Published : 26 Jan 2024 06:39 AM
Last Updated : 26 Jan 2024 06:39 AM
காஞ்சி/செங்கை/திருவள்ளூர்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கோயில்களில் தைப்பூசம் விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலில் தைப்பூசம் விழாவையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. காஞ்சிபுரம், சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பக்தர்கள் பலர் பங்கேற்றனர். இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை பகுதியிலும் தைப்பூச விழா கோலாகலமாக நடைபெற்றது.
செங்கல்பட்டு திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்குவந்த பக்தர்கள் மொட்டையடித்து, ராஜகோபுரத்தின் முன்புள்ள 16 கால் மண்டபத்தின் முன் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி கந்தசுவாமியை வழிபட்டனர். இதனால், சந்நிதி வீதியில் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. முன்னதாக, இதேபோல், வல்லக்கோட்டை, குன்றத்தூர், நடுபழனி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகப்பெருமான் கோயில்களில் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோயில்கள் மற்றும் சிவாலயங்களில் உள்ள முருகன் சந்நிதிகளில் தைப்பூச திருவிழா நேற்று வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
இதில், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில், முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்அலங்காரம் நடைபெற்றது. பொன்னேரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல், ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், பாகசாலை பாலசுப்பிரமணிய சுவாமிகோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, முருகனை வணங்கினர்.
மேலும், வள்ளலாரின் தாயார் சின்னம்மையார் பிறந்த ஊரான, பொன்னேரி அருகே உள்ள சின்ன காவனத்தில் உள்ள சின்னம்மையார் இல்லத்தில் தைப்பூச திருவிழா நேற்று நடைபெற்றது. இதில், வள்ளலார் தாயார் அறக்கட்டளை சார்பில் வள்ளலார் சொற்பொழிவு, அன்னதானம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT