Last Updated : 13 Jan, 2018 06:00 PM

 

Published : 13 Jan 2018 06:00 PM
Last Updated : 13 Jan 2018 06:00 PM

சுவாமி சரணம்! 51: அதுதான் ஐயப்ப மகிமை!

ஐயப்ப பக்தர்களே... உங்களுக்காக...!

சுவாமி தரிசனம் என்பது மனதுக்கு நிம்மதி தரக்கூடிய செயல். மனதில் நிறைவைத் தந்து பூரிப்படைய வைக்கிற காரியம். அப்படித்தான் சுவாமியின் தரிசனம் நம்மைக் குதூகலப்படுத்தும். அப்படி நம்மை உய்விப்பதற்காகத்தான், இத்தனை கோயில்களும் வழிபாடுகளும்!

யாரோ ஒருவர் கோயில் இடத்தில் தபஸ் செய்திருப்பார். அந்த தபஸ் வலிமையால் இறை தரிசனம் கிடைத்திருக்கும். அதன் பிறகு யாரோ ஒரு மன்னர் அங்கே முனிவரோ ஞானியோ தவம் செய்ததை அறிந்திருப்பார். அதன் பிறகு அங்கே கோயில் கட்டப்பட்டு, வழிபாட்டுக்கு உரிய இடமாக, வணங்குவதற்கு உரிய தலமாகக் கொண்டாடப் பட்டிருக்கும்.

இன்னும் இருக்கிறது. அதையடுத்து, அடுத்தடுத்த வந்த மன்னர்கள், கோயிலுக்குத் திருப்பணிகள் செய்ய, நிவந்தங்கள் அளிக்க, அப்போது உள்ள மக்களால் இன்னும் ஆராதிக்கப்பட, கோயில் என்பது அந்த ஊரைத் தாண்டியும் அடுத்தடுத்த ஊர்களுக்கும் பரவிவிட, அங்கிருந்தெல்லாம் இந்த ஊரை நோக்கியும் கோயிலை தரிசிக்கவும் என வரத் தொடங்குவார்கள்.

இன்னும் இன்னும் கோயிலின் சாந்நித்தியம் பேசப்படும். நாலா திசையில் இருந்தும் மக்கள் வருவார்கள். ‘இந்தக் கோயில் பத்தி அவங்க சொன்னாங்க. அந்தக் கோயில் பத்தி எங்க பெரியப்பா சொன்னாங்க’ என்றெல்லாம் சொல்லி, வழி கேட்டு, வருவார்கள். தரிசித்து விட்டுச் செல்லும் போது, வழிநெடுக கோயிலின் பெருமை பேசியபடியே செல்வார்கள். அதைக் காதில் கேட்டவர்கள், கோயிலைக் கண்ணால் தரிசிக்க ஓடிவருவார்கள். இப்படித்தான், ஒரு கோயில் பிராபல்யமாகிறது.

தமிழகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களுக்கு காமாட்சி அன்னையைத் தெரியும். திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கனை அறிவார்கள். சமயபுரத்தாளே... என்று எங்கோ இருந்து கொண்டு கன்னத்தில் போட்டுக் கொள்கிறவர்கள் இருக்கிறார்கள். தஞ்சை பெரியகோயிலை இந்தியா கடந்தும் கூட கொண்டாடுகிறார்கள்.

ஆறுபடை வீடு தெரியாதவர்களே இல்லை. உச்சிப்பிள்ளையார் கோயில் இருக்கும் ஊரை சட்டென்று சொல்லிவிடுவார்கள். சங்கரனும் நாராயணனுமாக இணைந்த தலத்தை பலரும் சொல்லுவார்கள்.

மகாமகம் நடக்கும் ஊரை பலரும் சொல்லுவார்கள். ஐப்பசி துலா ஸ்நானம் நடக்கிற காவிரிக்கரையை எல்லோரும் தெரிவித்துவிடுவார்கள். ராமேஸ்வரம் தெரியாதவர்களே இல்லை. அங்கே உள்ள தீர்த்தங்களைப் பற்றி நிறைய பேர் சொல்லுவார்கள்.

திருப்பம் தரும் திருப்பதி, நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை, ரகசியம் சொல்லும் சிதம்பரம் என ஆயிரக்கணக்கான கோயில்கள். அற்புதங்களை தாங்கியிருக்கும் கோயில்கள் பல இருக்கின்றன. இப்படித்தான் உலகம் முழுவதும் சபரிமலை திருத்தலம், பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.

இன்னொரு விஷயம்...

