Published : 20 Jan 2018 04:17 PM
Last Updated : 20 Jan 2018 04:17 PM
பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்
விதையானது, அப்படி விதையாக இருக்கும்போதே அது சத்தானதா, துளிர்க்குமா, வளருமா என்பதெல்லாம் தெரிந்துவிடும். துளிர்த்து, வளர்ந்து, கனிகளைத் தருமா, நிழலைப் பரவவிடுமா, வேர்பிடித்து வாழ்வாங்கு நிற்குமா என்பதையெல்லாம் விதையைக் கொண்டே அறிந்து கொள்வார்கள் விவசாயிகள்.
மரம் பெரிதுதான். ஆனால் விதை சிறிது. ‘விதைச்சது வீண் போகலை’ என்று விவசாயிகள் மட்டுமின்றி, பலரும் சொல்வார்கள். விவசாயிகள் தவிர்த்து, பலரும் சொல்வதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
‘நான் சிறுகச் சிறுக சேர்த்த பணத்தை, அதுல போட்டேன். அது வீண்போகலப்பா. விதைச்சது, பெரிய வரமா வளர்ந்து நிக்கிற மாதிரி, அந்த சின்னப்பணம், சில ஆயிரங்கள் கொண்ட பணம், லட்சமா வளர்ந்து நின்னு கைகொடுத்துச்சு’ என்பார்கள்.
நான்கு வருடங்களுக்கு முன்பு 55 வயது மிக்க மனிதரைச் சந்தித்தேன். காரில் குடும்பமாக வந்து இறங்கினார். மனைவியையும் ஒரே மகளையும் அறிமுகப்படுத்தினார். 13 வருடங்களுக்கு ஒரு ஏக்கர் இடத்தை 18 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினாராம். இப்போது அந்த இடம், 14 லட்சத்தைத் தாண்டிவிட்டது என்றார்.
வீடு கட்டப் போகிறீர்களா என்று கேட்டேன். இல்லை. இதுபோல், சென்னையைச் சுற்றி, ஏழெட்டு இடங்கள் இருப்பதாகச் சொன்னார். மகள், மருத்துவம் படிக்கிறார். இப்போதைய சம்பாத்தியத்தை வைத்து டாக்டருக்குப் படிக்க வைக்கிறேன். திருமணத்துக்கு, இரண்டு இடங்களை விற்றால் போதும்... ஜாம்ஜாமென்று திருமணத்தை நடத்திவிடுவேன் என்றார். அங்கே அவரின் ஒரு ஏக்கர் என்பதே விதையாகி, இன்றைக்கு விருட்சமென வளர்ந்திருக்கிறது.
ஆனால், விதை என்று பணம் சேருவதையும் இடத்தின் மதிப்பு உயருவதையும் மட்டுமே சொல்லிவிடமுடியுமா. இதுவா உண்மையான விதை. வளர்ச்சி?
‘சாத்வீ பேட்டா!’
ராம்சுரத் குன்வரின் அம்மா, அவருடைய பத்து வயதில் இருந்தே அடிக்கடி இந்த வார்த்தையைச் சொல்லித்தான் கொஞ்சினார். நல்ல நல்ல தருணங்கள் கிடைக்கும் போதெல்லாம் நல்ல நல்லதான விஷயங்கள் நடந்த போதெல்லாம் தன் மகனை ‘சாத்வீ பேட்டா’ என்று சொல்லியே அழைத்தார். அப்படி சாத்வீ பேட்டா என்று சொல்லி அழைக்கும் போதெல்லாம், மகனின் கன்னம் கிள்ளி, தலை வருடினார்.
இவரின் வார்த்தையைக் கேட்ட அக்கம்பக்கத்தார் கூட, ஒருகட்டத்தில் ‘டேய் சாத்வீ பேட்டா... உங்க அம்மா கூப்பிடுறாங்க பாரு’ என்று விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ராம்சுரத் குன்வரை அழைக்கத் தொடங்கினார்கள்.
சில காலங்களில், அம்மா மட்டுமின்றி வீடே அப்படி அழைத்தது. வீடு மட்டுமின்றி அக்கம்பக்கமும் அப்படித்தான் அழைத்தது. அந்தத் தெருவில் உள்ளவர்களுக்கு ‘சாத்வீ பேட்டா’ என்றால் அது ராம்சுரத் குன்வர் என்று தெரிந்திருந்தது.
சாத்வீ பேட்டா என்றால் புனித மகன் என்று அர்த்தம்!
சிறுவனாக இருக்கும் போதே, ராம்சுரத் குன்வர் புனித மகன் என்பது அந்த அன்னைக்குத் தெரிந்து விட்டது போலும். அல்லது ஏதோவொன்று அவரை அப்படி அழைப்பதற்கு உந்தியிருக்கக் கூடும்!
அன்றைக்கு அம்மாவாலும் அக்கம்பக்கத்தாராலும் புனித மகன் என்று சொல்லப்பட்ட ராம்சுரத் குன்வர், பின்னாளில், பல வருடங்களுக்குப் பிறகு, எல்லோராலும் புனித மகான் என்று அழைக்கப்பட்டார். பகவான் யோகி ராம்சுரத்குமார் என கொண்டாடப்பட்டார். யோகி என்று எல்லோரும் அவரை வணங்கினார்கள். பகவான் என்று எல்லோரும் அவரிடம் வேண்டினார்கள். கொண்டாடப்படுகிறார். வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். வேண்டுகிறார்கள்.
இவற்றுக்கு நடுவே அவர் சந்தித்த சாதுக்களும் மகான்களும் அவரை உணர்ந்து கொண்டார்கள். கபாடியா பாபா எனும் சாதுவும் புதுச்சேரியில் சுவாமி அரவிந்தரும் ராம்சுரத் குன்வர் சாதாரணரில்லை என்பதைப் புரிந்து கொண்டார்கள்.
பகவான் ரமண மகரிஷி , ராம்சுரத் குன்வரைப் பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்து கொண்டார். உணர்ந்து கொண்டார். அவர் மீது வாஞ்சை காட்டினார். இன்னும் கனிவும் கருணையுமாக அவரை வழிநடத்தினார்.
இந்த சமயத்தில்தான், பகவான் ரமணர் முக்தி அடைந்தார்.
இதையடுத்து, சிலகாலம் ஊருக்குச் சென்றார். அங்கே சில நாட்கள் இருந்துவிட்டு, மீண்டும் திருவண்ணாமலைக்கு வந்தார். திருவண்ணாமலை ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் உள்ள புன்னை மரத்தடியிலேயே இருந்தார். திடீரென்று எழுந்து கோயிலுக்கு வருவார். பிறகு கோயிலின் ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு, தியானத்தில் இருப்பார்.
பிறகு இன்னொரு நாள் மலையுச்சிக்குப் பயணிப்பார். மலையுச்சியில் இரண்டு நாள் மூன்று நாள் கூட இருப்பார். அப்புறம் கிரிவலப் பாதையில் சுற்றிக் கொண்டிருப்பார். இப்படி... திருவண்ணாமலை எனும் புண்ணிய பூமியில், இந்த புனித மகானின் திருவடி படாத இடமே இல்லை!
இந்த நிலையில், கேரள மாநிலத்தின் கஞ்சங்கோட்டுக்குச் சென்றார். அங்கே உள்ள ஆஸ்ரமத்துக்குள் நுழைந்தார். அது... பப்பா ராம்தாஸ் சுவாமிகள் ஆஸ்ரமம்.
1884ம் வருடம் அவதரித்தார் பப்பா ராம்தாஸ் சுவாமிகள். அனுமன் ஜயந்தி நன்னாளில் இவரின் அவதாரம் நிகழ்ந்தது. ராமபக்தன் என்று பெயரெடுத்த அனுமனின் திரு அவதார நன்னாளில் பிறந்தார் என்பதாலோ என்னவோ ராம பக்தியில் திளைத்தார் பப்பா ராம்தாஸ் சுவாமிகள்.
சிறுவயதில், ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சி பெற்ற பப்பா ராம்தாஸ் சுவாமிகள், ஏராளமான புத்தகங்களை வாசித்தார். கல்விப் புத்தகம் வேம்பாகக் கசந்தாலும் இலக்கியமும் பக்தியுமான நூல்கள், அவருக்குத் தித்தித்தன.
இறை வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்ட குடும்பம் அது. ஆகவே எப்போதும் ஏதேனும் பூஜைகள் நடந்து கொண்டே இருக்கும். ஆக, சிறுவனாக இருக்கும் போதிருந்தே பக்தி சூழ வளர்ந்தார் சுவாமிகள்.
22வது வயதில், திருமணம் நடத்திவைக்கப்பட்டது. ருக்மாபாய் எனப்படும் ருக்மிணி பாயை மணம் புரிந்தார். 29வது வயதில் மகள் பிறந்தாள். ரமாபாய் என்று பெயரிட்டார்.
ஒருபக்கம் இறை பக்தி, இன்னொரு பக்கம் இல்லறம் , அடுத்ததாக வியாபாரம் என மூன்றிலும் கவனமும் ஈடுபாடும் செலுத்தினார். ஆனால் இல்லறத்தை விட, வியாபாரத்தை விட இறை பக்தியே மேலோங்கியிருந்தது அவரிடம்!
வியாபாரம், குடும்பம், இறைத் தேடல் என மூன்று வகையான பாதையிலும் மாறி மாறிப் பயணித்தார். இவற்றில் கொஞ்சம் குழப்பம் இருந்தது. தவித்தார். செய்வதறியாது குழம்பித் தவித்தார்.
இந்த சமயத்தில்தான்... அவருடைய தந்தை, அழைத்தார். மகனின் நிலையை, அவரின் குழப்பத்தை உணர்ந்தவராக, அருகில் அமரவைத்துக் கொண்டார். ‘எதையும் போட்டு குழப்பிக்காதே. பகவானைக் கெட்டியாப் பிடிச்சுக்கோ. அவனோட திருநாமத்தை, சொல்லிக்கிட்டே இரு. உள்ளே ஒரு தெளிவு கிடைக்கும். உனக்கான விடியல் பிறக்கும்’ என்றார்.
அப்போது மகனுக்கு அவர் செய்த உபதேசம் போலான விஷயம் இதுதான். ‘ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்’ என சொல்லிக் கொண்டே இரு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக் கொண்டே இரு. அப்படிச் சொல்லுவதற்காகவே நேரம் ஒதுக்கிக் கொள் என்றார்.
அந்த சொற்களை இடையறாது சொல்லிக் கொண்டே இருந்தார். எல்லோராலும் அறியப்பட்ட பப்பா ராம்தாஸ் சுவாமிகள், நமக்கு... இந்த உலகுக்குக் கிடைத்தது இந்த மகோன்னதமான வார்த்தைகளால்தான்!
ஆஸ்ரமத்துக்குள் ராம்சுரத் குன்வர் நுழைந்து, சுவாமிகளைத் தரிசித்தார். நமஸ்கரித்தார். அவரின் தேடலையும் குரு வேண்டும் என்கிற தவிப்பையும் புரிந்து கொண்டார்.
‘இதை திரும்பத் திரும்பச் சொல்லு. சொல்லிக் கொண்டே இரு. வேறு எதிலும் கவனம் செலுத்தாமல், இதில் மட்டுமே கவனம் செலுத்து. மனமொன்றிச் சொல்லு. சொல்லிக் கொண்டே இரு. நீ வேறு, இந்தச் சொற்கள் வேறு என்றில்லாதபடிக்கு, சொல்லியபடியே இரு. இந்தச் சொற்களில் கரைந்து போ. கலந்து போ!’ என்று அருளினார்.
ராம்சுரத் குன்வருக்கு , பப்பா ராம்தாஸ் சுவாமிகள் சொன்ன அந்த வாசகம் நாம் அறிந்ததுதான்.
அது... ‘ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்’
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெய குரு ராயா.
- ராம்ராம் ஜெய்ராம்
தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT