Published : 24 Feb 2018 11:30 AM
Last Updated : 24 Feb 2018 11:30 AM
திருக்கோஷ்டியூர் செளம்ய நாராயணப் பெருமாள் கோயிலில், மாசித் தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெறும். அந்த விழாவையொட்டி, தெப்பக்குளத்தில், விளக்கேற்றி விடுவார்கள் பக்தர்கள். இந்த பிரார்த்தனைச் சடங்கினைச் செய்தால், நம் குலம் தழைக்கும்; செழிக்கும் என்கிறார்கள் பக்தர்கள்!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது திருக்கோஷ்டியூர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் திருத்தலம். மிகப் பிரசித்தமான வைஷ்ண க்ஷேத்திரங்களில் ஒன்று. பெருமாளின் திருநாமம் செளம்ய நாராயணப் பெருமாள்.
நவகிரகங்களில் ஒருவர் புதன். இவரின் மைந்தன் புருரவன், மகா சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தார். ஒருமுறை புருரவச் சக்கரவர்த்தி திருக்கோஷ்டியூர் வந்தபோது, மாசி மகாமகம் வந்தது. மகா மகத்தன்று மகாவிஷ்ணுவை, கங்கையில் நீராடி தரிசிக்க விரும்பினார் புருரவச் சக்கரவர்த்தி.
அவரது எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், திருக்கோஷ்டியூர் தலத்தின் வடகிழக்கு திசையில் உள்ள கிணற்றில் இருந்து கங்கை நதி பொங்கிவந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.. அதன் மத்தியில் மகாவிஷ்ணு காட்சி தந்தார். தற்போது ஆலய பிராகாரத்தில் அமைந்துள்ள இந்தக் கிணறு, ‘மகாமக கிணறு’ என்றே அழைக்கப்படுகிறது.
அதேபோல், இன்னொரு புராணச் சிறப்பும் திருக்கோஷ்டியூருக்கு உண்டு.
இரண்யகசிபு என்ற அரக்கனை அழிப்பதற்காக சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரம்மதேவர் ஆகிய மும்மூர்த்திகளும் சேர்ந்து கூடிப் பேசினார்கள். புதிய அவதாரம் ஒன்றை உருவாக்கினார்கள். அந்த அவதாரமே நரசிம்ம அவதாரம் என்பதை நாம் அறிவோம்தானே. அந்த அவதாரத்தை உருவாக்கும் நோக்கில் மும்மூர்த்திகளும் அமர்ந்து பேசிய இடமே கோஷ்டியூர். அதாவது கோஷ்டியாக எல்லோரும் கூடிப் பேசிய ஊர் . அதுவே திருக்கோஷ்டியூர் ஆனது.
பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என ஐந்து ஆழ்வார்பெருமக்கள் மங்களாசாசனம் செய்யப்பட்ட வைஷ்ண திருத்தலம் திருக்கோஷ்டியூர். 108 வைஷ்ணவ தலங்களில் முக்கியமான தலம் என்கிறார்கள் வைஷ்ணவர்கள்.
இத்தனை பெருமைகள் கொண்ட திருக்கோஷ்டியூர் திருத்தலத்தில் உள்ள திருக்குளம் பிரசித்தம்.
மாசி மாதம் வந்துவிட்டால், தெப்பத்திருவிழா, பத்து நாள் திருவிழாவாக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வரும் இந்த விழாவின் முக்கிய அம்சம்... திருத்தேரோட்டம். அதேபோல் இன்னொரு சிறப்பு... திருக்குளத்தில், பக்தர்களால் ஏற்றப்படும் விளக்கு. குளத்தில் விளக்கிட்டு வழிபட்டால், குலம் தழைக்கும்; சிறக்கும்; செழிக்கும் என்பது ஐதீகம்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் திருக்கோஷ்டியூர் திருவிழாவில், கலந்துகொண்டு விளக்கேற்றுங்கள். ஒளிமயமான எதிர்காலம் உறுதி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT