Published : 04 Feb 2024 06:26 AM
Last Updated : 04 Feb 2024 06:26 AM
சென்னை: ஈஷா மையம் சார்பில் மகா சிவராத்திரியைமுன்னிட்டு தமிழகம், புதுச்சேரியில் 60 நாட்கள் ரத யாத்திரை நடைபெறுகிறது.
இதுகுறித்து ஈஷா மையத்தின் தென்கயிலாய பக்தி பேரவை நிர்வாகிகள் மகேந்திரன், இந்துமதி, பாலாஜி ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
கோவை ஈஷா யோக மையத்தில் கடந்த 30 ஆண்டுகளாக மகா சிவராத்திரிவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், வரும் மார்ச் 8-ம் தேதிமகா சிவராத்திரி விழா மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி, தென் கயிலாய பக்திபேரவை சார்பில், மகா சிவராத்திரி விழாவுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 4 ஆதியோகி ரதங்களை உள்ளடக்கிய ரத யாத்திரையை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கோவையில் கடந்த ஜன.5-ம் தேதி தொடங்கிவைத்தார்.
மார்ச் 8-ம் தேதி வரை 60 நாட்களில் ஆயிரக்கணக்கான கிராமங்கள் மற்றும் நகரங்கள் வழியாக, சுமார் 35,000 கி.மீ. தொலைவுக்கு ஆதியோகி ரதங்கள் பயணிக்க உள்ளன.
கோவைக்கு நேரில் வந்து தரிசிக்க முடியாத மக்கள், அவர்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அருள் பெறுவதற்கும் இந்த ரத யாத்திரை பயனுள்ளதாக இருக்கும். வரும் 21-ம் தேதி முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆதியோகி ரதம் வருகை தருகிறது.
மார்ச் 7-ம் தேதி வரை அம்பத்தூர், போரூர், கோடம்பாக்கம், அண்ணாநகர், புரசைவாக்கம், மயிலாப்பூர், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இந்த ரதம்பயணிக்க உள்ளது. திருவள்ளூரில் பிப்.22-ம் தேதியும், செங்கல்பட்டில் மார்ச் 4-ம்தேதியும் ரதம் வலம் வரும். இறுதியாக,மார்ச் 8-ம் தேதி மகா சிவராத்திரி நாளன்று, கோவை ஈஷா யோக மையத்தை இந்த ரதங்கள் சென்றடையும்.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில், சிவன் உருவம் தாங்கிய 7 ரதங்கள் பிப்.16-ம் தேதி பயணிக்கத் தொடங்கி, மார்ச் 8-ம் தேதி கோவை வந்தடையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT