Published : 08 Feb 2018 11:40 AM
Last Updated : 08 Feb 2018 11:40 AM
ரா
மாயண, மகாபாரத உபன்யாசங்களை இன்றைய இளைஞர்களும் ரசிக்கும் வகையில் நிகழ்த்திவருபவர் டாக்டர் ரங்கன்ஜி. இவர் சமீபத்தில் சென்னை, குரோம்பேட்டை குமரன்குன்றம் கோயிலின் அருணகிரிநாதர் அரங்கில் ‘விபீஷண சரணாகதி’ எனும் தலைப்பில் நான்கு நாட்களுக்கு உபன்யாசம் நடத்தினார்.
‘வெப் ஆஃப் லைஃப் மேக்கர்ஸ்’ எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மூலம் வேதமும் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணமும் இலவசமாகப் பயிற்றுவிக்கும் உறைவிடப் பள்ளியை பெங்களூருவிலும் ஃபைசலாபாத்திலும் இவர் நடத்துகிறார். வால்மீகி ராமாயணத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட சுலோகங்களுக்கு தமிழ் விளக்கமும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் பல நூல்களை வெளியிட்டுள்ளார்.
பகைவனுக்கும் அருளும் நெஞ்சு
உபன்யாசத்தின் இறுதி நாளில் விபீஷணன் சரணாகதி அடையும் காட்சியை விளக்கினார். விபீஷணன் தன் அண்ணனின் தீய நடவடிக்கையைக் கண்டித்ததால், ராவணனாலேயே இலங்கையை விட்டு வெளியேற்றப்படுகிறான். ஸ்ரீ ராமனிடம் சரணடைய வருகிறான். விபீஷணனைத் தங்களோடு சேர்த்துக்கொள்ளலாம் என்றும் வேண்டாம் என்றும் பலர் தங்களின் கருத்துகளை ராமனிடம் கூறுகின்றனர்.
வாதங்களின் சாரத்தைக் கொண்டும் தர்மசாஸ்திரங்களின் துணைகொண்டும் பகைவனுக்கும் அருளும் நன்நெஞ்சோடு விபீஷணனை எவ்விதம் ராமன் சேர்த்துக்கொள்கிறார் என்பதைத் தம்முடைய அசாத்தியமான புலமையின் மூலம் டாக்டர் ரங்கன்ஜி எளிமையாக விளக்கினார்.
டிஜிட்டல் உலகில் உபன்யாசத்தின் தேவை இருக்கிறதா?
இப்போதுதான் அதிகம் தேவைப்படுகிறது. மனம் அமைதி அடைவதில்தான் மனிதனுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். கோயில்களுக்குப் போவதாலும் உபன்யாசங்களைக் கேட்பதாலும் மனித மனதுக்கு அமைதி கிடைக்கிறது. ஆன்மிகம் என்பதே அமைதியை நாடுவதுதானே! அதனால்தான் நாளுக்கு நாள் கோயில்களில் இறைவனைத் தரிசிக்க கூட்டம் அதிகரிக்கிறது. கோயில்களில் நடைபெறும் உபன்யாசங்களைக் கேட்பதற்கும் கூட்டம் அலைமோதுகிறது.
உங்களின் உபன்யாசங்களில் மற்ற மத நூல்களிலிருந்து ஏதேனும் உதாரணம் காட்டுவீர்களா?
மற்ற மத நூல்களிலிருந்து அதிகம் மேற்கோள் காட்டுவதில்லை. சீக்கியர்களின் புனித நூலான குருக்ரந்த் சாஹிப், பௌத்த மத நூல்களிலிருந்து உதாரணங்கள் காட்டுவது உண்டு.
ராமாயணத்தில் இன்றைக்கும் தேவைப்படும் அத்தியாவசியமான செய்தியைக் கூறும் பாத்திரமாக நீங்கள் யாரை நினைக்கிறீர்கள்?
சுக்ரீவன் தன்னிடத்தில் வரும் எவரையுமே முதல் பார்வையிலேயே சந்தேகக் கண்கொண்டுதான் பார்ப்பார். ஆனால், ராமன் தன்னிடத்தில் வருபவர்களை அன்பு காட்டுவதாகத்தான் முதல் பார்வையிலேயே நினைப்பார்.
சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதில் நன்மையும் உண்டு. மாரீச மானை, மெய்யான மான் என்று எண்ணி இவர்கள் ஏமாற மாட்டார்கள். அதே நேரத்தில், அன்புப் பார்வையில் பார்ப்பவர்கள் எப்போதுமே ஏமாந்து கொண்டும் இருக்க மாட்டார்கள். தம்மை அணுகுபவர்களிடத்தில் முதல் பார்வையிலேயே அன்பைச் செலுத்துபவர்களை எல்லோரும் விரும்புவார்கள். எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். அத்தகைய அன்புப் பார்வை கொண்ட ராமனே, இன்றைக்கும் என்றைக்கும் உலகத்துக்குத் தேவைப்படும் அத்தியாவசியமான செய்தியைச் சொல்லும் பாத்திரம்.
பல்வேறு ராமாயணக் கதைகள் சொல்லப்படுகின்றன. நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
ராமாயணத்துக்குப் பொதுவான விழுமியங்கள் அதிகம் உள்ளன. வால்மீகி, நாரதரிடம் 16 குணங்களைச் சொல்லி அந்தக் குணங்கள் உடையவர் யார் என்று கேட்கிறார். அதற்கான பதிலில்தான் ராமாயணமே தொடங்குகிறது. பரிபூரண மனிதருக்கான எல்லாக் குணங்களும் பொருந்தியவர் ராமர். அதனால்தான் மனித நேயத்துக்குத் தேவையான குணங்களைக் கொண்டவரின் கதை எல்லா மொழிகளிலும் இருக்கிறது.
முஸ்லிம் சகோதரர்கள் அதிகம் வசிக்கும் இந்தோனேசியாவில் இந்தியாவுக்கு அடுத்து ராமாயணம் அதிகமாக இருக்கிறது. மனித இனத்துக்குத் தேவைப்படும் ஒரு காப்பியமாக, உலகம் அனைத்துக்கும் பொதுவான கூறுகளை இது பெற்றிருக்கிறது. அதனாலேயே இது எல்லாருக்கும் பொருந்துகிறது.
உங்களின் உபன்யாசத்தில் ராமனின் நீதி குறித்துக் கேள்விகளை எதிர்கொண்டிருக்கிறீர்களா? உதாரணத்துக்கு, ராஜாஜியின் சக்கரவர்த்தித் திருமகனின் வாலி வதத்தில் ராமனிடம் நீதிக் குறைவு உள்ளதாகக் கூறுகிறாரே?
வாலி கேட்ட கேள்விகளை எல்லாமே ராஜாஜி குறிப்பிடுகிறார். ஆனால், ராமர் கூறும் விளக்கத்தை அவர் வெளியிடவில்லை. வாலியின் மீதான குற்றம் - சுக்ரீவனின் மனைவியை பலாத்காரமாக வைத்திருத்தல்தான். அதற்கு மரண தண்டனை என்னும் முடிவை ராமர் எடுக்கிறார் என்பது ராமரின் விளக்கம். இது ராமரின் நீதி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT