Published : 02 Feb 2018 10:23 AM
Last Updated : 02 Feb 2018 10:23 AM
திண்ணியம் முருகப்பெருமானை தரிசித்துப் பிரார்த்தனை செய்யுங்கள். நம் வாழ்வில் நமக்கு நடக்கவேண்டிய நல்லதையெல்லாம் நடத்தித் தந்தருள்வார் கந்தக் கடவுள். இங்கே உள்ள முருகன் சந்நிதியில் ஓர் ஆச்சரியம் காத்திருக்கிறது.
அதை அறிவதற்கு முன்னதாக... இந்த ஆலயத்தின் ஸ்தல புராணத்தை, ஸ்தல வரலாறைத் தெரிந்து கொள்வோமா?
திருச்சி லால்குடிக்கு அருகில் உள்ள திண்ணியம் திருத்தலம்... அற்புதமான க்ஷேத்திரம். கொள்ளை அழகுடன் காட்சி தரும் முருகப்பெருமான், நாம் எண்ணியதையெல்லாம் ஈடேற்றித் தருவார் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
சோழர்களால் தழைத்திருந்த காலம் அது. அகண்டு விரிந்த நதியாக, கிளை ஆறுகளாக, சிறு ஓடைகளாக தேசமெங்கும் ஊடறுத்து காவிரிநதியானது விவசாயத்தைப் பெருக்க... ஊருக்கு ஊர் ஆலயங்கள் அமைக்கப்பட்டன. சோழப் பேரரசர்களால் பக்தியும் சேர்ந்து பெருகிய உன்னதமான தருணம் அது.
தேவர்களின் காலை சந்தியாகாலமாகிய மார்கழி; மாலை ஆடி; இந்த இரண்டு மாதங்களைத் தவிர, மற்ற மாதங்களில் எல்லாம் கும்பாபிஷேகம், பிரம்மோத்ஸவம் என சோழவள நாட்டில் கோலாகலம் மிகுந்திருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அப்படி ஓர் ஊரில் புதிதாக ஒரு சிவாலயம் எழுப்ப முடிவு செய்யப்பட்டது. நல்லதொரு நாளில் திருப்பணிகளும் ஆரம்பமாயின. வெகு தூரத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பாறைகள் எல்லாம் சோழச் சிற்பிகளின் கைவண்ணத்தில் தூண்களாகவும், மண்டப விதானங்களாகவும் மாறின. கோயிலில் பிரதிஷ்டை செய்யவேண்டிய தெய்வத் திருமேனிகளை வெளியூரில் செய்து கொண்டுவரத் திட்டமிட்டிருந்தார்கள்.
அதன்படி, அழகிய சிவலிங்கமும் வள்ளி- தெய்வானை தேவியருடனான முருகப் பெருமானின் திருவிக்கிரகமும் செதுக்கப்பட்டு, வண்டியில் ஏற்றிக் கொண்டுவரப்பட்டது. வழியில் ஓரிடத்தில் அச்சாணி முறிந்து, வண்டி குடைசாய்ந்தது. தெய்வ விக்கிரகங்கள் தரையில் விழுந்தன. வண்டியுடன் வந்த தொழிலாளர் களும் அடியவர்களும் பதறிப்போய் அந்த விக்கிரகங்களைத் தூக்க முயற்சிக்க, அவை சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. அதை அசைக்கவும் முடியவில்லை. நகர்த்தக் கூடமுடியவில்லை.
தங்கள் ஊர் கோயிலில் குடியிருத்தி, நித்தமும் ஆடை- ஆபரணங்கள் பூட்டி, அனுதினமும் நைவேத்தியம் படைத்து பூஜிக்க வேண்டும். வருடம்தோறும் விழா எடுத்துக் கொண்டாட வேண்டும். அதன் பலனால் பிணியும் வறுமையும் அகன்று தங்கள் ஊர் செழிக்கும். தங்கள் தேசமும் வளம் பெறும்... என்கிற கனவுகளோடு ஆசை ஆசையாக அல்லவா அந்த தெய்வ விக்கிரகங்களை அவர்கள் எடுத்துவந்தார்கள்?
அதுமட்டுமா? ஓர் ஊரில் கோயில் கட்டுகிறார்கள் என்றால், அங்கே அதன் காரணம் விளக்கப்படும்.
‘இதுவொரு புண்ணிய பூமி. தெய்வ சங்கல்பத்தால் இப்படியானதொரு அனுக்கிரகம் இங்கே விளைந்தது என்று புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. பெரியோர்களும் கதை கதையாய்ச் சொல்லி வைத்திருக்கிறார்கள். அதன் காரணமாக, ஆதியில் இங்கே சின்னதாக ஒரு கோயிலும் இருந்தது; இப்போது இல்லை. நாங்கள் கட்டுகிறோம்.
அதன் மூலம், காலம்காலமாக எங்கள் முன்னோரும் நாங்களும் வசித்து வரும் எங்கள் ஊரின் பெருமையை, வெளியே எடுத்துச் சொல்ல முடியும். அதையறிந்து வெளியூர்வாசிகளும் தேசாந்திரிகளும் அதிகம் வருவார்கள். கூட்டம் கூடும். உள்ளூர்க் காரர்களுக்கு வணிகம் பெருகும்...’ இப்படி, வழிபாட்டின் அடிப்படையாக மட்டுமின்றி, வாழ்க்கையின் ஆதாரமாகவும் அமைந்திருந்தன ஆலயங்கள்.
அந்த அன்பர்களும் தங்கள் ஊரின் பெருமையை வெளிக்காட்ட, தங்களின் வாழ்க்கை வளப்பட ஓர் ஆலயம் வேண்டும் என விரும்பினார்கள். அதற்காகவே அழகழகாய் தெய்வத் திருமேனிகளைச் சமைத்து வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்தார்கள். ஆனால், இறை சித்தம் வேறுவிதமாக அமைந்தது.
கீழே விழுந்த விக்கிரகங்களை அசைக்க முடியாமல் போகவே, அந்த அன்பர்கள் அங்கேயே அழகாக ஓர் ஆலயம் எழுப்பினர். இது இன்னும் சிறப்பானது. தெய்வமே விரும்பி ஓரிடத்தில் குடியேறுகிறது என்றால் சும்மாவா? மிக விசேஷம் பெற்றுவிட்டது அந்த இடம். இன்றைக்கும் அன்பர்கள் எண்ணியதை எண்ணியபடி நிறைவேற்றித் தரும் மிகப் புண்ணியம் வாய்ந்த திருத்தலமாகத் திகழ்கிறது!
அந்தத் தலம்... திண்ணியம். திருச்சி- லால்குடிக்கு அருகில், திருச்சியில் இருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம். ஊரின் நடுவே கம்பீரமாக அமைந்துள்ளது ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி கோயில். உள்ளே நுழைந்தால், கொடிமரம், மயில்வாகனம், இடும்பன் சந்நிதி, பிராகாரத்தில் தென்மேற்கில் ஸ்ரீஸித்தி கணபதி ஆகியோரைத் தரிசிக்கலாம்.
கோயிலில் சிவானாரின் திருநாமம் கோடீஸ்வரர். பெயருக்கேற்ப ஒருமுறை தரிசிக்க கோடி மடங்கு புண்ணியம் வழங்கும் பேரருளாளன். அம்பிகையின் திருநாமம்- ஸ்ரீபிருஹன் நாயகி. வரம் வாரி வழங்கும் நாயகி.
திண்ணியம் நாயகனான ஸ்ரீமுருகப்பெருமானின் சந்நிதிக்குச் சென்றால் ஆச்சரியம்...
அதென்ன...?
ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானை, ஸ்ரீமுருகப்பெருமான் மூவரும் தனித்தனி மயில் வாகனங்களில் அமர்ந்தபடி அருட்காட்சி தருகிறார்கள். அதேபோன்று, சிவனாரையும் முருகனையும் ஒரே இடத்தில் நின்று, ஒரே நேரத்தில் தரிசிக்கமுடியும்!
உத்ஸவர் முருகன் வள்ளி- தெய்வானையுடன் மயிலின் மீது அமர்ந்த கோலத்தில் அருள்கிறார். இவரின் திருமேனியும் அழகு! அழகன் முருகனின் அழகுக்குச் சொல்லவா வேண்டும்?
சிவாலயங்களில் ஸ்ரீதட்சிணாமூர்த்தியே தென்திசை நோக்கி அமர்ந்திருப்பார். இங்கே முருகப்பெருமானே குரு அம்சத்துடன் தெற்கு நோக்கி காட்சி தருகிறார். ஆகவே, இவரை வழிபட கல்வி- ஞானம் பெருகும் என்பது ஐதீகம். மேலும், ஓராறு முகமும் ஈராறு கரங்களுமாகத் திகழும் திண்ணியம் முருகனுக்கு செவ்வரளி மற்றும் விருட்சிப்பூ மாலை சார்த்தி வழிபட... திருமணத் தடை நீங்கும், குழந்தை வரம் கிடைக்கும். கல்வியில் சிறக்கலாம் என்று நம்பிக்கையுடன் தெரிவிக் கிறார்கள் பக்தர்கள்.
இங்கு ஒருமுறையேனும் வந்து, கந்தனையும் கந்தனின் தந்தையையும் தாயையும் வழிபட்டால் போதும்... தோஷங்கள் அகன்று விரைவில் கல்யாணம் கைகூடும் என்பது ஐதீகம்.
திண்ணியம் சென்று குருவாய் அமர்ந்த கந்தகுமாரனை வழிபடுங்கள். எண்ணியதை ஈடேற்றித் தருவான் திண்ணியம் முருகன்!
-வேல்வேல்
தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT