Last Updated : 15 Jan, 2018 11:10 AM

 

Published : 15 Jan 2018 11:10 AM
Last Updated : 15 Jan 2018 11:10 AM

நாளை, தை அமாவாசை புண்ணிய நாள்! சந்ததி சிறக்க... பித்ருக்களை வணங்குவோம்!

கடவுளுக்கு நிகரானவர்கள், பெற்றோர். அவர்கள் மட்டுமா? நம் தாய்தந்தையரைப் பெற்றெடுத்தவர்களும் அதாவது நம் முன்னோரும் கடவுளுக்கு இணையானவர்கள். அப்படி இணையாக நமக்கு அருளும் ஆசியும் வழங்க் கூடியவர்கள்.

நம் அப்பா அம்மாவுடன் வாழ்ந்திருப்போம். தாத்தாக்களையும் பாட்டிகளையும் கூட பேசிக் களித்து, கதைகள் கேட்டு வளர்ந்திருப்போம். அதற்கும் முந்தைய கொள்ளுத் தாத்தாக்களையும் எள்ளுப் பாட்டிகளையும் நம்மில் பலரும் பார்த்திருக்கவே கூட மாட்டோம். நாம் பிறப்பதற்கு முன்பே இறந்திருக்கலாம்!

அப்படி, நம் பெற்றோரையும் நம்மைப் பெற்றவர்களின் தாய்தந்தையையும் அவர்களைப் பெற்றவர்களையும் என வணங்குவதும் ஆராதிப்பதும் நம் சந்ததியினரை செம்மையாக வாழ வைக்கும் என்கிறது தர்ம சாஸ்திரம். அதுமட்டுமல்ல... பித்ருக்கள் என்று சொல்லப்படும் நம் முன்னோரை, உரிய காலங்களில், வணங்குவதும் ஆராதிப்பதும் வழிபடுவதும் பிரார்த்தனை செய்வதும் நம் பிறவியின் முக்கியமான கடன் என்கிறது சாஸ்திரம். அதனால்தான் பித்ருக்கள் கடன் என்றே தர்ப்பண, சிராத்த விஷயங்களைக் குறிப்பிடுகிறோம்.

வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் உள்ளன. முக்கியமாக, மாதந்தோறும் வரும் தமிழ் மாதப் பிறப்பிலும் ஒவ்வொரு மாதமும் வருகிற அமாவாசையிலும் தர்ப்பணம் செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளது சாஸ்திரம். அமாவாசை என்பது பித்ருக்களுக்கான நாள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

அந்த அமாவாசை நாட்களிலும், மூன்று முக்கியமான அமாவாசைகள் உண்டு. அதாவது ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை. நாளைய தினம்... 15.1.18 செவ்வாய்க்கிழமை, தை அமாவாசை. பித்ருக்களுக்கான நாள். அதிலும் தை அமாவாசை என்பதால், இந்த நாளில் செய்யப்படும் தர்ப்பணமானது, நமக்கு மிகுந்த பலத்தையும் மனோ திடத்தையும் வழங்கும். குடும்பத்தில், தடைப்பட்ட காரியங்களை நம் முன்னோர், ஆசி வழங்கி விரைவில் நடத்திக் கொடுப்பார்கள் என்கிறது சாஸ்திரம். இல்லத்தில் உள்ள தரித்திர நிலையில் இருந்து சுபிட்ச நிலைக்கு உயர்த்தித் தருவார்கள் பித்ருக்கள் என்கின்றன ஞானநூல்கள்.

‘அமாயா: பிதரப் ப்ரோக்த: திதீனாம் அதிபா: க்ரமாத்’ என்று சொல்லியபடி, அமாவாசை நாளில், நம் முன்னோர்களை வழிபடுவது மிகவும் அவசியம். ரொம்பவே விசேஷம்! ஆகவே இந்த தை அமாவாசை நாளில், பித்ருக்களை நினைத்து, தர்ப்பணம் செய்யுங்கள்.

‘நன்றி மறவேல்’ எனும் வாக்கின்படி, நாம் இந்த உலகுக்கு வரக் காரணமாக இருந்தவர்களைத் திருப்தி செய்தால்தான், நம்மால் இந்த உலகுக்கு வந்தவர்களை, அதாவது நம் சந்ததியினரைச் செவ்வனே காக்கவும் வளர்க்கவும் முடியும்! அந்தக் கடமையை குறைவறச் செய்தால், நம் முன்னோர்களே நம் சந்ததியைக் காத்தருள்வார்கள் என்பது சத்திய வாக்கு!

தை அமாவாசை நாளில், நம் கடமையைச் செய்வோம். பித்ருக்களை வணங்கி ஆராதிப்போம். காகத்துக்கு அன்னமும் ஏழைகளுக்கு அன்னதானமும் (முடிந்த அளவு, முடிந்தபேருக்கு உணவுப் பொட்டலம்) வழங்குவோம். பசுக்களுக்கு அகத்திக்கீரை வழங்குவோம்! குடும்பத்துடன் நம்மை நிறைவாக வாழச் செய்வார்கள், பித்ருக்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x