Published : 01 Feb 2024 04:00 AM
Last Updated : 01 Feb 2024 04:00 AM

அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் குடமுழுக்கு: அவிநாசியில் நாளை போக்குவரத்து மாற்றம்

திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா நாளை ( பிப்.2 ) நடைபெறுவதையொட்டி, நாளை ஒருநாள் மட்டும் அவிநாசியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவையில் இருந்து அவிநாசிக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் கணினி ரவுண்டானாவில் இருந்து சர்வீஸ் ரோடு வழியாக அவிநாசி புதிய பேருந்து நிலையம் செல்ல வேண்டும். கோவையில் இருந்து வந்து சேவூர், சத்தி, புளியம்பட்டி மற்றும் கோபி செல்லக்கூடிய வாகனங்கள், அவிநாசி கால்நடை மருத்துவமனை சந்திப்பு - முத்துசெட்டிபாளையம் வழியாக செல்ல வேண்டும்.

சேவூர் சாலையில் இருந்து திருப்பூர், கோவை, ஈரோடு செல்லும் வாகனங்கள், முத்து செட்டிபாளையம் வழியாக சென்று கணினி ரவுண்டானா வழியாகவும், மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் செல்லும் வாகனங்கள் ஆட்டையம்பாளையம் வழியாக செல்ல வேண்டும். திருப்பூர் மற்றும் ஈரோட்டில் இருந்து சேவூர், சத்தி, புளியம்பட்டி மற்றும் கோபி செல்லக்கூடிய வாகனங்கள், அவிநாசி புதிய பேருந்து ரவுண்டானாவில் இருந்து, வலதுபுறம் திரும்பி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ராயம்பாளையம் வழியாக சென்று மடத்துப் பாளையம் சந்திப்பு ( பண்ணாரி அம்மன் கோயில் ) வழியாக சேவூர் செல்ல வேண்டும்.

திருப்பூர் மற்றும் ஈரோட்டில் இருந்து மேட்டுப்பாளையம், அன்னூர் செல்லக்கூடிய வாகனங்கள், சர்வீஸ் ரோடு வழியாகவே வேலாயுதம்பாளையம் சர்வீஸ் ரோடு ரவுண்டானா மற்றும் ஆட்டையாம்பாளையம் வழியாக அன்னூர் செல்ல வேண்டும். அவிநாசி டவுனில் இருந்து பேருந்து போக்கு வரத்து அனைத்தும், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மட்டும்தான் செயல்படும். மேலும் கோயிலுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் மட்டும் குறிப்பிட்ட தூரம் வரை அனுமதிக்கப்பட்டு, அந்தந்த வழித்தடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடங்களில் மட்டும் நிறுத்த வேண்டும்.

இன்று ( பிப்.1 ) மற்றும் நாளை ( பிப். 2 ) ஆகிய 2 நாட்கள் அவிநாசி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களுடைய வாகனங்களை பொது சாலையில் நிறுத்தவோ, விளம்பர பதாகைகளை சாலைகளில் வைக்கவோ கூடாது. குடமுழுக்கு விழாவுக்கு அனைத்து தரப்பு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும். திருப்பூர் மாவட்ட போலீஸார் சுமார் ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர், என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x