Last Updated : 14 Feb, 2018 10:40 AM

 

Published : 14 Feb 2018 10:40 AM
Last Updated : 14 Feb 2018 10:40 AM

கடையம் வந்தால் கவலை தீரும்!

கடையத்துக்கு வந்தால் கவலைகள் பறந்தோடும் என்பார்கள். கடையத்தில்தான், வில்வங்களில் ஈடுபாடும் ஆசையும் கொண்ட வில்வவனேஸ்வரர் குடிகொண்டிருக்கிறார்.

திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது அம்பாசமுத்திரம். இங்கிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது கடையம் . அழகிய கிராமத்தில், அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் வில்வ வன நாதர். இங்கே அம்பாளின் திருநாமம் ஸ்ரீநித்ய கல்யாணி அம்பாள்.

அற்புதமான ஆலயம். புராதனமான திருத்தலம். ஒருகாலத்தில் வில்வ வனமாக இருந்த இந்தத் தலத்தில் கோயில் கொண்டதால், சிவபெருமானுக்கு வில்வம் சார்த்தி வேண்டிக் கொண்டால் நம்மையும் நம் வாழ்வையும் சிவனார் பார்த்துக் கொள்வார்.

கைப்பிடி வில்வம் எடுத்து வந்து சிவனாருக்கு சார்த்தினாலே போதும்... நம் கவலைகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்கிறார்கள் பக்தர்கள்.

கடையம் குறித்தும் அந்தத் தலம் குறித்தும் ஸ்தல புராணம் தெரிவிக்கும் இன்னொரு சிறப்பம்சம் என்ன தெரியுமா?

சிற்றாறு உற்பத்தியாகும் குற்றாலத்துக்கும் தாமிரபரணி உற்பத்தியாகும் பாண தீர்த்தத்துக்கும் நடுவே, அகத்திய முனிவர் இன்றைக்கும் தவமிருக்கும் இடம் என்று போற்றப்படும் தலத்தில் அமைந்துள்ள ஆலயம் என்று கடையம் வில்வவன நாதரைப் போற்றுகிறார்கள் பக்தர்கள்.

அம்பாள் மட்டும் என்ன? நித்ய கல்யாணி. தன்னை நாடி வந்து, சந்நிதியில் கண்ணீருடன் நிற்கும் பெண்களின் துயர் துடைப்பதே தன் பணி என்பதாக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள் தேவி. அம்பாளுக்கு புடவை சார்த்தி, குங்கும அர்ச்சனை செய்து மனதார வேண்டிக் கொண்டால் போதும்... மணமாலை தந்து, மாங்கல்யம் காப்பாள் அம்பிகை என்கின்றனர் பக்தர்கள்.

சக்தி குறித்து இன்னொரு சிறப்பையும் வியப்பையும் சொல்லவேண்டும்.

இங்கே, ஸ்ரீதுர்கையாகவும் ஸ்ரீலக்ஷ்மியாகவும் ஸ்ரீசரஸ்வதி யாகவும் உமையவள் இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். எனவே, பெண்கள் எந்தக் குறைகளுடன் வந்தாலும், அவர்களின் குறைகளை தாயுள்ளத்துடன் உடனே போக்கி அருள்வாள் ஸ்ரீநித்யகல்யாணி அம்பிகை என்பது ஐதீகம்!

‘காணி நிலம் வேண்டும் பராசக்தி’ எனப் பாடினாரே மகாகவி பாரதி. அந்தத் தலம் இது என்று சொல்வார்கள்.

கடையம் வில்வவன நாதரை கண்ணாரத் தரிசியுங்கள். நம் சாபமெல்லாம் நீங்கும். பாவமெல்லாம் விலகும். தடைகள் அனைத்தும் தகர்த்து, நல்ல நல்ல சத்விஷயங்கள் நமக்குக் கிடைக்கச் செய்வார் சிவனார்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x