Published : 08 Feb 2018 06:00 PM
Last Updated : 08 Feb 2018 06:00 PM
ஆன்மிக நிந்தனை செய்தவர்களுக்கும் அநீதிக்காரர்களுக்கும் தண்டனை கிடைக்கும். ஆச்சார்யர்கள் சிரத்தையாக பூஜை செய்யுங்கள். சிவபெருமானுக்கு தினமும் குளிரக்குளிர அபிஷேகம் செய்யுங்கள். சுவாமிக்கு நைவேத்தியமும் பக்தர்களுக்கு அன்னதானமும் தொடர்ந்து நடக்கவேண்டும். இன்னும் இன்னுமான ஆன்மிக பங்கங்களை, ஓரளவேனும் இவையெல்லாம் குறைக்கும் என்பது உறுதி என்கிறார் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸியர்.
தெய்வம் சம்பந்தமானதைக் குறிக்கக் கூடிய ராசி, தனுசு ராசி. உச்சம், நீசம், தோஷம் இல்லாத ராசிகள் என்று மிதுனம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளைச் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம். தெய்வ சம்பந்தமான ராசியாகிய தனுசுக்கு இவையெல்லாம் எப்படி இருக்கும்?
அதேபோல் பெருமாளுக்கு உரிய ராசி மிதுனம். சிவபெருமானுக்கு உரிய ராசி சிம்மம். கிராமதெய்வங்களுக்கும் அம்பாளுக்கும் உள்ள ராசி கும்பம். ஜீவன் அதாவது உயிர், ஓரிடத்தின் சாந்நித்தியம், சக்தி, அங்கே குடிகொண்டிருக்கும் தேவதைகள், தெய்வங்கள், ஆன்மிகம், பக்தி என்று எல்லா விஷயங்களுக்குமானது தனுசு ராசி. அதாவது ஆன்மிக விஷயங்கள் சகலத்துக்குமான ராசி... தனுசு ராசி!
அப்பேர்ப்பட்ட தனுசு ராசியில் சனி பகவான் சஞ்சாரம் செய்யும் போது , ஆன்மிகம் தொடர்பான விஷயங்களில் பிரச்சினைகள் ஏற்படும். கோச்சார ரீதியாகப் பார்க்கும் போதும் லோக ஜாதகமாகப் பார்க்கிற போதும் சனிப்பெயர்ச்சியாலும் சனி தனுசில் அமர்ந்திருப்பதாலும் இன்னும் பல பிரச்சினைகளையெல்லாம் சந்தித்தே ஆகவேண்டும். என்கிறார் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்.
அவர் இன்னும் விவரித்தார்.
’’ஆன்மிக ரீதியிலான பிரச்சினைகள் பலவற்றை பார்த்துக் கொண்டிருக்கிறோம். சனிப்பெயர்ச்சி நேரத்தில் செவ்வாய் பலமிழந்து இருந்ததால்தான் செவ்வாய் தோஷ பரிகாரத் தலமான திருச்செந்தூரில் மண்டபம் இடிந்து விழுந்த சம்பவம் நிகழ்ந்தது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்து, ஆண்டாள் குறித்த தொடர் வாதங்கள், பிரச்சினைகள், போராட்டங்கள், அம்பலமாகி வரும் சிலை திருட்டு விவகாரங்கள், சிலையில் உள்ள தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட விஷயம் என ஆன்மிகத்துக்கான இழுக்குகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இன்னும் தொடரும் என்கிறது ஜோதிட சாஸ்திரம் எனத் தெரிவிக்கிறார் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்.
‘’திருவாலங்காட்டில் உள்ள ஸ்தல விருட்சம் தீப்பிடித்து எரிந்திருக்கிறது. ஆலமரத்துக்கு ராஜமரம் என்று பெயர் உண்டு. அதேபோல் சூரியனை ராஜகிரகம் என்பார்கள். ராஜகிரகமான சூரியனின் விருட்சம், ராஜமரமான ஆலமரம். மகர மாதம் என்று சொல்லப்படும் தை மாதத்திலும் துலா மாதம் என்று சொல்லப்படும் ஐப்பசி மாதத்திலும் சூரியன் பலமிழந்திருப்பார். சூரியனுக்கு ஆகாத வீடுகள், பகைவீடுகள் இந்த மகரமும் துலாமும்! ஆக, சனியின் தாக்கத்தால் சூரியனின் மரமான ஆலமரம் இப்போது தீப்பிடித்திருக்கிறது என்றே எடுத்துக் கொள்ளவேண்டும்.
எனவே, இப்படியான மோசமான வேளையில், மடாதிபதிகள், ஆன்மிகவாதிகள் ஆகியோருக்கு மிகப்பெரிய இழுக்கு ஏற்படும். ஆன்மிக விஷயங்களுக்கு அவமானம் நிகழும். இப்போது நடந்திருப்பவை ஆரம்பம் மட்டும்தான். இன்னும் இன்னும் வீரியத்துடன் மிகப்பெரிய அவமானங்களும் இழுக்குகளும் ஏற்படப் போகின்றன. புண்ணிய க்ஷேத்திரங்கள், புண்ணிய நதிகள், நவக்கிரக தலங்கள், நவதிருப்பதிகள், நவகயிலாய தலங்கள், காசி, ராமேஸ்வரம், காளஹஸ்தி முதலான பரிகாரத் திருத்தலங்கள் முதலானவை, சோதனைக்கும் வேதனைக்கும் ஆட்படும். சொல்லப்போனால், 2020 மார்ச் மாதத்தில் சனி பகவான், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு மாறுகிறார். அதுவரை இப்படித்தான் வீரியமான விஷயங்கள் நடந்தேறும்.
சூரியனை சனி பகவான் பலமிழக்கச் செய்வார். எனவே, மிகப்பெரிய பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். குறிப்பாக, தமிழகம் ரொம்பவே வஞ்சிக்கப்படுகிறது. இன்னும் வஞ்சிக்கப்படும். மிக முக்கியமான அரசியல் மாற்றங்கள் நடந்தே தீரும். அதேபோல, 2020 மார்ச் மாதத்தில், சனி பகவான் தனுசில் இருந்து மகர ராசிக்குச் செல்வதால், யார்யாரெல்லாம் வஞ்சித்தார்களோ அவர்களுக்கெல்லாம் கடுமையான தண்டனைகள் காத்திருக்கின்றன. ஆன்மிகத்தையும் தெய்வங்களையும் நிந்தனை செய்தவர்களுக்கும் வழக்குகளில் இருந்து தப்பிக்கப் பார்த்தவர்களுக்கும் நீதியில் இருந்து விலகி இருந்தவர்களுக்கும் மிகக் கடுமையான தண்டனைகள் கிடைக்கும். ஏனென்றால் சனி பகவான் நீதிமான்! நியாயவான்!
ஆச்சார்யர்கள், தினமும் சிரத்தையுடன் பூஜை செய்யவேண்டும். சிவபெருமானுக்கு தினமும் அபிஷேகங்கள் குறைவின்றி நடந்துகொண்டே இருக்கவேண்டும். பக்தர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு அபிஷேகப் பொருட்களை அருகில் உள்ள சிவாலயங்களுக்கு வழங்குங்கள். முக்கியமாக, உலகுக்கே படியளக்கும் கடவுளுக்கு, தினப்படி நைவேத்தியமும் அவர்கள்தம் பக்தர்களுக்கு அன்னதானமும் குறைவற நடக்கவேண்டும்.
பக்தர்கள், எப்போதெல்லாம் கோயிலுக்குச் செல்கிறீர்களோ... அப்போது மறக்காமல் தீபமேற்றுங்கள். ஓரளவு பாதிப்பில் இருந்தும் அவமானங்களில் இருந்தும் தப்பலாம்’’ என்கிறார் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT