Published : 12 Feb 2018 11:08 AM
Last Updated : 12 Feb 2018 11:08 AM
விஷ்ணுவை மகா விஷ்ணு என்று அழைப்பது போல சிவனை மகாசிவன் என்றெல்லாம் அழைப்பது இல்லை. அதே சமயம் சிவராத்திரியை ‘மகா’ எனும் அடைமொழியுடன் அழைக்கிறோம். இதில் இருந்தே இந்த இரவின் மகிமையை அறியலாம். அதேபோல், ஈசனை சதாசிவன் என்று சொல்கிறோம். வேறு எந்த தெய்வத்தையும் சதா சேர்த்துச் சொல்வதில்லை. ‘சதா’ என்றால் ‘எங்கும் எப்போதும்’ என்று அர்த்தம். எங்கும் எதிலும் நிறைந்திருப்பவன் ஈசன்!
சிவபெருமானை தினமும் வழிபட்டு வந்தாலே போதும். சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பார்கள். அப்படியிருக்க, சிவராத்திரி விரதமிருந்து வழிபட்டால், சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அதிலும் மகா சிவராத்திரி நன்னாளில் விரதம்... சொல்லிப் புரிய வைக்க வேண்டுமா என்ன?
நாளைய தினம் (13.2.18) மாசி மாதப் பிறப்பு. மாசி செவ்வாய் வழிபாடு. பிரதோஷம் அதுமட்டுமா? மகா சிவராத்திரித் திருநாள். இந்த நாளில் விரதம் அனுஷ்டியுங்கள். ஆயுள் பலம் கூடும். ஆரோக்கியம் அதிகரிக்கும். இல்லத்தில் ஐஸ்வர்யம் குடிகொள்ளும். உள்ளத்தில் நிம்மதி குடியேறும் என்பது நிதர்சனம்!
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி எந்த நாளில் வருகிறதோ அதை சிவராத்திரி என்கிறோம். இதை மாத சிவராத்திரி என்பர். மாசிமாதம் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரி என்று போற்றப்படுகிறது.
தேய்பிறை சதுர்த்தசி திதியும் சிரவண நட்சத்திரமும் இணைந்திருக்கும் இரவு சிவராத்திரியாக ஆகமங்கள் தெரிவிக்கின்றன .
அமரகோசம் என்ற சம்ஸ்கிருத நூலில் சிவம் என்றால் மங்கலம், சுபம் என்று அர்த்தங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சிறப்பு பெற்ற சிவனுக்கு உகந்த ராத்திரியே சிவராத்திரி! மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தசி நாளில் வரும் சிவராத்திரி அன்று சிவன் கோயில்கள் முழுநேரமும் திறந்திருக்கும். விடிய விடிய சிவபெருமானுக்கு, குளிரக் குளிர அபிஷேகங்கள் நடைபெறும்.
மகா சிவராத்திரியான நாளைய தினம் மாலையில் துவங்கி, இரவு முழுவதும் விடிய விடிய பாராயணம், பஜனை, பூஜை, அபிஷேகம் என சிவாலயங்களில் அமர்க்களப்படும். இதில் கலந்துகொண்டு, சிவனருளைப் பெறுங்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT