Published : 09 Jan 2018 12:04 PM
Last Updated : 09 Jan 2018 12:04 PM
ஐயப்ப பக்தர்களே... உங்களுக்காக..!
கண்கண்ட தெய்வமாம் சபரிகிரி வாசனைத் தரிசிக்க, லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டிக் கொண்டு கிளம்பிய வண்ணம் இருக்கிறார்கள். நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மகர ஜோதி நன்னாள் நெருங்க நெருங்க, இன்னும் பெருகிக் கொண்டே இருக்கிறார்கள் பக்தர்கள். பொங்கலுக்கு முன்னதாக இருமுடி கட்டிக் கொண்டு, பொங்கலின் போது அந்த ஜோதியையும் ஜோதிரூபனையும் தரிசிக்க ஆவல் கொண்டு கிளம்பத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள், பக்தர் பெருமக்கள்!
எருமேலி எனும் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில்தான் நடக்கிறது பேட்டைத்துள்ளல் எனும் வைபவம். மகிஷி எனும் அரக்கியை வதம் செய்து அழித்த மணிகண்டனை, பக்தர்களாகிய நாமெல்லாரும் கொண்டாடுவதாக ஐதீகம்!
மாலையணிந்த பக்தர்கள், கருப்பு மற்றும் வேறு நிறங்களில் ஆடையணிந்து வரும் பக்தர்கள், முகங்களில் வண்ணவண்ணப் பொடிகளைப் பூசிக்கொண்டு, பம்பை, உருமி முதலான அதிகச் சப்தம் எழுப்பக்கூடிய வாத்தியக் கருவிகளை இசைத்தபடி, ‘சுவாமி திந்தக்க தோம்... ஐயப்பா திந்தக்க தோம்’ என்று கோஷங்கள் இட்டபடி, பாடியபடி ஆடிக்கொண்டே ஐயப்பனைத் துதிக்கும் ஐயப்ப சுவாமியைப் போற்றும் உயிர்ப்பான நிகழ்ச்சி இது.
இங்கே ஒரு விஷயம்... ‘சுவாமி திந்தகத்தோம்...’ என்பது தவறு. ‘ஐயப்ப திந்தகத் தோம்’ என்பது சரியல்ல. ஆனால் அப்படித்தான் பாடுகிறார்கள். ஆடுகிறார்கள். அப்படியென்றால் என்ன சொல்லிப் பாடவேண்டும்?
எப்படிப் பாட வேண்டும் என்பது முக்கியம் அல்ல. என்ன சொல்லி அந்தக் காலத்தில் பாடிக் கொண்டிருந்தார்கள். அதுவே முக்கியம். அதாவது, ‘சுவாமி என்டகத்தும்... ஐயப்பா உண்டகத்தும்...’ என்றுதான் அந்தக் காலத்தில் பாடிவந்தார்கள். அதாவது, சுவாமி என் அகத்தினுள் இருக்கிறார். சுவாமி உன் அகத்திற்குள்ளேயும் இருக்கிறார். ஆக., சுவாமி என்பவர், பகவான் என்பவர், கடவுள் என்பவர், ஐயப்பன் என்றும் மணிகண்டன் என்றும் போற்றப்படுபவர்... என்னுள்ளும் இருக்கிறார்; உன்னுள்ளும் இருக்கிறார் என்று சொல்லிப் பாடி வந்தார்கள். இதுவே பின்னாளில் சுவாமி திந்தகத் தோம் என்றாகிவிட்டது.
பேட்டைத் துள்ளல் என்பது ஐயப்ப சுவாமி ஆடிய ஆட்டம். மகிஷியைக் கொன்ற பிறகு ஆடிய ஆட்டம். இதையே நாம் ஐயப்ப வழிபாடாக இன்றைக்குப் பின்பற்றி வருகிறோம்.
இந்தப் பேட்டைத் துள்ளல் வைபவத்தில், எல்லா சாமிகளும் ஆடுவார்கள். குறிப்பாக கன்னிசாமி என்பவர் நிச்சயமாக ஆடுவார். ஆடவேண்டும். முதன்முறையாக மலைக்கு வருபவர், கன்னிசாமி என்றழைக்கப்படுகிறார். இந்தக் கன்னிசாமிகள் ஆடி முடித்ததும் அவர் கையில், சரக்கோலும் கருப்பு நாடாவும் தருவது வழக்கம்.
எதற்கு? ஏன்?
