Published : 15 Feb 2018 09:05 AM
Last Updated : 15 Feb 2018 09:05 AM
பகவான் யோகி ராம்சுரத்குமார் அற்புதங்கள்
ஒருபக்கம் காஞ்சி மகா பெரியவா... இன்னொரு பக்கம்... பகவான் யோகி ராம்சுரத்குமார் என மகான்களுடன் பக்தி கொண்டிருந்த, பழகி வந்த ரா.கணபதி அண்ணா, பூர்வ ஜென்ம புண்ணியம் நிறைந்தவராகத்தான் இருக்கவேண்டும்.
‘சூரிய குல சேகரர் ஆன யோகி ராஜர், சந்திர சேகர பெரியவாளுடனேயே இணைந்துவிட்டவராகத்தான் என் நெஞ்சில் இடம் கொண்டார். ஆச்சார நெறிகளை மட்டுமே வைத்து, முன்பு முரண்பட்டவர்களாகக் கண்ட இருவரிடையே இப்போது, உள் அனுபவத்தையும் வெளி அனுக்கிரகத்தையும் வைத்து, அற்புத ஒற்றுமை கண்டேன்’’ என்று சொல்லிப் பூரிக்கிற ரா.கணபதி அண்ணா, பக்திக்கு ஆற்றிய பணிகள் ஏராளம்.
’’லேசான வித்தியாசமும் ஒற்றுமையும் உண்டு. தமது அடக்கப் பாங்கையும் அடக்கமாகவே காட்டுபவர் மகாபெரியவாள். பகவான் யோகியும் தம்மை பிச்சைக்காரன் என்றே எப்போதும் சொல்லிக் கொள்ள வைத்தது. இங்கே ஒரு ஒற்றுமை... பெரியவாளும் தம்மை ஒவ்வொரு சமயத்தில், அப்படிச் சொல்லிக் கொள்வது உண்டுதான்.
ஸ்ரீமடத்தில் பிக்ஷை செய்வோரை பிக்ஷைக்காரர் என்பர். பெரியவாளோ, பிக்ஷைக்காரர்னா கெளரவமா இருக்கு. பிக்ஷைதான் பிச்சை ஆகியிருக்கு. அதுக்காக அவாளை பிச்சைக்காரான்னா கேட்டுப்பாளா? வாஸ்வத்திலேயும் பிக்ஷை போடற அவாளா பிச்சைக்காரா? வாங்கிக்கிற நான்தான் பிச்சைக்காரன்’ என்பார். ஆக, இருவருமே... அதாவது மகா பெரியவாளும் பகவான் யோகி ராம்சுரத்குமார் ரெண்டுபேருமே, அன்புப் பிச்சை, அகந்த பலி கேட்கும் பிக்ஷாண்டார்கள்தான்!’’ என்று சொல்லியிருக்கிறார் ரா.கணபதி அண்ணா.
பகவான் யோகி ராம்சுரத்குமாரை பல முறை தரிசனம் செய்த பிறகு... இன்னும் இன்னும் தாம் புரிந்து கொண்டதை விவரிக்கிற ரா.கணபதி அண்ணாவின் ஒப்பீடு, சிலிர்க்க வைக்கக் கூடியது.
‘’ஸ்ரீராம நாமத்தை நானிலம் முழுவதும் பரப்புவதில் பகவான் யோகி ராம்சுரத்குமார் ஊக்கத்துடன் இருக்கிறார். மகா பெரியவாளும், வெள்ளிக்காசாகவும் பொற்காசாகவும் வழங்கி, எத்தனை ஆயிரம் பேரை கோடி ராம நாமம் எழுத வைத்திருக்கிறார்! என் உள்ளம் கவர்ந்த இன்னொரு ஒற்றுமையையும் சொல்லியாகவேண்டும்.
அதாவது தமது தொண்டர்களுக்கு உயர்வளிப்பதில், இருவருக்கும் உள்ள அதிசய நாட்டம் வியக்கவும் பிரமிக்கவும் வைக்கிறது. என்னிடம் யோகி பகவான், ‘இந்தப் பிச்சைக்காரனைப் பற்றி எழுத ஒன்றுமில்லை. எழுதத்தான் வேண்டுமெனில், இந்த நாலு தாய்மார்களைப் பற்றிச் சொல்லுங்கள்’ என்று கூறி, நான்கு மாதரசிகளைக் காட்டினார். தொண்டை அடைக்கத் தொடர்ந்தார்... ‘இந்தத் தாய்மார்கள் இருக்கை தந்து, பேணிக் காத்திருக்காவிட்டால், நோயுற்றிருந்த இந்தப் பிச்சைக்காரனின் உடல் நசித்தேப் போயிருக்கும்’ என்று தேவகி, விஜயலக்ஷ்மி, ராஜலக்ஷ்மி, விஜயாக்கா என்று அவர்கள் பெயரையும் கைகுவித்துக் கூறினார்.
தோற்றத்திலேயே தூய்மையும் பணிவுமாக உள்ள அந்த நல்வரை ஸூதாமா சகோதரிகள் என்கிறார்கள் அவர்களில் முதலிடம் பெற்றவரான மா தேவகி அம்மா என்று ஆஸ்ரம அன்னையாகவே போற்றுகின்றனர்.
நன்கு படித்து, பதவிகள் வகித்த இவர்கள், அவற்றையெல்லாம் உதறிவிட்டு, நமது யோகியே சகலமும் என்று சரணடைந்து, தாஸ்ய பக்தியால் ஆன்மிகத்தில் ஆழங்கால்பட்டிருக்கிறார்கள்’’ என்று ரா.கணபதி அண்ணா, விவரிக்கிறார்.
திருவண்ணாமலையில் ஸூதாமா என்ற வீட்டில் ஒன்றுகூடி வாழும் இவர்களே குறிப்பாக, மா தேவகிம்மா, சில வருடங்களுக்கு முன் மிகவும் பிணியுற்றிருந்த யோகியைப் பிடிவாதமாக சுதாமாவாசியாக்கி, அரும்பாடுபட்டு அவரின் உடலைக் காத்து கவனித்துக் கொண்டார். அப்பேர்ப்பட்டவர்களை தன் மகள்களைப் போல் பாவித்து, போற்றுகிறார். ‘இவர்களை எழுதுங்கள்’ என்றார். இந்த உலகம் தன்னை அறிவதை விட, இவர்களை அறிவதே அவசியம் எனக் கருதுகிறார்.
உலகம் தம்மை விட அவர்களை அறிவதையே அவசியமென கருதுகிறார். முப்பதாண்டுகளுக்கு முன்னால், ஸ்ரீ மஹா பெரியவாள் மஹா சரிதத்தை எழுதி பரப்ப, நான் ஆர்வமுற்ற காலம்.
அப்போது அவர், ‘ஒனக்கு எப்படி பெரியவாளைப் பத்தி லோகத்துக்கெல்லாம் தெரியணும்னு இருக்கோ, அப்படியே, ஒன்னோட அந்த பெரியவாளுக்கும் இன்னும் அனேக பெரியவாளைப் பத்தி லோகத்துக்கு தெரியணும்னு இருக்கு’ என்று சொல்லி சற்று தள்ளி போய் கொண்டிருந்த பாராக்கார (காவலாள்) மரக்கண்ணுவைக் காட்டினார். எதிர்புறத்திலிருந்து வந்த சந்தனம் அரைக்கும் சுப்புணியைக் காட்டினார். ‘இந்த ரெண்டு பேரும் கூட, அந்த பெரியவா லிஸ்ட் ல சேந்தவா தான். இன்னும் இப்படி ஆதியிலேருந்து இன்னி வரை எனக்கும் இந்த மடத்துக்கும் அந்தரங்க சுத்தமாக கைங்கர்யம் பண்ணின அனேக பெரியவா மட்டும் இல்லைன்னா, நானும் ஒரு பெரியவனாக்கும்னு பெத்தபேர் வாங்கிண்டே இருக்க முடியாது’ என்றார்.
இப்படி தன் அனுபவங்களை ரா.கணபதி அண்ணா சிலாகித்துச் சொல்லியிருக்கிறார்.
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெயகுரு ராயா.
-ராம்ராம் ஜெய்ராம்
தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT