Published : 09 Feb 2018 11:43 AM
Last Updated : 09 Feb 2018 11:43 AM
தேர்க்கூட்டம் திருவிழாக்கூட்டம் என்பார்கள். தமிழகத்தில் தினமும் அப்படிக் கூட்டமாக இருக்கும் கோயில்கள் ஏராளம். வழிபடுவதற்காகவும் பரிகாரங்கள் செய்வதற்காகவும் நேர்த்திக்கடனைச் செலுத்துவதற்காகவும் வருகிறார்கள் பக்தர்கள்.
அந்தக் காலத்தில், அதாவது மன்னர்களின் ஆட்சிக் காலங்களில், மன்னர்கள் கோயில்களைக் கட்டினார்கள். அந்தக் கோயிலுக்கு பூஜைகள் செய்பவர்களுக்கும் நைவேத்தியங்களுக்கு அரிசி முதலான பொருட்களை வழங்குபவர்களுக்கும் வாத்தியக் கருவிகள் இசைப்பவர்களுக்கும் பழங்கள் தருபவர்களுக்கும் வீடுகளை, தெருக்களை ஒதுக்கிக் கொடுத்தார்கள்.
கோயில் கட்டியதுடன் நிற்காமல், கோயிலின் பூஜை மற்றும் சம்பளங்களுக்கு நிலங்களையும் மாடுகளையும் ஆடுகளையும் நிவந்தமாக எழுதிவைத்தார்கள். மேலும் மக்கள் எல்லோரும் ஒன்றுகூடும் விழாக்களில் தனிக்கவனம் செலுத்தினார்கள். அப்படி விழா நடைபெறும் போது, மக்களிடம் காசுபணம் புழக்கத்தில் இருக்கவேண்டும் சமயமாக இருக்கவேண்டும் என்பதற்காக, பங்குனியில் அறுவடைக்குப் பின் வரும் சித்திரையிலும், ஆடியில் விதைக்கும் போதும், ஐப்பசி அடைமழைக்கு முன்னதாகவும் தை மாத குறுவை சாகுபடி விளைச்சலின் போதும் விழாக்களை நடத்த ஏற்பாடுகள் செய்தார்கள்.
மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்க மன்னர், சைவத்தையும் வைணவத்தையும் இணைக்கும் வகையில் மதுரை மீனாட்சி அம்மனையும் அழகர் கோவிலையும் இணைத்து சித்திரைத் திருவிழாவாகக் கொண்டாடும்படி உத்தரவிட்டார். மதுரை மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து வண்டி கட்டிக் கொண்டு, குடும்பம் குடும்பமாக திருவிழாவுக்கு வந்தார்கள்.
கோயில், விழாக்கள், தரிசனங்கள் எல்லாமே இன்னொரு விஷயத்தையும் வலியுறுத்துவதாக சரித்திர ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அதாவது, எங்கள் வீட்டில் பையன் திருமணத்துக்குத் தயாராக இருக்கிறான். எங்கள் வீட்டுப் பெண் கல்யாணத்துக்கு தயாராக இருக்கிறாள் என்பதை பரஸ்பரம் சொல்லிக் கொள்ளவும் காட்டிக் கொள்ளவும் இந்த விழாக்கள் பெரிதும் உதவின என்கிறார்கள்.
அறுவடைக்குப் பிறகு மக்களிடம் காசுபணம் இருக்கும். தங்கள் வீட்டாருக்கு தேவையானதையெல்லாம் வாங்குவதற்கு கையில் காசு இருக்கும். ஆனால் இந்த விழாவையொட்டி, அங்கே வைக்கப்பட்டிருக்கும் கடைகளில் பொருட்கள் விற்பனைக்கு வந்திருக்கும். பண்டமாற்று முறை என்பது கொஞ்சம்கொஞ்சமாக மாறி, பணம் கொடுத்துப் பொருள் வாங்குகிற முறையும் அப்போதுதான் வந்தது என்கிறார்கள்.
இன்றைக்கும் மக்கள் கோயில்கோயிலாகச் சென்று தரிசிக்கிறார்கள். அன்றைக்கு மாட்டுவண்டி. இன்றைக்கு ரயில், பஸ், கார், வேன்! சொல்லப்போனால் சனி ஞாயிறுகளில் காரை எடுத்து க்கொண்டு, குடும்பத்தாரை ஏற்றிக்கொண்டு, ஆறேழு கோயில்களைத் தரிசனம் பண்ணக் கிளம்புகிறவர்கள் பெருகிவிட்டார்கள்.
நாச்சியார்கோவில் விளக்குகள் பிரசித்தம். கும்பகோணம் சுற்றியுள்ள கோயில்கள் என்றால், இந்த விளக்குகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும். தஞ்சை பெரிய கோயிலைச் சுற்றி, தஞ்சாவூர் பொம்மை, தஞ்சாவூர்த் தட்டுகள் விற்பனைக்கு இருக்கும்.
‘நெல்லையப்பர் கோயிலுக்குப் போய் தரிசனம் பண்ணினேன்’ என்று சொன்னால் நம்பமாட்டார்கள். இருட்டுகடை அல்வாவையோ அல்லது அல்வாவையோ கொஞ்சம் தரவேண்டும். சபரிமலைக்குச் சென்றுவிட்டு திரும்பும் போது, கோயிலில் அரவனைப் பாயசத்துடன் குமுளியில் நேந்திர சிப்ஸ் வாங்கி அதையும் கொடுக்கத்தானே செய்கிறார்கள்.
திருச்செந்தூரில், அதைச் சுற்றியுள்ள கோயில்களில் மஸ்கோத் அல்வாவும் சில்லுக்கருப்பட்டியும் நிறைய கடைகளில் கிடைக்கும். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் விற்கப்படும் தாழம்பூ குங்குமம் வெகு பிரசித்தம்.
கோயிலுக்கு போய் சுவாமி தரிசனம் முடிந்து வெளியே வந்து, வரிசை கட்டி நிற்கும் கடைகளில், ஒரே ஏழெட்டுப் பொருட்கள் வாங்கியே ஆகவேண்டும் எனும் எண்ணம் நம்மிடம் இருக்கிறது. சின்ன விளக்கு, விதம்விதமான ஸ்டிக்கர் கோலங்கள், குழந்தைகளுக்கு கிலுகிலுப்பை, கீ கொடுத்தால் ஓடுகிற ஆடுகிற பொம்மைகள், கையில் கட்டிக் கொள்ள கயிறு, அணிந்துகொள்ள வளையம், தோடு, ஜிமிக்கி, பல்லாங்குழி, கோலப்புத்தகங்கள், போற்றிப் புத்தகங்கள், யந்த்ரங்கள்... என பை நிறைய, மனசு நிறைய வாங்கி வந்தால்தான், எல்லோருக்குமே முழு நிறைவு.
இப்போது, திருச்செந்தூரில் மண்டபம் இடிந்துவிட்டது. மதுரையில் கோயில் மண்டபம் தீப்பிடித்து எரிந்தது. திருவாலங்காட்டில் ஸ்தல விருட்சம் மரம் தீப்பிடித்தது. உயர்நீதிமன்றம். மதுரை கோயிலில் உள்ள கடைகளை அகற்றச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறது. இதோ... இன்று 9.2.18 பகல் 12 மணிக்குள் அப்புறப்படுத்த வேண்டும். கடைக்காரர்கள் பலரே, தங்கள் கடைகளை எடுக்க முன்வந்துவிட்டார்கள்.
இந்த நிலையில் சில விஷயங்களைப் புரிந்து உணர்ந்து தமிழக அரசு செயல்பட வேண்டும்.
ஒரு கோயிலை வைத்து அந்த ஊர் பிரபலம் அடைகிறது. கோயிலை தரிசிக்க வரும் கூட்டத்தால், கோயிலுக்கு வருமானம் கிடைக்கிறது. குருக்களுக்கு ஓரளவு தட்சணை கிடைக்கிறது. அரசின் அன்னதானத் திட்டத்துக்கு நன்கொடைகள் கிடைக்கின்றன. ஊர்க்காரர்கள் நான்கெட்டு கடைகள் போடுவார்கள். டீக்கடைகள் முளைக்கும். சுடச்சுட வியாபாரங்களாகும். அந்த ஊரில் விளைந்த வெள்ளரிக்காயோ கத்தரிக்காயோ உடனுக்குடன் விற்பனையாகும். உணவகங்கள் திறக்கப்பட்டிருக்கும். ஊர்க்காரர்களுக்கு வேலை கிடைத்த மாதிரியும் ஆகிவிடும். வியாபாரம் செய்தது போலவும் ஆகிவிடும். செருப்பு பார்த்துக் கொள்ளும் தாத்தா முதல் பூ விற்கிற பாட்டியம்மாள் வரை உழைத்துச் சம்பாதிக்கும் இடம்... கோயில்கள்!
எனவே பொத்தாம்பொதுவாக கோயிலின் கடைகளை அகற்றாமல், கோயில்களுக்கு அருகிலேயே அழகாய், வரிசையாய், விசாலமாய் கடைகள் கட்டிக் கொடுக்கலாம். முதலில் அரசாங்கம் இடம் கொடுக்கட்டும். பிறகு கடையே கட்டிக் கொள்ள வசதி செய்யலாம்.
இன்றைக்கு மாதத்துக்கு ஒரு ஷாப்பிங் மால்கள் திறக்கப்படுகின்றன. எத்தனை திறந்தாலும் கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருக்கிறது. புராதனமான கோயில்களைச் சுற்றி கொஞ்சமே கொஞ்சம் நவீனமாக, இந்தக் கடைகளுக்கு இடம் ஒதுக்கித் தந்தால், வியாபாரிகளுக்கும் பயன். எங்கிருந்தோ வருகிற பக்தர்களுக்கும் நிம்மதி! பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் தருகிற முக்கியத்துவத்தை, நம் நாட்டு சிறுகுறு கோயில் கடைக்காரர்களுக்கும் கொடுக்கலாமே!
அந்தக் காலத்தில், அதாவது மன்னர்களின் காலத்தில், ஒரு கோயிலைச் சுற்றி எதுஎதெல்லாம் இருக்கவேண்டும் என்று பார்த்துப் பார்த்து செய்தார்கள் மன்னர்பெருமக்கள். தரிசிக்க கோயில், குளிக்க குளம், தங்குவதற்கு சத்திரம், வாங்கவும் விற்கவும் கடைகள்! இன்றைக்கு கோயிலைச் சீரமைக்கிற பணிகள் மந்தகதியில் இருக்கின்றன. குளங்கள் தூர்வாரப்படுவதே இல்லை. சத்திர வசதிகள், லாட்ஜ்களாக, ஹோட்டல்களாக தாரைவார்க்கப்பட்டு விட்டன.
இப்போது விழிப்புடன் செயல்பட வேண்டும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறார்கள் பக்தர்கள். அரசு விழித்துக் கொள்ளட்டும்; கோயிலின் கடைகள் பிழைத்துக் கொள்ளட்டும். சரியாகத் திட்டமிட்டு, உடனடி தீர்வு காணவேண்டியது அரசின் கையில்தான் இருக்கிறது என்கிறார்கள் ஆன்மிக அமைப்பினர்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT