Published : 25 Jan 2024 06:55 PM
Last Updated : 25 Jan 2024 06:55 PM
மதுரை: முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக திரண்டனர். பக்தர்கள் பால்காவடி, பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
முருகப்பெருமானின் முதல்படை வீடாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் திகழ்கிறது. குடவரைக்கோயிலான இங்கு தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் திரண்டனர். காலையில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செய்தனர். அதனைத்தொடர்ந்து மூலவரான முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். அதேபோல், ஆண்டுக்கொருமுறை உற்சவம் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையும், மலையடிவாரத்திலுள்ள பழனியாண்டர் கோயிலிலுள்ள உற்சவர் முத்துக்குமார சுவாமி, தெய்வானையும் சன்னதி தெரு, மேலரத வீதி, கீழ ரத வீதிகளில் எழுந்தருள்வதும் வழக்கம்.
மேலும் பவுர்ணமி என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அதனையொட்டி பக்தர்கள் பாதுகாப்புக்காக 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இக்கோயில் துணை ஆணையர் நா.சுரேஷ்,அறங்காவலர் குழு தலைவர் ப.சத்தியபிரியா, அறங்காவலர்கள் டி.எம்.பொம்மதேவன், நா.மணிச்செல்வன், வி.சண்முகசுந்தரம், தி.ராமையா மற்றும் கோயில் பணியாளர்கள் ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT