Published : 03 Feb 2018 11:18 AM
Last Updated : 03 Feb 2018 11:18 AM
குறையலூர் தலத்துக்கு வந்து உக்கிர நரசிம்மரைப் பிரார்த்தனை செய்து கொண்டால், குறைவின்றி வாழலாம் என்கிறார்கள் பக்தர்கள்.
குறையலூர் என்றால் திருக்குறையலூர். சீர்காழிக்கு அருகில் உள்ள தலம். பஞ்ச நரசிம்மர்கள் அருளாட்சி செய்யும் தலங்களில் இதுவும் ஒன்று.
பஞ்சநரசிம்ம திருத்தலங்களா?
ஆமாம்.
நாகை மாவட்டம் சீர்காழிக்கு அருகில் உள்ளன. அடுத்தடுத்த ஊர்களில் பஞ்ச நரசிம்மத் திருத்தலங்கள் அமைந்துள்ளன. இந்த ஆலயங்களை ஒரே நாளில் தரிசிக்கலாம். ஸ்ரீஉக்கிர நரசிம்மர், ஸ்ரீவீர நரசிம்மர், ஸ்ரீஹிரண்ய நரசிம்மர், ஸ்ரீயோக நரசிம்மர், ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் என கோயில் கொண்டிருக்கும் பஞ்ச நரசிம்மர்களையும் தரிசிப்போமா?
திருக்குறையலூர் ஸ்ரீஉக்கிரநரசிம்மர்
சீர்காழியில் இருந்து 13 கி.மீ. தொலைவிலும் திருவெண்காட்டில் இருந்து 6 கி.மீ. தொலைவிலும் உள்ளது திருக்குறையலூர். குறைகளை அகற்றும் ஊர் என்பதே மருவி, திருக்குறையலூர் என்றானது. பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரத்தின் முதல் திருத்தலம் இது. இந்தத் தலத்தின் மூலவர் - ஸ்ரீஉக்கிர நரசிம்மர். ஸ்ரீதேவி பூதேவி சமேதராகக் காட்சி தரும் தலத்தின் தாயார் - ஸ்ரீஅமிர்தவல்லித் தாயார்.
இந்தத் தலத்துக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. திருமங்கை ஆழ்வாரின் அவதாரத் தலம் எனப் பெருமை கொண்ட இந்தத் திருத்தலத்தில், அவருக்கும் குலசேகர ஆழ்வாருக்கும் சந்நிதிகள் உள்ளன.
இங்கே... அமாவாசை, சுவாதி நட்சத்திரம், பிரதோஷம் ஆகிய நாட்களில் ஸ்ரீஉக்கிர நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்படுகின்றன. பித்ரு தோஷம் உள்ளவர்கள், அமாவாசை நாளில் இங்கு வந்து நரசிம்மருக்கு திருமஞ்சனம் செய்து முடிந்த அளவு அன்னதானம் செய்து நரசிம்மரை வழிபட்டால், முன்னோர்களின் ஆசி கிடைக்கும். வம்சம் விருத்தியாகும். நம் சந்ததியும் சிறப்புற, வாழ்வாங்கு வாழும் என்பது ஐதீகம்!
தங்களின் வயதுக்கு ஏற்றபடி (25 வயது என்றால் 25 திருவிளக்குகள்), நெய்தீபமேற்றி ஏழு அல்லது ஒன்பது வாரங்கள் வழிபட்டு வந்தால் நவக்கிரக தோஷங்கள் விலகும்!
பஞ்ச பூதங்களில் நெருப்பின் உருவமாக, நெருப்பின் வடிவமாக ஸ்ரீஉக்கிர நரசிம்மர் காட்சி அருளிய தலம். ஆகவே எதிரிகளின் தொல்லை ஒழியும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்! நரசிம்ம ஜயந்தி நாளில், இங்கு நடைபெறும் ஸ்ரீமகா சுதர்சன யாகத்தில் கலந்து கொண்டு தரிசித்தால், நீங்காத செல்வம் கிடைக்கப் பெறலாம்! வீட்டில் தடைப்பட்டிருந்த மங்கல காரியங்கள் யாவும் நடந்தேறும். குறிப்பாக, பெண்கள் நிம்மதியுடன் சந்தோஷத்துடன் வாழ்வார்கள் என்கின்றனர் பக்தர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT