Last Updated : 02 Dec, 2017 08:41 AM

 

Published : 02 Dec 2017 08:41 AM
Last Updated : 02 Dec 2017 08:41 AM

சுவாமி சரணம்! 16: ஐயப்ப பூஜையில் அழுத பக்தர்... ஐயன் கொடுத்த குழந்தை வரம்! 

கார்த்திகை மாதம் தொடங்கி, பாதியைக் கடந்தாகி விட்டது. இன்னும் பத்துப்பதினைந்து நாட்களில், மார்கழி துவங்கிவிடும். இப்போதே எங்கு பார்த்தாலும் ஐயப்பமார்களைப் பார்க்க முடிகிறது. இன்னும் சில நாட்களில், இன்னும் இன்னுமாக பக்தர்கள் விரதமிருப்பது அதிகரித்துவிடும்.

அதேபோல், ஐயப்ப பஜனைகளும் பூஜைகளும் அமர்க்களப்படுகின்றன. வீடுகளில் சில கோயில்களில் என்று ஐயப்ப பஜனைகள் நடைபெறும். ஐயப்ப விக்கிரகம் வைத்து, படிகள் அமைத்து பூஜைகள் செய்வார்கள். சாஸ்தா பூஜையில் கலந்து கொள்வது நமக்குள் பல அதிர்வுகளை உண்டாக்கும். பல மாற்றங்களை உண்டுபண்ணும். விண்ணதிரச் சொல்லும் ‘‘ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா’ எனும் கோஷத்தைக் கேட்டு, நாமும் அந்த கோஷத்துடன் கலந்துவிடுவோம். ‘ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா...’ என்று நாமும் சொல்லத் துவங்கிவிடுவோம்.

 சிறுவயதில், ஐயப்ப பஜனை நடக்கிற இடங்களுக்கெல்லாம் ஓடிவிடுவேன். கூட்டமும் தாள வாத்தியங்களும் பாடல்களும் பாடலின் வரிகளும் என்னவோ செய்யும்.எஸ்.எஸ்.எல்.சி. முடித்த வருடத்தில், பழநிக்கு பாதயாத்திரையாகச் செல்வதற்காக, மாலையிட்டு விரதமிருந்தேன். முருகனுக்கு பச்சைக் கலர் வேஷ்டி கட்டிக்கொள்வோம். என்னுடைய மாமா, காரைக்குடிக்கு அருகில் உள்ள கோட்டையூரில் இருக்கிறார். கோட்டையூரில் இருந்து கிளம்பி, ஒருவாரம் நடைப்பயணம். நானும் என் நண்பர்களும் திருச்சியில் இருந்து மாலைபோட்டு விரதம் இருந்து, பஸ் பிடித்து, கோட்டையூர் சென்று, அங்கிருந்து பாதயாத்திரை தொடங்குவோம்.

அது ஒருபக்கம் இருக்க... ‘முருகனுக்கு மாலை போட்டிருக்கீங்களா... வாங்களேன் பஜனைக்கு’ என்று ஐயப்ப சாமிகள் எங்களையும் அழைத்தார்கள். பஜனையில் விநாயகர் பாடல், முருகன் பாடல் என்றெல்லாம் ஒன்றிரண்டு பாடிவிட்டு, ஐயப்பனைப் பற்றிய பாடல்களுக்குச் செல்வார்கள். கருப்பண்ணசாமி பாட்டெல்லாம் பாடி முடிப்பார்கள். பரவசத்தில் சொக்கிப்போவோம்.

 ஐயப்ப பஜனையையோ ஐயப்ப பூஜைகளையோ தவறவிடாதீர்கள். ‘எங்க தெரு முக்குல இருக்கிற கோயில்ல நேத்திக்கி பஜனை. போகலாம்னுதான் நெனைச்சேன். அப்புறம் அது இதுன்னு வேலை வந்துருச்சு. போக முடியலை’ என்று சாக்கெல்லாம் சொல்லாமல், அதற்காகவே நேரம் ஒதுக்கி கலந்து கொள்ளுங்கள். அந்த மகத்துவத்தை, பலனை அடுத்தடுத்த நாளில் உணருவீர்கள்.

இப்படித்தான் ஒருமுறை, சாமி அண்ணாவின் தலைமையில் ஐயப்ப பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏகத்துக்கும் கூட்டம். அதேசமயம், சிரிப்புக்கோ கேலிக்கோ இடமில்லாமல், எல்லோரும் பூஜையில் ஒன்றிப் போயிருந்தார்கள்.

அப்போது கூட்டத்தில் இருந்து ஒருவர், ரொம்பவே தளர்ந்து சோகமாக உட்கார்ந்திருந்தார். மனதை ஏதோவொரு துக்கம் அழுத்துவதை, முக வாட்டம் காட்டிக் கொடுத்தது.

 பூஜை முடிந்து, தீபாராதனை காட்டப்பட்டது. சரண கோஷங்கள் சொல்லப்பட்டன. அந்த சரணகோஷங்களைத் தாண்டியும் அவரின் அழுகை எல்லோருக்கும் கேட்டது. பெருங்குரலெடுத்து, கரகரவென கண்ணீர் வழிய, அவர் அழுத அழுகை, எல்லோரையும் உலுக்கியது.  

 கல்யாணமாகி பத்து வருடங்களாகிவிட்டதாம் அவருக்கு. இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லையாம்.

 எத்தனை சொத்து சுகம் இருந்தென்ன... காசுபணம் குவிந்து என்ன பலன்... கொஞ்சி விளையாட, அள்ளிக் கொஞ்ச... துள்ளிக் குதிக்க... ஒரு குழந்தை இல்லாத வீடு... நரகத்துக்கு இணையானதுதான். வம்சமென வந்து நிற்கும் குழந்தை, மிகப்பெரிய சந்தோஷம்தான். பெருமிதம்தான். காசும்பணமும் வீடும்வாசலும் குழந்தைகளைக் கொண்டுதான் அர்த்தமாகின்றன. சந்தான ஏக்கதுக்கம் என்பது பெருங்கொடுமை.

 ‘பாக்காத ஜோஸியம் இல்ல; போகாத டாக்டருங்க இல்ல. ஆனா இதுவரை எந்த நல்ல வார்த்தையும் நல்ல பதிலும் கிடைக்கவே இல்ல. அர்த்தமில்லாத இந்த வாழ்க்கையை வாழ்றதே வேஸ்ட்டு...’ என்று வெடித்துக் கதறினார். குழந்தை இல்லையே... என்று ஒரு குழந்தையைப் போல தேம்பித் தேம்பி அழுதார்.

 அவரை சாமி அண்ணா கையசைத்து அழைத்தார். ஆனால் சாமி அண்ணாவே விறுவிறுவென அவருக்கு அருகே சென்றார். அவரின் தோளில் கைவைத்தார். ‘இங்கே... ஐயப்பன்கிட்ட, அவனோட பூஜைல அழுதுட்டீல்ல... இந்த வருஷம் சபரிமலைக்கு வா. கவலைப்படாதே. உன் கவலையெல்லாம் சபரிமலைல, சாஸ்தாவோட சந்நிதானத்துல மொத்தமா இறக்கி வை. அடுத்த வருஷம் உங்களுக்கு குழந்தை பொறக்கும். உன் வீட்ல குழந்தைச் சத்தம் கேக்கும். சபரிமலைக்கு வா!’’ என்று சொல்லி ஆசீர்வதித்தார். விபூதிப்பையில் இருந்து கைநிறைய விபூதி எடுத்து, அவருக்கு வழங்கினார். மீண்டும் ஆசீர்வதித்தார்.

அந்த மனிதர்... மாலையணிந்தார். விரதமிருந்தார். ஐயப்ப சாமியானார். சபரிமலைக்குச் சென்றார். சந்நிதானத்தை அடைந்தார். சாஸ்தாவின் தரிசனம்!

  சாஸ்தாவைக் கண்டதும் மீண்டும் அழுதார். ஆனால் இந்த முறை பெருங்குரலெடுத்த அழுகையில்லை. ஓலமில்லை. சின்ன விசும்பலுடன் சின்னதான நம்பிக்கையுடன் அழுதார். அந்த நம்பிக்கையுடனேயே மலையிறங்கினார்.

  அடுத்த பதினோராவது மாதத்தில் அவருக்கு குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை. அந்தக் குடும்பமும் அந்தக் குழந்தை வளர்ந்து இன்றைக்கும் ஐயப்பனின் அடியவர்களாக ஐயப்ப நாமமே வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டிருக்கிறது.

  ஐயப்ப பஜனையிலும் பூஜையிலும் கலந்துகொள்ளுங்கள். எங்கே நடந்தாலும் தெரிந்தவர் தெரியாதவர் என எவர் வீட்டில் நடந்தாலும் அந்தப் பூஜையில் கலந்துகொள்ளுங்கள். உங்களின் குறைகளையெல்லாம், ஒருபாட்டம் சொல்லி ஐயப்பனிடம் முறையிட்டுவிடுங்கள்.

 பக்தர்களின் குறைகளைக் களைவதைத் தவிர, பக்தர்களை நிம்மதியும் சந்தோஷமுமாக வாழச் செய்வதைத் தவிர... ஐயப்ப சுவாமிக்கு வேறென்ன வேலை. அவனுடைய அவதாரமே... நமக்கு அருள்வதுதானே..!

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!

-ஐயன் வருவான்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x