கன்னிசாமி முதன்முறையாக, சபரிமலைக்கு வந்திருக்கிறார் அல்லவா. வந்திருக்கும் கூட்டத்தில் கன்னிசாமி யார் என்று தெரியவேண்டாமா? யாருக்குத் தெரியவேண்டும்? மஞ்சள்மாதாவுக்குத்தான்! அவளுக்குத் தெரியவேண்டுமே! மஞ்சள்மாதாவுக்கும் மணிகண்ட சுவாமிக்கும் அதுதானே புரிந்துணர்வு ஒப்பந்தம். என்னைத் தரிசிக்க எந்த வருடமேனும் கன்னிசாமி வரவில்லையென்றால், உன்னை மணந்து கொள்கிறேன் என்று தர்மசாஸ்தா, மஞ்சள்மாதாவிடம் சொல்லியிருக்கிறார்தானே! ஆக, வருடந்தோறும் கன்னிசாமிகள் அதிக அளவில், மிக அதிக அளவில், மிக மிக அதிக அளவில் வந்துகொண்டிருக்கிறார், அல்லவா! இதை மஞ்சள்மாதாவுக்குத் தெரியப்படுத்துகிற விதமாக, சரக்கோலுடனும் கருப்பு நாடாவுடன் வருகிறார்கள், கன்னிசாமிகள்!
கையில் உள்ள சரக்கோலை, சரங்குத்தி எனும் இடத்தில் உள்ள ஆலமரத்தில் குத்திவிட்டுச் செல்வார்கள். அப்படியே கருப்புநாடாவை, மரத்தடியில் விட்டுச் செல்வார்கள். அங்கே மஞ்சள்மாதா வந்து பார்ப்பாளாம். சரங்குத்திகளையும் கருப்புநாடாப்பட்டைகளையும் பார்த்துவிட்டு, கன்னிசாமிகள் இந்த வருடமும் வந்திருக்கிறார்கள் என அறிந்து கொண்டு, ஏக்கத்துடன் திரும்பிச் செல்வாளாம்!
பேட்டைதுள்ளல் நிகழ்ச்சியை நிறைவு செய்யும் நாளும் உண்டு. மகரஜோதி தரிசனத்துக்கு முதல்நாள் அல்லது அதேநாளில், ஆலங்கட்டுக்காரர்கள் என்பவர்களும் அம்பலப்புழாக்காரர்கள் என்பவர்களும் பேட்டைத்துள்ளி ஆடுவார்கள். அவர்கள் பரம்பரை பரம்பரையாக அந்தக் காலம் தொட்டே ஆடிக் கொண்டிருப்பவர்கள். அவர்களின் ஆட்டத்துடன் பேட்டைதுள்ளல் நிகழ்ச்சி நிறைவு பெறும். இதன் பிறகு அப்போதெல்லாம் பக்தர்கள் வருவதில்லை. இப்போது பக்தர்கள் வந்தாலும், பேட்டைத்துள்ளமாட்டார்கள்.
அதன்பிறகு, பேரூர்த்தோடு, கோட்டப்படி என ஒவ்வொரு இடங்களும் ஐயப்ப சாந்நித்தியம் நிறைந்திருக்கும் இடங்கள்தான். இதன் பிறகுதான் வருகிறது காளைகட்டி! அதென்ன காளைகட்டி?
அதாவது, மகிஷியுடன் மணிகண்டன் போர் தொடுத்தார் அல்லவா. தன் மைந்தன் போர் தொடுப்பதைப் பார்க்க விரும்பிய சிவனார், தன் வாகனமான ரிஷபத்தில் ஏறி இங்கே வந்தாராம். அப்போது, காளையை ஓரிடத்தில் கட்டினார். அந்த இடம்... காளைகட்டி என்று அழைக்கப்படுகிறது. அவ்வளவும் மகத்துவமும் மகோன்னதமும் கொண்ட இடமாகத் திகழ்கிறது, காளைகட்டி!
இதன் பிறகு அழுதாமலை. ‘இந்த மலையில் ஏறும்போது பக்தர்கள் எல்லோருமே அழுதேவிடுவார்கள். அவ்வளவு கடினமான ஏற்றம் இது என்பார்கள் பக்தர்கள்.
வாழ்க்கையில், எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும், எத்தனை பெரிய குற்றச் செயல்கள் செய்பவனாக இருந்தாலும், ஒருகட்டத்தில்... தன் தவறை உணர்ந்து கொள்ள ஓர் சந்தர்ப்பம் வரும் என்பது இயல்புதானே! நம்மூரில் கூட, ‘சாகப் போற சமயத்துல, சங்கரா சங்கரான்னு சொல்றாம்பா’ என்பார்கள். மகிஷி எனும் கொடிய அரக்கக் குணம் கொண்டவளும் தன் ஆயுளின் கடைசி நேரத்தில், ’செய்தது தவறோ...’ என்று நினைத்தாளாம். ஒருகட்டத்தில் தவறை உணர்ந்தவள், அழுதே விட்டாளாம்! அவளின் அந்த அழுகை, கண்ணீரெனப் பெருக்கெடுத்தது. ஆறாக ஓடியதாம். அதுவே இங்கே இருக்கும் ஆறு என்கிறது ஸ்தல புராணம்! அதனால்தான் இந்த மலை அழுதா மலை என்றும் இங்கே ஓடும் ஆறு, அழுதா நதி என்றும் சொல்லப்படுகிறது.
கன்னிசாமிகள், அழுதா நதியில் குளிப்பது சம்பிரதாயம். அப்படிக் குளிக்கும் போது அங்கிருந்து கல் ஒன்றை எடுத்துக் கொள்வார்கள். அந்தக் கல்லை ஓரிடத்தில் போடுவார்கள். அந்த இடம்தான்... கல்லிடும் குன்று. அதாவது, மகிஷி அரக்கியைக் கொன்று விட்டு, அவளின் மலை போன்ற உடலை, கல் மலையாக்குவதற்காக கல் கல்லாக எடுத்துப் போட்டார் அல்லவா மணிகண்டன். பக்தர்களும் அதேபோல் கல்லைப் போடும் சடங்குதான்... கல்லிடும் குன்றில் நடக்கிறது என்கிறார்கள்.
கல்லிடும் குன்றுக்கு அடுத்து, மலையுச்சியை நோக்கிய பயணம். கிழக்கு நோக்கிய பயணம். கிழக்கு என்றால் விடியல். நமக்கெல்லாம் விடிவுகாலத்தைத் தரக்கூடிய தர்மசாஸ்தா அங்கேதான் மலையுச்சியில்தான் அந்த சபரிபீடத்தில்தான் வீற்றிருக்கிறார். அப்போது, அந்தப் பயணத்தில் வரும் இடம்... உடும்பாறைக் கோட்டை. இந்தக் கோட்டைக்குத் தலைவன்... பூதநாதர். சபரிமலையின் காப்பாளர்களில், காவலர்களில் ஒருவர். பூதநாதருக்கு பூஜைகள் செய்து வழிபடுவார்கள் பக்தர்கள். இங்கே விபூதி ரொம்பவே விசேஷம். இதை ஆதிவிபூதி என்பார்கள். அதாவது, அடுப்பு எரித்த சாம்பலைக் கொண்டு விபூதி தயார் செய்து எடுத்துக் கொள்வார்கள். இந்த விபூதியை இட்டுக் கொண்டால், எதிரிகள் பயம் இல்லை. எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். தீயசக்திகள் அண்டாது. தீய குணங்களும் துர்சிந்தனைகளும் எழாது என்பது ஐதீகம்!
இனிய பக்தர்களே. அன்பினிய ஐயப்ப சாமிகளே! சபரிமலையின் ஒவ்வொரு இடமும்... விசேஷ ஸ்தலங்கள். அந்த ஐயப்பன் மணிகண்டனாக வாழ்ந்ததற்கான அடையாளங்கள். இங்கே செய்கிற ஒவ்வொரு சடங்குகளும் சாங்கியங்களும் ஐயப்ப சுவாமி, புலிப்பால் கொண்டு வர வேட்டைக்கு வந்தபோது செய்தவை. மகிஷி எனும் அரக்கியை அழிப்பதற்காக வரும் போது நடத்தியவை. எனவே, ஐயப்பனின் பேரருள் கிடைக்கவில்லையெனில், இந்த சடங்குகளும் சாங்கியங்களும் ரொம்பவே முக்கியம்.
இருமுடியை சிரசில் வைத்துக் கொண்டு, ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா எனும் கோஷத்துடன் கிளம்புகிற ஒவ்வொரு ஐயப்ப பக்தர்களையும் கவனித்துக் கொண்டே இருக்கிறார் ஐயன் ஐயப்ப சுவாமி! ஆகவே பக்திசிரத்தையுடன், ஆத்மார்த்தமாக, ஒவ்வொரு செயலையும் செய்து, சபரிபீடத்தை நோக்கி நெருங்குங்கள்!
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!
-ஐயன் வருவான்
தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT