Published : 24 Jan 2024 04:12 AM
Last Updated : 24 Jan 2024 04:12 AM
சிவகங்கை: பாகனேரியில் 200 ஆண்டுகால பாரம்பரிய செவ்வாய் பொங்கல் நடைபெற்றது. இதில் 506 நகரத்தார் குடும்பத்தினர் ஒரே சமயத்தில் பொங்கல் வைத்தனர்.
பாகனேரியில் பிரசித்தி பெற்ற புல்வநாயகி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் முன், அப்பகுதி நகரத்தார் 200 ஆண்டுகளாக பாரம்பரிய செவ்வாய் பொங்கல் வைத்து வருகின்றனர். இந்த பொங்கல் விழா ஆண்டுதோறும் தை மாதம் பொங்கல் பண்டிகை முடிந்து, அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை நடக்கிறது. அதன்படி நேற்று செவ்வாய் பொங்கல் நடைபெற்றது. இதற்காக சில வாரங்களுக்கு முன்பு, திருமணம் முடித்த ஆண் வாரிசுகளின் குடும்பத்தினரை ஒரு புள்ளியாக கணக்கிட்டனர்.
மொத்தம் 506 புள்ளிகள் கணக்கிடப் பட்டன. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்று கூடிய நகரத்தார், பொங்கல் வைக்க உள்ளோரின் வரிசையை தேர்வு செய்தனர். புள்ளிகளாக தேர்வானோரின் பெயர்களை சீட்டில் எழுதி பானையில் இட்டனர். பின்னர் குலுக்கல் முறையில் வரிசையை தேர்வு செய்தனர். இந்தாண்டு முதல் பானையில் பொங்கல் வைக்க டி.என்.சுந்தரம் குடும்பத்தினர் தேர்வாகினர். இந்நிலையில் நேற்று புல்வ நாயகி அம்மன் கோயில் முன் கூடி, முதல் பானையாகத் தேர்வானோருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து 506 குடும்பத்தினரும் மாலை 4.32 மணிக்கு ஒரே சமயத்தில் பொங்கல் வைத்தனர். அனைவரும் வெண் பொங்கல் வைத்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இது குறித்து மதுரை நகரத்தார் சங்கத் தலைவர் பாகனேரியைச் சேர்ந்த வைரவன் கூறியதாவது: செவ்வாய் பொங்கலுக்கு எங்கிருந்தாலும் ஊருக்கு வந்துவிடுவோம். பொங்கலை அனைவரும் ஒரே சமயத்தில் வைப்போம். பொங்கல் வைத்ததும் ஒன்றாக வீடுகளுக்கு செல்வோம். இந்த விழாவில் உறவினர்கள் நலம் விசாரிப்பது, வரன் பார்க்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT