Last Updated : 15 Feb, 2018 09:57 AM

 

Published : 15 Feb 2018 09:57 AM
Last Updated : 15 Feb 2018 09:57 AM

துளி சமுத்திரம் சூபி 17: துறப்பதே ஒழுக்கம்

 

பி

றந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று சாதாரணமாக வாழ்க்கையைக் கடந்து செல்வதற்குச் சிலரால் முடிவதில்லை. அவர்களுக்கென்று வாழ்வில் பிரச்சினைகளும் துயரங்களும் இல்லையென்றாலும் பிறருடையதைத் தங்களுடையதாக எண்ணி அதற்குத் தீர்வு காண்பதன்மூலம் அந்த இன்னல்களையும் வேதனைகளையும் களைய முயல்வது அவர்களது குணாம்சம்.

அவர்களின் பிரார்த்தனை அனைவருக்குமானது; அவர்களின் தேடுதல் என்றும் அனைவருக்குமானது; அவர்களின் முயற்சியும் அதன் மூலம் கிடைக்கும் தீர்வும் அனைவருக்குமானது.

தானென்று நாம் வரையறுப்பதும் அவர்கள் வரையறுப்பதும் முற்றிலும் வேறு வேறானது. நம்மைப் போன்று உடலைக் கொண்டு தங்களை வேறுபடுத்திக்கொள்ளாமல் மனதைக் கொண்டு அனைவருடனும் ஒன்றுபட்டுத் தானென்பதையே அவர்கள் தொலைக்க முயல்வார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை மனம் என்பது கடவுளின் உறைவிடம். கடவுள் ஒன்றென்பதால் அந்த மனங்கள் எல்லாமும் அவர்களுக்கு ஒன்றாகிவிடுகின்றன. இவ்வாறு கடவுளை மனதால் உணர்ந்து, உடலால் ஏற்படும் வேற்றுமைகளைக் களைந்து தானென்பதைத் தொலைத்தவரில் ஒருவர் ஹாரிது அல் முஹாஸிப்.

பாக்தாத்தில் தத்துவப் பள்ளி

சிறந்த அறிவாற்றலும் தெளிவான புரிதலும் இருப்பவரிடமிருந்து வெளிப்படும் எழுத்தும் பேச்சும் அதன் சாரத்தைக் கேட்பவருக்குள்ளும் வாசிப்பவருக்குள்ளும் எளிதில் கடத்துமென்பதற்கு முஹாஸிபின் எழுத்துக்களும் உரைகளும் சான்றுகள். சீரிய எண்ணங்களையும் உயர்ந்த பண்புகளையும் கொண்ட அவர் சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

பாக்தாத்தின் பிரசித்தி பெற்ற இஸ்லாமிய தத்துவப் பள்ளியைத் தோற்றுவித்து அதன்மூலம் பல சூபி ஞானிகளை உலகுக்கு வழங்கியதால் முஹாஸிபிக்கு சூபிகளின் வரலாற்றில் நீங்காத இடம் உண்டு. முஹாஸிப், 781-ம் ஆண்டு பாஸ்ராவில் பிறந்தார். சிறு வயதிலேயே அவர் பாக்தாத்துக்கு குடியேறி அங்கு வசித்த புகழ்பெற்ற ஞானிகளிடமிருந்து இறைஞானத்தையும் ஆன்மிக வாழ்க்கை முறையையும் கற்றுணர்ந்தார்.

முஹாஸிபின் தந்தை பாரசீகத்தைச் சேர்ந்தவர். அவர் செல்வச் செழிப்பும் பெரும் புகழும் உடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், முஹாஸிப் வறுமையில்தான் வாடினார். செல்வந்தனின் மகன் வறுமையில் வாடினான் என்பது நமக்கு ஆச்சரியமளிப்பதாக இருக்கலாம். ஆனால், அந்த வறுமை முஹாஸிப் விரும்பி ஏற்ற ஒன்று. ஆம், தன் தந்தை இஸ்லாம் மார்க்கத்தைச் சார்ந்தவரல்ல என்பதால் முஹாஸிப் அவரது செல்வத்தை முற்றிலும் புறக்கணித்து வறுமையை விரும்பி ஏற்றுக்கொண்டார்.

முஹாஸிப்பைத் தேடிவந்த பணம்

முஹாஸிப் தன் தந்தைக்கு இஸ்லாம் மார்க்கத்தின் பெருமைகளைத் தன்னால் முடிந்தவரை எடுத்துரைத்தார். அறிவுரைகளைக் கேட்க மறுத்த அவரிடம் வாதாடினார்; மன்றாடினார்; சண்டையிட்டார். ஆனால், அவருடைய தந்தையோ இறக்கும்வரை அவரது நம்பிக்கையை மாற்றிக்கொள்ளவில்லை. அவர் மறைவுக்குப் பின் தந்தையின் அளவற்ற செல்வங்களும் முப்பதாயிரம் தினார் பணமும் முஹாஸிப்பைத் தேடி வந்தன.

ஆனால், முஹாஸிப் அவற்றைக் கையால் தொடாமல், கடைக் கண்ணால்கூடப் பார்க்காமல் அப்படியே அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டார். வயிறு நிரம்பியவன் உணவை நிராகரிப்பதும் பசித்த வயிறுடையவன் உணவை நிராகரிப்பதும் வெவ்வேறானது. முதலாவது எளிதானதென்றால் பின்னது பெரும் சவாலானது. ஆனால், வறுமையில் உழன்று பசியில் வாடிய முஹாஸிபுக்கு அது எளிதாகவே இருந்தது. கடவுளின்மேல் முஹாஸிப் கொண்டிருந்த காதல் அந்த அளவு வலிமைமிக்கதாக இருந்தது.

“நம் தேவைக்கு அதிகமாக அபரிமிதமாக நம்மிடம் எது இருந்தாலும் அவை நமது இதயத்தைத் துளைத்து ரணமாக்கித் தீராத இன்னல்களையும் தாங்க முடியாத வேதனைகளையும் மட்டுமே நமக்கு எப்போதும் தரும். அளவுக்கு அதிகமாகக் கேட்பதும், அளவுக்கு அதிகமாகப் பார்ப்பதும், அளவுக்கு அதிகமாகப் பேசுவதும், தேவைக்கு அதிகமாக உண்பதும், தேவைக்கு அதிகமாக உடைகள் வைத்திருப்பதும், அளவுக்கு அதிகமாகச் செல்வங்களைச் சேர்ப்பதும் நமக்கு எந்தவொரு நன்மையையும் ஒருபோதும் அளிக்காது. இன்னும் சொல்லப்போனால் அவை நம்மிடமிருந்து நிம்மதியை நிரந்தரமாக விலக்கி வைக்கும்” என்று எண்ணியவர் தன் வாழ்வை அதன்படியே அமைத்துக்கொண்டார்.

“அளவுக்கு அதிகமாகக் கேட்பது உங்கள் கவனத்தைச் சிதறடித்து மறதியைத் தரும். அளவுக்கு அதிகமாகப் பார்ப்பது உங்களுக்குத் தேவையற்ற குழப்பத்தையே தோற்றுவிக்கும். அளவுக்கு அதிகமாகப் பேசுவது உங்களைப் புகழுக்கு அடிமையாக்கும், அளவுக்கு அதிகமாக உண்பது உங்களைப் பெருந்தீனிக்காரனாக்கும், அளவுக்கு அதிகமான உடைகள் உங்களுக்கு ஒன்றுக்கும் பிரயோஜனமற்ற பெருமையை அளிக்கும், அளவுக்கு அதிகமான செல்வம் உங்களைப் பெருமை தலைக்கேறி ஊதாரியாகத் திரிய வைக்கும்.

எனவே, உங்கள் தேவைக்கு அதிகமாக உங்களிடம் இருக்கும் அனைத்தையும் துறப்பதே நல்லொழுக்கம்” என்பதுதான் முஹாஸிப் தன் சீடர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் முதல் பாடம். அந்த நல்லொழுக்கம் கொண்டவர்கள் மட்டுமே அவரிடம் சீடர்களாகத் தொடர்ந்திருந்தனர்.

மனத்துக்குள் சிம்மாசனம் இட்ட வார்த்தைகள்

நல்ல உணவு அவருக்குக் கிடைக்காமல் இருந்திருக்கலாம். கந்தல் இல்லாத உடை அவரிடம் இல்லாமல் இருந்திருக்கலாம். சிதிலமடையாத வீட்டில் அவர் வசிக்கவே முடியாமல் இருந்திருக்கலாம். சிறு துளி செல்வம்கூட அவரிடம் தங்காமல் இருந்திருக்கலாம். ஆனால், அதையெல்லாம் ஈடுசெய்யும்விதமாகக் கடவுள் அவருக்குக் கூரிய அறிவாற்றலையும் தெளிந்த பேச்சாற்றலையும் அளித்திருந்தார்.

அவர் அறிவின் வீச்சுக்குச் சற்றும் குறைவின்றி அவரிடமிருந்து வெளிப்படும் தெள்ளத்தெளிவான வார்த்தைகளும் எழுத்துக்களும் அவரது எண்ணங்களையும் கருத்துகளையும் கேட்பவர்களின் மனதுக்குள் சிம்மாசனமிட்டு அமரச் செய்தன.

“மனிதன் தனது திறனின் வளர்ச்சிக்கு ஏற்ப மேல் நோக்கி முன்னேறாமல் சௌகரியம் கருதி இருந்த இடத்திலேயே இருப்பதுதான் பெரும்பாலான பிரச்சினைகளுக்குக் காரணம். நமது தேவைகளும், செயல்களும் நமது திறனுக்குச் சவால் அளிக்கும்வண்ணம் கடினமாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால் பிரச்சினை என்ற ஒன்றைப் பற்றிச் சிந்திக்கவோ கவனிக்கவோ நமக்கு நேரமிருக்காது.

பிரச்சினையே இல்லாதபோது வலி ஏது? வேதனை ஏது? இன்னல் ஏது” என்று சொன்ன முஹாஸிப் தனது 73-ம் வயதில் 854-ம் வருடமே இவ்வுலகிலிருந்து விடைபெற்றுவிட்டார். ஆனால், முஹாஸிப் அவர் காலத்தில் உரைத்த உண்மைகள், நம் மனதுக்குள் இன்றும் நுழைந்து அறிவுக் கண்களைத் திறந்து நம் வாழ்வில் ஒளியேற்றிக்கொண்டிருக்கின்றன.

(அந்த ஒளியேற்றம் தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x