவனார். ஈசன். சிவபெருமான். அதுதானே ஒற்றுமை என்கிறீர்கள்தானே.

இன்னொரு முக்கியமான ஒற்றுமை உண்டு.

அதாவது, அருணாசலேஸ்வரர் யார். அருணாசலம் என்பது என்ன. மலையே சிவம், சிவமே மலையென ஏன் அப்படியொரு விஸ்வரூபமெடுத்து நின்றார்.

நானே பெரியவன் என்றார் மகாவிஷ்ணு. நீயா... பெரியவனா... அதெப்படி. நானே பெரியவன் என்றார் படைப்புக் கடவுளான பிரம்மா. ஆக, இருவருக்கும் நடந்தது நீயா நானா போட்டி. கடைசியில் இப்படி முடிவானது. ‘என் அடியையும் முடியையும் கண்டுபிடியுங்கள். தொடுங்கள். யார் பெரியவர் என்று சொல்கிறேன் என்றார் சிவன். அதன்படியே, அடியைத் தேடி மகாவிஷ்ணுவும் முடியைத் தேடி பிரம்மாவும் புறப்பட்டனர்.

ஆனால் இவர்களால் அடியையும் தொடமுடியவில்லை. முடியையும் பார்க்க முடியவில்லை. தேடுதேடென தேடிக் கொண்டிருக்கின்றனர். அடியைத் தேடி பூமிக்குள்ளேயும் புகுந்து புறப்பட்டார் ஒருவர். முடியைத் தேடி வானுக்குள்ளேயே வளைந்தும் நெளிந்துமாக ஊடுருவினார் இன்னொருவர்.

ஆனாலும் அடிமுடி தொடமுடியவில்லை. சிவமே பெரிது, சிவனே பெரியவர் என்பதை உணர்ந்தார்கள் என்பது வேறு விஷயம். அங்கே... தான் எனும் கர்வத்தையெல்லாம் அழித்தொழித்தார்கள் என்பதே நாம் எடுத்துக் கொள்ளும் பாடம்.

கர்வம் நம்மிடம் இருந்தால், அது நம்மை அழித்துவிடும். வேரோடு சாய்த்துவிடும். ஆகவே எப்படியேனும் கர்வத்தை அழிப்பதே, நாம் வாழ்வதற்கான ஆதார வழி என்பதை உணர்த்தும் அருணாசலேஸ்வரர், இங்கே, காளிகாம்பாள் கோயிலில் தனிச்சந்நிதி கொண்டிருக்கிறார்.

சரி... கர்வம் சத்ரு என்பதை உணர்த்தும் அருணாசலேஸ்வரர் இருக்கிறார். கமடேஸ்வரர்?

கமடம் என்றால் ஆமை. கிட்டத்தட்ட ஆமை என்பதே கர்வத்தை அடக்குவதன் குறியீடுதான். ஆணவம் தலைதூக்காமல் இருப்பதன் வெளிப்பாடுதான் ஆமை!

ஆமையானது, தன் தலையை என்ன செய்கிறது. ஓட்டுக்குள் அதாவது தன் உடம்புக்குள் சுருக்கிக் கொள்கிறது. ஒரு சின்ன சந்தோஷம் வந்துவிட்டால், லேசான வெற்றி கிடைத்துவிட்டால் நாம் என்ன செய்கிறோம். தலைகால் புரியாமல் ஆடுகிறோம். மொத்த கர்வத்தையும் ஆணவத்தையும் செருக்கையும் திமிரையும் அகங்காரத்தையும் தலையில் வைத்துக் கொள்கிறோம். தலையில் என்றால் தலையிலா? இல்லை... தலைக்குள் இருக்கிற புத்திக்குள் ஏற்றிக் கொள்கிறோம். புத்தியின் ஒவ்வொரு யோசனையிலும் புத்தியின் ஒவ்வொரு செயலிலும் கர்வம் தலை தூக்குகிறது. புத்தியில் இருந்து பேச்சுக்கும் பார்வைக்கும் கர்வம் பரவுகிறது.

அதனால்தான் பலரும் ‘ரொம்பத் திமிராப் பேசுறாம்பா’ என்கிறார்கள். இன்னும் பலர், ‘அவன் பாக்கற பார்வையில ஒரு அலட்சியம், திமிரு இருக்குதுப்பா’ என்கிறார்கள். ஆக, தலைக்குள், புத்திக்குள் கர்வமோ திமிரோ, அலட்டலோ அகந்தையோ வந்துவிட்டால், ஆட்டம் கண்டுவிடுவோம். நம் வாழ்க்கையே ஆடத்துவங்கிவிடும். ஆமையானது, எப்படி தன் தலையைக் கூட தூக்கிக் கொள்ளாமல், காட்டிக் கொள்ளாமல், உடலுக்குள் வைத்துக் கொள்கிறதோ... அப்படியே அமைதியாகவும் நிதானமாகவும் ஆழமாகவும் நிம்மதியாகவும் இருங்கள் என்று சொல்லாமல் சொல்கிறார் கமடேஸ்வரர்.

கருணையும் சக்தியும் வடிவான காளிகாம்பாள் கோயிலுக்கு சென்றிருக்கிறீர்களா. முதலில், அவளின் கோயிலுக்குச் செல்லுங்கள். அங்கே சந்நிதி கொண்டிருக்கும் அருணாசலேஸ்வரருக்கு கொஞ்சமேனும் வில்வம் சார்த்தி வேண்டுங்கள். அடிமுடி தேடிய கதையையெல்லாம் நினைத்துக் கொள்ளுங்கள். நினைத்தாலே முக்தி தரும் தலத்தின் நாயகனை, நெஞ்சமெல்லாம் நிறைக்க பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

அப்படியே காளிகாம்பாளுக்கு அருகில் சந்நிதி கொண்டிருக்கும் கமடேஸ்வரரின் அற்புதத் தரிசனத்தை ஆழ்ந்து கவனித்து, வேண்டிக் கொள்ளுங்கள். அந்த சிவலிங்கத் திருமேனியின் முன்னே நின்று, ஆமை போல் சோம்பேறித்தனம் வேண்டாம்... ஆனால் ஆமை போல் பணிவைக் கொடு என்று வேண்டிக் கொள்ளுங்கள். ஆமை போல் நிதானத்தைக் கொடு என பிரார்த்தனை செய்யுங்கள். எது வந்த போதும், எத்தனை துக்கங்கள் சூழ்ந்த போதும் எதற்கும் பதறாத ஆமையின் மன உறுதியைக் கொடு என்று கேளுங்கள். வில்வமும் செவ்வரளியும் சார்த்தி வேண்டிக் கொள்ளுங்கள். கேட்டதைத் தந்தருள்வார் கமடேஸ்வரர்!

கர்வம் இருக்கும் இடத்தில், காசுபணம் இருந்தும் புண்ணியமில்லை. பிரயோசனமில்லை. அலட்டல் இருக்கும் போது, அங்கே அன்பு செலுத்த ஆளில்லாத நிலை வந்துவிடும். அதனால்தான் கர்வத்தை சத்ரு என்று சொல்லிவைத்தார்கள். ஆணவத்தை எதிரி என்று சொல்லி உணர்த்தியிருக்கிறார்கள்.

அதனால்தான்... ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்றூ சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

நல்ல எண்ணங்களே நம்மை உயர்த்தும். வழிநடத்தும். வழிகாட்டும். இவை அனைத்தையும் நமக்குத் தந்தருளும் கமடேஸ்வரரை சரணடையுங்கள். காளிகாம்பாள் கோயிலின் கமடேஸ்வரரை கண்ணாரத் தரிசித்து, மனதாரப் பிரார்த்தித்து வேண்டிக் கொள்ளுங்கள்.

அத்தனைக்கு பிரதிபலனாக, நேர்த்திக்கடனாக, உண்டியல் காணிக்கை போல கர்வத்தையும் ஆணவத்தையும் விட்டொழிக்கிறேன் என்று உறுதிபட கமடேஸ்வரரிடம் சொல்லிக் கொள்ளுங்கள். உங்கள்வாழ்க்கையை கமடேஸ்வரர் பார்த்துக் கொள்வார்!

- தரிசனம் தொடரும்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x