ஐம்பது வருடங்களுக்கு முன்பு வரை, தென் மாவட்டங்களில், குறிப்பாக கேரளத்தை ஒட்டியிருக்கும் ஊர்களிலதான் மணிகண்டன், சபரி, சபரிகிரி, ஐயப்பன் என்றெல்லாம் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவார்கள். பிற்பாடு, அதாவது 1950களுக்குப் பிறகு, தமிழகத்தின் அனைத்து திசைகளிலும், அந்தப் பக்கம் ராமநாதபுரம் ஜில்லா, இந்தப் பக்கம் தஞ்சாவூர் ஜில்லா, அப்படி தாண்டினால் மெட்ராஸ் பக்கம், இந்தப் பக்கம் போனால் ,கொங்கு மண்டலமான கோவை, ஈரோடு, நடுவே பயணப்பட்டால் அந்தக் காலத்து வட ஆற்காடு, தென்னாற்காடு மாவட்டங்கள் எனப் பரவலாக, எல்லா ஊர்களிலும் மணிகண்டன் எனும் பெயர் சூட்டப்பட்டது. சபரி என்றும் சபரிகிரி என்றும் பெயர் சூட்டிக் கொண்டாடினார்கள். ஐயப்பன் என்ற பெயர்களில் குழந்தைக்குப் பெயர் வைத்தது மட்டுமின்றி, தங்களின் கடைகளுக்கும் அந்தப் பெயரைச் சூட்டினார்கள்.

ஐயப்ப சுவாமிதான் எங்கள் கண்கண்ட தெய்வம் என்று கொண்டாடத் தொடங்கினார்கள். மணிகண்ட சுவாமிதான் எங்களின் குலவிளக்கு என்று போற்றினார்கள். சபரிகிரி சாஸ்தாதான் எங்களை வாழவைக்கும் தெய்வம் என்று வணங்கி மகிழ்ந்தார்கள்.

இவையெல்லாம் ஐம்பதுகளில் வெகு வேகமாகப் பரவத் தொடங்கியது. ஐயனின் புகழும் அருளும் கீர்த்தியும் சாந்நித்தியமும் எல்லோர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் குடிகொள்ளத் தொடங்கிய காலகட்டம் அது.

’’இன்றைக்கு எங்கள் அமைப்பின் சார்பில், அன்னதானத் திட்டத்தை விரிவுபடுத்தியிருக்கிறோம். சொல்லப்போனால், இதுவரை மற்றவர்களுடன் எங்கள் அமைப்பின் பங்களிப்பும் இருந்தது. ஆனால் இந்த முறை அமைப்பில் இன்னும் இன்னும் பல உறுப்பினர்கள் சேர்ந்தார்கள். இந்த முறை பக்தர்களுக்கு நாமே தனியாக அன்னதானம் வழங்கலாமே என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி ,சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு இப்போது அன்னதானம் வழங்கிக் கொண்டிருக்கும் தருணத்தில்தான் உங்களுடன் பேசுகிறேன்’’ என்று நெகிழ்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் சொல்கிறார் ஐயப்ப உபந்யாசகர் அரவிந்த் சுப்ரமண்யம்.

அப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போது இன்னொரு தகவலையும் தெரிவித்தார் நண்பர் அரவிந்த் சுப்ரமண்யம்.

‘’கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு சொற்பொழிவாற்றச் சென்றிருந்தேன். எட்டுப்பத்து நாட்கள் இருந்தபடி தினமும் அங்கே உள்ள மக்களுடன் கலந்துரையாடல், சாஸ்தா சரிதம் என நன்றாக இருந்தது அந்தச் சந்திப்பு. அப்போது கிடைத்த இன்னொரு சந்தோஷம் என்ன தெரியுமா?

இதோ... இந்த முறை சபரிமலைக்கு எங்களுடன் புதிய நபர் ஒருவர் வந்திருக்கிறார். ஐயப்பன் மீது மிகுந்த பக்தியாகிவிட்டார். சதாசர்வமும் ஐயப்பனைப் பற்றியே சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று அவருடன் வேலை பார்க்கும் நண்பர்கள் என்னிடம் போனில் பேசும் போது தெரிவித்தார்கள்.

இந்த முறை என்னையும் கூட்டிப் போங்கள் என்று சொன்னார். அதன்படி மாலையணிந்து, விரதமிருந்தார். இப்போது என்னுடன் இருமுடி கட்டிக் கொண்டு சபரிமலைக்கு வந்து, அன்னதான நிகழ்விலும் கலந்து கொண்டிருக்கிறார். அவர் ஆஸ்திரேலியாக்காரர். இதுதான் ஐயப்பனின் மகிமை’’ என்று நெக்குருகிச் சொன்னார்.

ஆமாம்... ஐயப்பனின் மகிமை அப்படித்தான் விரியும். கடல் கடந்தும் பரவும். பரவிக் கொண்டிருக்கிறது.

இவை அனைத்துக்குமாக ஐம்பதுகளில் நிகழ்ந்த ஒரு விஷயத்தைச் சொல்கிறார்கள் பலரும்!

அது... அப்போது ஐயப்பன் கோயிலில் நடந்த தீ விபத்து!

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!

-அடுத்த அத்தியாயத்துடன்... மகரஜோதி நாளில் நிறைவுறுகிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x