Last Updated : 12 Feb, 2018 12:20 PM

 

Published : 12 Feb 2018 12:20 PM
Last Updated : 12 Feb 2018 12:20 PM

தெரியாமல் செய்தாலும் புண்ணியம்தான்! சிவனுக்கு வில்வமாவது கொடுங்க..!

உங்களுக்கு என்னென்னவெல்லாமோ கொடுக்க, மகா சிவராத்திரி நன்னாளில் காத்திருக்கிறான் ஈசன். அவனுக்கு... நீங்கள் என்ன கொடுப்பீர்கள்? கொஞ்சம் வில்வம் கொடுங்கள். குளிர்ந்து போய், உங்கள் வாழ்வையே குளிரப்பண்ணுவான் என்பது உறுதி! நாளைய தினம் 12.2.18 செவ்வாய் கிழமை... மகா சிவராத்திரி!

மகா சிவராத்திரி நன்னாளில், இரவு வேளையில்... சிவாலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜையில் கலந்து கொள்ளுங்கள். அப்போது, உங்களால் முடிந்த அளவு வில்வம் வாங்கிச் சென்று பூஜைக்கு சமர்ப்பியுங்கள். இன்று நாம் தரும் ஒவ்வொரு வில்வமும் மகா புண்ணியம் தரவல்லவை!

அவனொரு வேடன். கொடிய மிருகங்களை வேட்டையாடுவதே அவன் தொழில். ஒருநாள்... வேட்டையில் எதுவும் சிக்கவில்லை. இருள் கவியத் துவங்கியது. இருட்டத் தொடங்கி பல மணி நேரங்களான பின்னும் கூட, வேட்டைக்கு முயற்சித்துக் கொண்டே இருந்தான். ஆனால் எதுவும் தேறியபாடில்லை.

நொந்து போனான். ஏதேனும் வேட்டையாடி எடுத்துச் சென்றால்தான் குடும்பத்தார் பசியாற முடியும். இப்போது அவனே கடும் பசியில் இருந்தான். ஏற்கெனவே காலையில் உணவில்லை. காலையும் மதியமும் இதோ... இரவும் வந்துவிட்டது. உணவேதும் இல்லை.

அந்தக் காட்டை, இருட்டு அதன் ஆளுகைக்குக் கொண்டு வந்தது. அவ்வளவுதான்... இனி சுற்ற முடியாது. மிருகங்கள் எங்கேனும் இருந்து பறந்து வரும். பாய்ந்துவரும். அடித்து வீழ்த்தும். கொன்றுச் சாப்பிடும். ஆகவே அங்கே இருந்த மரத்தின் மீது ஏறிக் கொண்டான். கிளையின் மீது உட்கார்ந்து கொண்டான்.

இடுப்பில் கட்டி தொங்கவிட்டிருந்த தண்ணீர்க்குடுவையைத் தொட்டுப் பார்த்தான். இந்த குடிநீர்தான் நமக்கு உணவு என்று நினைத்துக் கொண்டான். பசிக்கும் போதெல்லாம் தண்ணீரைக் குடித்தான். தூக்கம் வந்தால், மரத்தில் இருந்து விழுந்துவிடுவோம். விழுந்தால், கைகால் முறிந்துவிடும். மிருகமும் தின்னத் துடிக்கும். கொல்லப்பாயும். அப்போது நம்மால் ஓடவும் முடியாது. மாட்டிக் கொள்வோம். ஆகவே, தூங்காமல் இருக்க, அந்த மரத்தில் இருந்த இலைகளை ஒவ்வொன்றாகப் பிய்த்து, கீழே போட்டுக் கொண்டே இருந்தான்.

அவன் தண்ணீர் குடிக்கும் போது, அவனையும் அறியாமல்., கொஞ்சம் கீழே சிந்தத்தான் செய்தது. ஆக... தண்ணீர் சிந்துவதும் இலையைப் பிய்த்துப் போடுவதுமாகவே விடிய விடிய இருந்தான்.

விடிந்தது. நாலாபுறமும் பார்த்தான். மரத்தில் இருந்து மெல்ல கீழிறங்கினான். அட... என்று ஆச்சரியப்பட்டுப் போனான். மரத்தடியில் சிவலிங்கம் ஒன்று இருந்தது. இருட்டில்... மரம் ஏறும் சமயத்தில் தெரியவில்லையே... என்று நினைத்துக் கொண்டான். அங்கே இன்னொன்றும் நிகழ்ந்திருந்தது. அதாவது மரத்தின் இலைகளைக் கீழே போட்டான் அல்லவா. அது இந்த சிவலிங்கத்தின் மீது விழுந்துகொண்டே இருந்தது. அந்த இலைகள்... சாதாரண இலைகள் அல்ல. சிவனாருக்கு உகந்த வில்வ இலைகள்! சிவலிங்கம் முழுவதும் வில்வ இலைகள் நிறைந்திருந்தன!

அதுமட்டுமா? அவன் குடிக்கும் போது வழிந்த தண்ணீரானது., ஓர் அபிஷேகம் போல லிங்கத்தின் மீது விழுந்திருந்தது. அவ்வளவுதான்.. அவன் பாட்டுக்கு ஒரு கும்பிடு போட்டான். போய்க்கொண்டே இருந்தான்.

தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் பாவம் பாவம்தான். புண்ணியம் புண்ணியம்தான், இல்லையா?

அவன் காலையில் இருந்தே சாப்பிடவில்லை. இரவெல்லாம் தூங்கவில்லை. தண்ணீரால் அபிஷேகம் நிகழ்த்தியிருக்க, வில்வத்தால் அர்ச்சிக்க.. இவையனைத்தும் நிகழ்ந்தது ஓர் மகாசிவராத்திரி நன்னாளில் என்கிறது புராணம்! இதன் எதிரொலி... இன்னொரு பிறவி கிடைத்தது வேடனுக்கு. அதுவும் எப்படி... ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு உற்ற தோழனாகிற பாக்கியம் கிடைத்தது அவனுக்கு! ஆமாம்... குகன் தான் அவன். ராமபிரானுக்கு சேவை செய்யும் பாக்கியம் கிடைத்தது. இவனின் மாண்பையும் பண்பையும் புரிந்து கொண்ட ராமர், இவனோடு ஐவரானோம் என்றார். அவன்... குகன்!

தன்னை அறியாமல் கடைபிடித்த எளிய விரதத்துக்கே குகனுக்கு இந்த அளவு பெரிய பலன் கிடைத்தது என்றால்... இவ்வளவு சிறப்பு மிக்க விரதத்தை சிரத்தையாக அனுஷ்டித்தால்...? யோசியுங்கள்.

குரங்கு ஒன்று மரத்தில் இருந்தபடி, வில்வ இலைகளை விளையாட்டாகப் பறித்துப் போட்டது. அந்த இலைகள், மரத்தடியில் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தது. இதனால் குரங்கு சாப விமோசனம் பெற்று, குரங்கு முகமும் மனித உடலும் கொண்ட முசுகுந்த சக்கரவர்த்தியாகும் வரத்தைத் தந்தருளினார் சிவனார் என்றும் புராணத்தில் கதை உண்டு!

நாளைய மகா சிவராத்திரி நன்னாளில், உங்களுக்கு என்னவெல்லாமோ கொடுக்கக் காத்திருக்கிறார் ஈசன். முடிந்த அளவுக்கு... வில்வம் கொடுங்கள். வினைகள் யாவும் தீரும். புண்ணியங்கள் பெருகும். பூரிப்புடனும் புளகாங்கிதத்துடனும் வாழ்வீர்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x