Published : 27 Feb 2018 09:50 AM
Last Updated : 27 Feb 2018 09:50 AM
திருக்கோஷ்டியூர் வந்திருக்கிறீர்களா? சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஊர். அற்புதமான திருத்தலம். இந்தக் கோயிலின் நாயகன் செளம்ய நாராயணப் பெருமாள்.
திருமாமகள் தாயாருக்கு தனிச்சந்நிதி இருக்கிறது. இவளுக்கு திருமாமகள், நிலமாமகள், குலமாமகள் என்றும் பெயர்கள் உண்டு. பேரழகு கொண்டவர் பெருமாள். எனவே, இங்கு உள்ள பெருமாளுக்கு ஸ்ரீசௌம்யநாராயண பெருமாள் எனும் திருநாமம் கொண்டார்.
பொதுவாக கோயில்களில் உற்ஸவர் விக்கிரகங்களை பஞ்சலோகத்தால் அமைப்பது வழக்கம். ஆனால், தூய்மையான வெள்ளியால் ஆன விக்கிரகம் இங்கே உள்ளது. இதை தேவலோக இந்திரனே தந்தருளியதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.
மகாவிஷ்ணு இரண்யனை வதம் செய்யும் வரையில், இந்தத் தலத்தில் தங்கியிருந்த இந்திரன், தான் தேவலோகத்தில் பூஜித்த சௌம்ய நாராயணரின் விக்கிரகத் திருமேனியை, கதம்ப மகரிஷிக்கு கொடுத்தார். இந்த மூர்த்தியே இந்தக் கோயில் உற்ஸவராக காட்சி தருகிறார்.
திருக்கோஷ்டியூர் நம்பியின் அவதாரத் தலம் இது. கோயிலுக்கு அருகிலேயே அவர் வீடு அமைந்துள்ளது. இவரிடம் மந்திர உபதேசம் பெறுவதற்காக, ஸ்ரீரங்கத்தில் இருந்து நடந்தே வந்தார் ராமானுஜர். ஒரு முறை அல்ல 18 முறை நடந்தே வந்து, நம்பியின் வீட்டு வாசலில் நின்றிருக்கிறார். அதன் பிறகுதான் அவருக்கு உபதேசம் வழங்கப்பட்டிருக்கிறது.
இதை தனியாகவே விரிவாகப் பார்ப்போம்.
திருக்கோஷ்டியூர் தலத்தில், மாசி தெப்போத்ஸவ விழா வெகு விமரிசையாக நடைபெறும். தெப்பக்குளமும் அழகு. அங்கே எந்தக் கோயிலிலும் இல்லாத வகையாக, தெப்பக்குளத்தில் விளக்கு ஏற்றி விடும் வழிபாடு நடக்கிறது. அப்படி குளத்தில் விளக்கேற்றி வழிபட்டால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும். தடைப்பட்ட மங்கலகாரியங்கள் விரைவில் நடைபெறும் என்பது ஐதீகம்.
நின்ற திருக்கோலத்திலும் அமர்ந்த திருக்கோலத்திலும் சயனத் திருக்கோலத்திலுமாக பெருமாள் மூன்று விதமாக காட்சி தரும் அற்புதமான திருக்கோஷ்டியூர் திருத்தலத்துக்கு வாருங்கள். உங்கள் வாழ்வில் நல்ல நல்ல திருப்பமெல்லாம் நடந்தேறும் என்பது சத்தியம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT