Last Updated : 24 Jan, 2018 03:19 PM

 

Published : 24 Jan 2018 03:19 PM
Last Updated : 24 Jan 2018 03:19 PM

குருவே... யோகி ராமா! 44: ‘ராம நாமமா... ராம பாணமா?’

பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்

மற்ற தெய்வங்களுக்கு உள்ள மகிமையை விட, ராமபிரானுக்கு உள்ள மகிமையும் பெருமையும் சொல்லில் அடங்காதது என்கிறது புராணம். கம்பர் பெருமானும், தான் ராமாயணம் எழுதும் போது, பல இடங்களில், ஸ்ரீராமபிரானை வியந்து வியந்து சொல்கிறார். அப்படி வியந்து சொல்லும்போதே, இன்னொரு விஷயத்தைச் சொல்லி அதிசயப்படுகிறார். ஆச்சரியப்படுகிறார்.

அது... ராம மந்திரம். அதாவது... எல்லா தெய்வங்களுக்கும் ஸ்லோகங்கள் இருக்கின்றன. பாடல்கள் இருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் என்ன மாதிரியான வலிமை இருக்கிறதோ, அவற்றையெல்லாம் விட, கூடுதலான வலிமை ‘ராமா’ எனும் ஒற்றைச் சொல்லுக்கே இருக்கிறது என்கிறது புராணம்.

ராமா என்கிற ராமபிரானின் திருநாமமானது, மந்திரச் சொற்களுக்கு நிகரானவை. வலிமை மிகுந்தவை. எந்தத் தருணத்திலும் ‘ராமா... ராமா... ராமா...’ என்று மந்திரம் போல, எவரொருவர் சொல்லி வந்தாலும் அவர்களுக்கு ராம நாமம் சொன்ன பலன், பன்மடங்கு கிடைக்கப் பெறும் என்பது ஞானியர் வாக்கு!

பப்பா ராம்தாஸ் சுவாமிகளுக்கு அவரின் தந்தையார், ‘ஸ்ரீராம் ஜெய்ராம்... ஜெய ஜெய ராம்’ என்று மனமொருமித்து சொல்லச் சொன்னார். அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் பப்பா ராம்தாஸ் சுவாமிகள். வீட்டில் இருக்கும் போது சொல்லிக்கொண்டிருந்தார்.

பிறகு திருவண்ணாமலைக்கு வந்த போதும் மலையில் அமர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார். ஸ்ரீரமண மகரிஷியின் தரிசனமும் அவரின் ஆசியும் இன்னும் வழிகாட்ட... மங்களூர் அருகில் உள்ள கத்ரி திருத்தலத்துக்குச் சென்றார்.

அங்கே... பஞ்சபாண்டவர் தவமிருந்த குகையை இன்றைக்கும் தரிசிக்கலாம். அந்தக் குகையில் இருந்து கொண்டு, ‘ஸ்ரீராம் ஜெய்ராம்... ஜெய ஜெய ராம்’ என்று விடாமல் சொல்லிக் கொண்டே இருந்தார்.

அங்கே... உள்ளொளி ஜ்வலித்தது. பிரகாசம் கூட்டியது. இருளையெல்லாம் அகற்றியது .இன்னும் இன்னும் அந்த ஒளியை நோக்கிப் பயணிக்கச் செய்தது. அப்படிப் பயணிப்பது, எளிமையாகக் கைவந்தது. அது... இன்னும் இன்னும் பயணிக்கவும் தேடவும் வைத்தன.

அங்கே... நமக்கெல்லாம், பக்தர்களுக்கெல்லாம் பப்பா ராம்தாஸ் சுவாமிகள் என்பவர் கிடைத்தார். அது இந்த உலகின் புண்ணியங்களில் ஒன்று.

ஆரம்பத்தில், ராம்தாஸ் சுவாமிகள் என்றுதான் அழைத்தார்கள். அடுத்தடுத்த தருணங்களில், சுவாமிகளின் அன்பும் கருணையும் அவரை நாடி வந்தவர்கள் அனைவரையும் அரவணைத்துக் கொண்டது. மிகப்பெரிய துக்கங்களுடன் கண்ணீரும் கதறலுமாக வருபவர்களை அமைதிப்படுத்தியது. சாந்தப்படுத்தியது. சமன் செய்தது. அவரின் புன்னகையான திருமுகம் கண்டு, பலர் துக்கங்களெல்லாம் பறந்தன என்று அதிசயித்தார்கள். அவரை விழுந்து நமஸ்கரித்தார்கள்.

இந்த அன்பாளர்கள், ஒருகட்டத்தில்... ராம்தாஸ் சுவாமிகளை... பப்பா ராம்தாஸ் சுவாமிகள் என்று அழைக்கத் தொடங்கினார்கள். ‘பப்பா’ என்றால் தந்தை என்று அர்த்தம்!

‘’கடவுளின் திருநாமமே உயர்ந்தது. இறையின் திருநாமத்தைக் காட்டிலும் சக்தி மிக்கது எதுவுமில்லை. அது... இருளை ஒளியாக்கும் வல்லமை கொண்டது. பகையை நட்பாக்கும் மகத்துவம் மிக்கது. வாழ்வில் உள்ள கசப்புகளையெல்லாம் இனிப்பாக்கும் மருந்து அது! நமக்குள் இருக்கிற அச்சத்தையெல்லாம் மடை மாற்றிவிடும். அவற்றையே நம்பிக்கைக்கு உரியதாக்கும்!

அதுமட்டுமா? சந்தேகத்தையும் பொறாமையையும் அறவே ஒழித்து, அதற்குப் பதிலாக அன்பைப் பரவவிடும் சக்தி , இறைவனின் திருநாமத்துக்கு மட்டுமே உண்டு. ஏன் தெரியுமா? கடவுள் வேறு கடவுளின் திருநாமம் என்று நினைத்துக் கொண்டால், அதைவிட வெகுளித்தனமும் வேதனையான அறிவும் வேறு ஏதுமில்லை. கடவுள்தான் திருநாமம். திருநாமம்தான் கடவுள்!

உலகத்தின் எல்லாத் துயரங்களையும் நீக்கி, மிகப்பெரிய ஆன்ம விடுதலையை, ஆத்ம நிறைவை நம்முள் கொண்டு வந்து சேர்க்கும் எளிமையான வழி... கடவுளின் திருநாமத்தைச் சொல்லிக் கொண்டிருப்பதுதான்! கடவுள் திருநாமத்துடன்... நாம் எப்போது இணைந்திருப்பதுதான் மிக எளிய வழி!’’ என தன் அன்பர்களுக்கு அறிவுறுத்தினார். உபதேசித்து அருளினார் பப்பா ராம்தாஸ் சுவாமிகள்.

பப்பா ராம்தாஸ் சுவாமிகளின் ஆஸ்ரமத்துக்குச் சென்ற ராம்சுரத் குன்வர், ‘நான் துறவியாக வேண்டும். இதுவே என் தேடல். இதுவே என் முடிவு... அல்லது இதுவே என் ஆரம்பம்’ என்று தன்னுடைய நிலையை, தன் மனதின் எண்ணத்தை தெரியப்படுத்தினார்.

‘’ஆமாம் சுவாமி. நான் துறவியாக நினைக்கிறேன். துறவியாகலாமா?’’ என்று கேட்டார் ராம்சுரத் குன்வர்.

இரண்டு நிமிடம் ராம்சுரத் குன்வரையே பார்த்துக் கொண்டிருந்த பப்பா ராம்தாஸ் சுவாமிகள், ‘சரி... துறவியாக வேண்டும் என முடிவு செய்துவிட்டாய். ஆனால், ஒரு பேச்சுக்காக துறவியாகட்டுமா என்று கேட்கிறாய். இங்கே வா...” என்று சொல்லி அழைத்தார்.

சுவாமிகளின் அருகில் சென்றார் ராம்சுரத் குன்வர். ‘ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம்... ஜெய ஜெய ராம்’ எனும் ராமநாமத்தைச் சொல்லிக் கொண்டே இரு. இடைவிடாமல் சொல்லிக் கொண்டே இரு. வேறு எதிலும் கவனம் செலுத்தாமல், இந்த வார்த்தையுடனேயே இரு. இதுவே வாழ்க்கை என்றிரு. இதுவே எல்லாம் என்று சொல்லிக் கொண்டே இரு. இதுவே பகல். இதுவே இரவு. இதுவே சூரியன். இதுவே சந்திரன். எல்லாமும் இதுவே... என்று இந்த ராமநாமத்தைச் சொல்லிக் கொண்டே இரு. 24 மணி நேரம் முழுக்கச் சொல். சொல்லிக் கொண்டே இரு’ என்று அருளினார் பப்பா ராம்தாஸ் சுவாமிகள்.

ராம்சுரத் குன்வர், அந்த ராமநாமத்தைச் சொல்லத் தொடங்கினார். சொல்லிக் கொண்டே இருந்தார். இடைவிடாமல் சொல்லியபடியே இருந்தார்.

அது... ராம நாமமா... ராம பாணமா?

ராம்சுரத் குன்வரின் உள்ளுக்குள்ளே துளைத்தெடுத்தது.

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜெயகுரு ராயா.

-ராம் ராம் ஜெய்ராம்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம் படிப்பதற்கு...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x