Published : 03 Dec 2017 10:49 AM
Last Updated : 03 Dec 2017 10:49 AM
ஐயப்பனின் பதினெட்டுப் படிகள், மிக மிக முக்கியத்துவம் கொண்டவை. சபரிமலை சந்நிதானத்தின் பதினெட்டுப் படிகள் உணர்த்துகிற விஷயங்கள் ஏராளம். ஐயப்ப சுவாமி, வில், வாள், வேல், கதை, பாசம், அங்குசம், பாசு, பரிசை, பிந்திபாவம், குந்தகம், ஈட்டி, கைவாள், சுக்குமாந்தடி, கடுத்திவை, சக்கரம், ஹலம், மழுக், முஸல என்கிற தன்னுடைய போர்க்கருவிகளைக் கொண்டு, பதினெட்டுப் படிகளை உருவாக்கியதாகக் கூறுகிறது புராணம்.
சபரிமலையைச் சுற்றி, பதினெட்டு மலைதெய்வங்கள் இருக்கின்றன. பதினெட்டு மலைகள் இருக்கின்றன. இந்த பதினெட்டு மலைகளையும் பதினெட்டு தெய்வங்களையும் குறிப்பதாக பதினெட்டுப் படிகள் இருப்பதாகவும் பதினெட்டு தெய்வங்களும் பதினெட்டுப் படிகளாக இருக்கிறார்கள் என்றும் சாஸ்தா புராணத்தில், சபரிமலை தலம் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது.
பொதுவாகவே, பதினெட்டு மொழிகள், பதினெட்டு ராகங்கள், பதினெட்டு சித்தர்கள், பகவத் கீதையின் பதினெட்டு அத்தியாயங்கள், மகாபாரத யுத்தம் நிகழ்ந்த பதினெட்டு நாட்கள் என பதினெட்டுக்கு சிறப்புகளும் பெருமைகளும் பல உள்ளன. பெருமையும் சாந்நித்தியமும் மிக்க பதினெட்டுப் படிகளிலும் பதினெட்டு திருநாமங்களுடன் ஐயப்ப சுவாமி அமர்ந்து, ஆட்சி செய்வதாக ஐதீகம் என்கிறார் உபந்யாசகர் அரவிந்த் சுப்ரமண்யம்.
அதாவது, முதலாம் திருப்படியில் குளத்துப்புழை பாலகனாக கொலுவிருக்கிறான் ஐயப்பன். இரண்டாம் திருப்படியில், ஆரியங்காவு ஐயப்பனாக அமர்ந்திருக்கிறான். மூன்றாம் திருப்படியில், எரிமேலி சாஸ்தாவாகவும் நான்காம் திருப்படியில் அச்சங்கோயில் அரசனாகவும் ஐந்தாம் திருப்படியில், ஐந்துமலை அதிபதியாகவும் அமர்ந்திருக்கிறான் ஐயப்பன். ஆறாம் திருப்படியில், வீரமணிகண்டனாகவும், ஏழாம் திருப்படியில் பொன்னம்பல ஜோதியாகவும் எட்டாம் திருப்படியில் மோகினிபாலகனாகவும் ஒன்பதாம் திருப்படியில் சிவபாலனாகவும் பத்தாம் திருப்படியில் ஆனந்தமயனாகவும் திகழ்கிறான் சாஸ்தா.
பதினோராம் திருப்படியில் இருமுடிப்பிரியனாகவும், பனிரெண்டாம் திருப்படியில் பந்தள தேசத்து ராஜகுமாரனாகவும், பதிமூன்றாம் திருப்படியில் பம்பாவாசனாகவும், பதினான்காம் திருப்படியில் வன்புலி வாகனனாகவும் பதினைந்தாம் திருப்படியில் ஹரிஹரசுதனாகவும் சூட்சும ரூபமாய் இருக்கிறான் சபரிகிரிவாசன். பதினாறாம் திருப்படியில் குருநாதனாகவும் பதினேழாம் திருப்படியில் சபரிகிரிவாசனாகவும் பதினெட்டாம் திருப்படியில் ஐயப்ப சுவாமியாகவும் இருந்து அருள்பாலிக்கிறான்.
இத்தனைப் பெருமைகள் கொண்ட பதினெட்டுப் படிகளில் ஏறும்போது, பதினெட்டுப் படிகளைக் கடக்கும் போது, ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் மிகுந்த பக்தியுடனும் ஐயப்பனை நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பிரார்த்தனைகளை, வேண்டுதல்களை அங்கிருந்தே முறையிடத் தொடங்குங்கள். உங்கள் வாழ்வில் ஒளியேற்றித் தருவான் ஐயப்ப சுவாமி.
சாமி அண்ணா காலத்தில், முன்னாள் மேல்சாந்தியின் அனுபவம் இது.
இளம் வயதில் இருந்தே சபரிமலையின் கீழ்சாந்தியாகப் பணிபுரிந்தவருக்கு, போதிய வருமானமில்லை என்பது பெருங்குறையாகவே இருந்தது. குடும்பச் சூழ்நிலை நெட்டித் தள்ளியது. வேறு ஏதேனும் ஆபீஸ் உத்தியோகத்துக்குப் போனால் என்ன எனும் நினைப்பு அடிக்கடி வந்துகொண்டே இருந்தது.
ஒருமுறை, கல்பாத்தி ஸ்ரீநிவாச ஐயர் என்கிற சாமி அண்ணாவிடம் தன் மனக்குறையையும் மனக்குழப்பத்தையும் சொல்லிப் புலம்பினார் அவர். ''என் குடும்பச் சூழ்நிலையால், இனிமேலும் மலைக்கு வந்து ஐயப்பனுக்கு கைங்கர்யம் பண்ணமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை'' என்று கண்ணீரும் விசும்பலுமாக வருந்தினார்.
இரண்டு நிமிடங்கள் மௌனமாக இருந்த சாமி அண்ணா, அவரைப் பார்த்து, ''அதெல்லாம் வேணாம். உன் சேவையை ஐயப்பனுக்குத் தொடர்ந்து பண்ணிக்கிட்டே இரு. உன் தேவையை ஐயப்பன் சரிபண்ணுவான். உன் பிரச்சினையெல்லாம் தீரும். நிச்சயம் மேல்சாந்தியா வருவே. இதையெல்லாம் பாக்க நான் இருக்கமாட்டேன். ஆனா நடந்தே தீரும். ஐயப்பனை நம்பு'' என்று உறுதிபடச் சொன்னார்.
பின்னாளில், பல வருடங்கள் கழித்து அந்த மேல்சாந்தி, ''சாமி அண்ணா எங்கிட்ட சொன்னப்ப, ஏதோ சமாதானப்படுத்தச் சொல்றார்னுதான் நெனைச்சேன். அவர் வார்த்தைல இருந்த அன்பும் கரிசனமும் என்னை சமாதானப்படுத்துச்சு. கூடவே ஐயப்ப சுவாமி மேல இருந்த பக்தியும் நம்பிக்கையும் இன்னும் அதிகமாச்சு. சாமி அண்ணா சொன்ன எல்லா வார்த்தைகளும், வாழ்க்கைல ஒவ்வொண்ணா நடந்துச்சு'' என்று மெய்சிலிர்க்க விவரித்தார்.
''இவ்வளவு மகத்துவம் கொண்டவராக இருந்தும் சாமி அண்ணா, பணிவுடனும் கனிவுடனும் எப்போதும் எல்லோரிடமும் நடந்துகொண்டார். அவரது கொள்ளுப்பேரனாகப் பிறந்தது நான் செய்த புண்ணியம். என் சிறுவயதில், அவர் எனக்கு வழங்கிய ஆசீர்வாதமும் குழந்தையாக இருந்தபோது நான் கேட்ட கேள்விகளுக்கு அவர் பொறுமையாகவும் புரியும்படியாகவும் அளித்த விளக்கங்களும் .என்னை பக்குவப்படுத்தியது என்றே சொல்லவேண்டும். என்னை ஐயப்ப பக்தனாக, சாஸ்தா குறித்த ஆய்வாளனாக, உபந்யாசகராக என்னை ஆக்கியதற்கு அவரே காரணம்'' என்று நெகிழ்ந்து சொல்கிறார் அரவிந்த் சுப்ரமண்யம்.
சாமி அண்ணாவை குருநாதராக ஏற்றுக் கொண்டு, ஐயப்பன் திருநாமத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட குருசாமிகள், பக்தர்கள் ஏராளம். தன் கொள்ளுத் தாத்தாவை குருநாதராகவே வரித்துக் கொண்ட அரவிந்த் சுப்ரமண்யம், இன்றைக்கு உலகம் முழுவதும் உபந்யாசம் செய்துகொண்டிருக்கிறார். எண்ணம், சொல், செயல் என மொத்த வாழ்க்கையும் ஐயப்பன் குறித்தே இருக்கின்றன.
இன்றைக்கு லட்சக்கணக்கான சாமிகள், சபரிமலைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். சாமி அண்ணா, புனலூர் தாத்தா, நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, நம்பியார் குருசாமி முதலான எண்ணற்றவர்கள்தான் இத்தனைக்கும் அஸ்திவாரமிட்டவர்கள். சாஸ்தாவையும் சாஸ்தாவின் பெருமைகளையும் நமக்கு உணர்த்தியவர்கள். சபரிமலைக்கு வழி காட்டியவர்கள். வழிகாட்டியாகவே வாழ்ந்துகாட்டியவர்கள்!
அத்தனை குருசாமிகளுக்கும், மாலையணிந்து, விரதம் இருக்கும் சாமிமார்கள் மனதார நமஸ்கரியுங்கள். அவர்கள் சூட்சுமமாக இருந்து உங்களையும் உங்களின் குடும்பத்தையும் உங்களின் வம்சத்தையும் ஆசீர்வதித்து, வழிநடத்துவார்கள் என்பது உறுதி!
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!
-ஐயன் வருவான்
தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT